இங்கிலாந்து அணியின் ‘பாஸ்பால்’ஆக்ரோஷ அணுகுமுறையை தென் ஆப்பிரிக்கா கண்டுகொள்ளவே இல்லை, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை 165 ரன்களுக்குச் சுருட்டியதோடு, தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து 124 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
காலையில் ரபாடா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பிறகு ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி டீன் எல்கர் (47), சாரல் எர்வீ (73) மூலம் நல்ல தொடக்கம் கண்டு முதல் விக்கெட்டுக்காக 85 ரன்களைச் சேர்த்தனர். எல்கர் விக்கெட் ஆண்டர்சனுக்கு ஓசி விக்கெட் என்றுதான் கூற வேண்டும். லெக் திசையில் பந்தை ஆட முற்பட்டு பந்து தொடைக்காப்பில் பட்டு ஆர்ம் கார்டில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்து பவுல்டு ஆனார்.
கீகன் பீட்டர்சன் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களில் செட்டில் ஆன சமயம் பாட்ஸ் வீசிய பந்தை எட்ஜ் செய்து ஸ்லிப்பில் பேர்ஸ்டோ கையில் போய் உட்கார்ந்தது. அய்டன் மார்க்ரமும் 3 பவுண்டரிகள் விளாசி 16 ரன்களில் தன்னம்பிக்கையுடன் ஆடி வந்த போது ஆடாமல் விட வேண்டிய லீச்சின் ஸ்பின் பந்தை தொட்டார் கெட்டார். ரசீ வாண்டெர் டசன் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸிடம் எல்.பி. ஆனார்.
சாரல் எர்வீ 73 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் பென் ஃபோக்ஸ் கையில் கேட்ச் ஆனார். விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 11 ரன்களில் பிராட் பந்தில் வெளியேறினார். 210/6 என்று சரியும் நிலையில் மார்க்கோ யான்சென் (41 நாட் அவுட்), கேஷவ் மஹராஜ், 49 பந்தில் 41 என்று ஆக்ரோஷமாக ஆடி 12 ஒவர்களில் 72 ரன்களை வெளுத்துக் கட்டினர். ஸ்டோக்ஸை ஹூக் செய்ய முயன்று மகராஜ் வெளியேறினார். ஆனால் யான்சென் பவுண்டரிகளாக விளாசினார். கேகிசோ ரபாடா 3 ரன்கள் நாட் அவுட் என்று நிற்க தென் ஆப்பிரிக்கா 289/7 என்று 2ம் நாளை 124 ரன்கள் முன்னிலையுடன் முடித்துள்ளது. இங்கிலாந்தில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட், மற்றபடி ஆண்டர்சன், பிராட், லீச், பாட்ஸ் தலா 1 விக்கெட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.