நியூஸிலாந்தில் நடைபெறும் 2022 மகளிர் கிரிக்கெட் ஐசிசி உலகக்கோப்பையை வென்றவுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று இந்திய டாப் வீராங்கனை 10,000 ரன்கள் குவித்து சாதனை புரிந்த மிதாலி ராஜ் நியூஸ் 18 கிரிக்கெட் நெக்ஸ்ட் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இப்போது மிதாலி ராஜ் 230 சர்வதேசப் போட்டிகளில் 10,125 ரன்களைக் குவித்துள்ளார் மிதாலி ராஜ்.
38 வயதானாலும் ஓயாது கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்து வரும் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் இந்த வயதிலும் லக்னோவிலிருந்து ராஜ்கோட் என்று ஒரு கொரோனா பாதுகாப்பு வளையத்திலிருந்து இன்னொரு பாதுகாப்பு வளையம் என்று அயராமல் மாறிவருகிறார். அதோடு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவி வகித்த பிறகு இப்போது 38 வயதிலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
வணிக நலன்கள் தலைதூக்க இன்றைய ஆடவர் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் தொடரை விடுத்து பணமழை டி20 தொடருக்கு முன்னுரிமை வழங்கி வரும் காலத்தில் இப்படி ஒரு இந்திய வீராங்கனை இருப்பது ஆச்சரியமே. ஆடவர் கிரிக்கெட்டில் எடுத்துக் கொண்டால் டி20 பணமழை கிரிக்கெட்டில் தன்னை நீண்ட காலம் தக்கவைப்பதற்காக கிரிக்கெட்டின் சாராம்சமான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தொடரில் 2014-ல் மகேந்திர சிங் தோனி பாதியிலேயே ஓய்வு அறிவித்தார். ஆனால் இன்றும் ஐபிஎல் ஆடுகிறார். மலிங்கா இலங்கை அணியை உதறி ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் அளித்தார், ஏ.பி.டிவில்லியர்ஸ் எல்லாம் அப்படித்ட்தான். ஷாகிப் அல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட்டை விடுத்து, வங்கதேச அணிக்கு ஆடுவதை விடுத்து தாய்நாட்டுக்கு ஆடுவதை விடுத்து ஐபிஎல்-க்கு முன்னுரிமை அளிக்கிறார். மாறாக கிறிஸ் கெய்ல் இன்னும் கூட மே.இ.தீவுகள் அழைத்தால் அதற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார். தோனி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடியதே இல்லை. இவர் நினைத்தால் திடீரென ஆடுவார் அவ்வளவுதான்.
இப்படியிருக்கையில் இந்திய அணிக்காக உழைத்து ஆடி, இன்று 2022 உலகக்கோப்பைக்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளவும் இன்னொரு அணியை உருவாக்கவும் அர்ப்பணித்துள்ளார் மிதாலி ராஜ்.
அவர் நியூஸ்18 கிரிக்கெட் நெக்ஸ்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் ரிலாக்ஸ் ஆகும் பேச்சுக்கே இடமில்லை, கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே என் குறிக்கோள். நான் அடுத்த இந்திய அணியைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. எனவே நான் ஓய்வு பெறும்போது ஒரு திடமான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை உருவாக்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்பதே என் குறிக்கோள். நான் இன்னும் ஓராண்டு விளையாடுவேன்.
நியூஸிலாந்தில் நடைபெறும் 2022 மகளிர் ஐசிசி உலகக்கோப்பை தொடர்தான் இந்தியாவுக்காக நான் ஆடும் கடைசி தொடர். கோப்பையை வென்ற பிறகே ஓய்வு.
நேர்காணலிலிருந்து சில துளிகள்...
சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய 2வது வீராங்கனை எப்படி உணர்கிறீர்கள்?
மிதாலி: அருமையான ஒரு உணர்வு. மிக நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறேன். 1990-ம் ஆண்டுகள் முதல் நான் மகளிர் கிரிக்கெட் பரிணாம வளர்ச்சியடைந்து வருவதை பார்த்து வருகிறேன். இப்போது ஆடுவதை பெருமையாகக் கருதுகிறேன். இது சுலபம் கிடையாது, நிறைய வியர்வை, உழைப்பு, குழப்பங்கள் நிறைந்தது. ரன்கள் ஸ்கோர் செய்வது என்றால் எனக்கு எப்பவும் மகிழ்ச்சிதான். இந்தியா சீருடையை அணிவதைப் போன்ற வேறு சிறப்பு கிடையாது. என்னுடைய திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப நாட்டுக்கு ஆற்றும் சேவையாகவே இதனைக் கருதுகிறேன்.
2017-ல் ரன்னர்கள், 2022 உலகக்கோப்பையை எப்படி எதிர்நோக்குகிறீர்கள்?
இப்போதிலிருந்தே என்ன திட்டமிடுகிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு அமையும். இந்த ஆண்டு சில தொடர்கள் உள்ளன. அணியை ஒருங்கிணைக்க வேண்டும். வீராங்கனைகள் வீட்டுக்கு போன பிறகு தொடருக்கு 4-5 நாட்கள் முன்னதாக மீண்டும் அழைப்பது சரியாக இருக்காது. முகாம் இருக்க வேண்டும், வீராங்கனைகள் ஒன்றாக இருக்க வேண்டும்.
தனிமைப்படுத்தல், பயோ-பபுள் போன்ற காலக்கட்டங்களில் வீரர்கள் ஒருங்கிணைக்க படவேண்டும். சூழலை உருவாக்க வேண்டும், அதை உருவாக்கி விட்டால் நம்பிக்கையை உருவாக்கி விடுவோம். மேட்ச்கள் தவிர, முகாம்கள் அவசியம். வீராங்கனைகளை அடையாளம் கண்டு ரெகுலராக அவர்கள் இணைந்து ஆடும் சூழ்நிலையை உருவாக்குவது அவசியம். எனவே இப்படிச் செய்தால் நாம் உலகக்கோப்பைக்கு நல்ல தயாரிப்பில் இருப்போம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC Women’s World T20, Indian women cricket, Mithali Raj