சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விரைவில் ஓய்வுபெறுவார் என்று இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியில் கடந்த 2004-ம் ஆண்டு இறுதியில் இணைந்த அவர், கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணிக்கு ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பையை பெற்றுத் தந்தார்.
இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து கடந்த 2014-ம் ஆண்டில் ஓய்வுபெற்றார். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதன்பின் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், சிஎன்என் நியூஸ் 18-க்கு சிறப்பு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஒரு நாள் தொடரிலிருந்து தோனி விரைவில் ஓய்வுபெறுவார் என்று தெரிவித்தார்.
மகேந்திர சிங் தோனியுடன் நான் ஆலோசனை நடத்தினேன். குறிப்பிட்ட காலத்துக்கு அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் இடைவிடாது கலந்துகொண்டார் என்பது நமக்கு தெரியும். சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்றார். ஒரு நாள் தொடரிலிருந்தும் விரைவில் ஓய்வுபெறுவார். ஐபிஎல் போட்டியில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து, 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து தோனியே முடிவு செய்வார் என்றும் ரவி சாஸ்திரி கூறினார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 90 போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, 4 ஆயிரத்து 876 ரன்களை குவித்துள்ளார். இதுவரை 350 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 10 ஆயிரத்து 773 ரன்களைக் குவித்துள்ளார்.
இதேபோல, 98 டி20 போட்டிகளில் பங்கேற்று ஆயிரத்து 617 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெறுவார் என்ற செய்தி, ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.