ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாட இருக்கும் மழை: ஐசிசி கொண்டு வந்த புதுவிதிமுறைகள் என்ன?

டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாட இருக்கும் மழை: ஐசிசி கொண்டு வந்த புதுவிதிமுறைகள் என்ன?

டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி

டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி

மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இறுதி போட்டி குறித்து பல்வேறு விதிமுறைகளை ஐசிசி கொண்டு வந்துள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  8வது டி20 உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் மழை குறுக்கிட்டால் ஐசிசி வகுத்துள்ள விதிமுறைகள் என்ன என்பது குறித்து பார்ப்போம். 

  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. மெல்போர்னில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளனர்.

  2009ம் ஆண்டு பாகிஸ்தானும், 2010ம் ஆண்டு இங்கிலாந்தும் சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே ருசித்துள்ளன. அதே போல் 2007-ல் பாகிஸ்தானும், 2016-ல் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளன. இறுதியாட்டத்தில் வெற்றி தோல்வியை சமவிகிதத்தில் அனுபவித்துள்ள இந்த இரண்டு அணிகள் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மல்லுகட்டவுள்ளனர். 50 ஓவர் உலகக் கோப்பையை கைவசம் வைத்துள்ள இங்கிலாந்து அணி, டி 20 உலகக் கோப்பையும் வென்று ஒரே நேரத்தில் இரண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது.

  கடந்த 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இதேபோல் இறுதி போட்டி மெல்போர்னில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடதக்கது.

  இந்த நிலையில் அதேபோல் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் அதே மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் -இங்கிலாந்து அணி மோதவுள்ளதால் ரசிகர்கள் இந்த போட்டியை ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளனர். டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரண்டு முறையும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இதுவரை 28 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள இரு அணிகளும் இங்கிலாந்து அணி 18 முறையும் பாகிஸ்தான் அணி 9 முறையும் ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

  இதையும் படிங்க: ஐசிசி-யின் அதிகாரமிக்க பதவிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நியமனம்

  இரு அணிகளும் சம் பலத்துடன் களமிறங்கவுள்ளதால் இறுதி போட்டிக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பாகிஸ்தான் அணியில் வலுவான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இந்த தொடர் முழுவதும் மோசமான பார்மில் இருந்த அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் அரைசதம் அடித்து பார்மிக்கு திரும்பியுள்ளார். ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான் உள்ளிட்ட வீரர்கள் நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணி டாஸ் வென்றால் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் பந்துவீச்சில் முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப் உள்ளிட்டோர் சிறப்பாக பந்துவீசி வருவதால் பாகிஸ்தான் அணி பந்துவீச்சிலும் சோதப்ப வாய்ப்பு குறைவாக இருக்கும்.

  இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆட்டத்தின் போக்கை மாற்றும் வீரர்கள் குவிந்து இருக்கிறார்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்டோர் இந்தியாவுடன் அரையிறுதி போட்டியில் நல்ல சிறப்பாக ஆட்டத்தை வெளிப்பதியதால் அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையாக இருக்கிறது.

  அது மட்டும் இல்லாமல் காயம் காரணமாக டேவிட் மலானுக்கு பதிலாக பில் சால்ட் அணியும் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

  பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, ஹாரி புரூக், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்ட தலைசிறந்த டி20 ஆல்ரவுண்டர்கள் அணியில் குவிந்து கிடப்பதால் இங்கிலாந்து அணி சற்று பாசிடிவ் வைப்பில் களமிறங்கிறார்கள்.

  இதையும் படிங்க: தோனியால் முடிந்தது ஏன் மற்ற கேப்டன்களால் முடியவில்லை ? வியாபார நோக்கத்துடன் செயல்படுகிறதா பிசிசிஐ?

  இந்த நிலையில் இறுதி போட்டியில் வானிலை பெரும் பிரச்னையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. மெல்போர்னில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது. மழையால் இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் டே வசதியை ஐசிசி அறிவித்துள்ளது.

  அதாவது ஞாயிறு நடக்கும் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் திங்கட்கிழமை போட்டி நடத்தப்படும். அப்போழுதும் மழை காரணமாக ஆட்டம் நடத்த முடியாத நிலை உருவானால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும்.

  ஞாயிற்றுக்கிழமை மழையால் ஓவர் குறைத்து ஆட்டம் தொடங்குவதாக அறிவித்த பிறகு, அந்த நாளில் ஆட்டம் நடக்கவில்லை என்றால் மாற்று நாளில் முழுமையாக 20 ஓவர் கொண்டதாக போட்டி நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் தொடங்கி குறிப்பிட்ட நேரத்துக்குள் முடியாமல் போனால் மறுநாளில் அந்த போட்டி முந்தைய நாள் நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: உலகக்கோப்பை தோல்வி : ராகுல், ரோகித்துடன் பிசிசிஐ ஆலோசனை நடத்துகிறது?

  இந்த நிலையில் மேலும் சில விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

  1. ஞாயிற்றுக்கிழமை 30 நிமிடங்கள் கூடுதல் வழங்கப்படும். ஒருவேளை போட்டி அதற்குள் முடிவடையவில்லை என்றால், திங்கட்கிழமை நான்கு மணி நேரம் வழங்கப்படும்.

  2. போட்டி டை ஆனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும். மழையால் நடத்த முடியாமல் போனால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.

  3. ஐ.சி.சி. விதிப்படி குறைந்த அளவு ஓவர்கள் கூட வீச முடியவில்லை என்றால் போட்டி ரிசர்வ் டே-க்கு மாற்றப்படும்.

  4. 10 ஓவர்கள் கட்டாயம் நடத்தப்படும். இருந்தாலும் அதற்கும் குறைந்த ஓவர்களில் போட்டியை நடத்த முயற்சி செய்யப்படும்.

  5. இதற்கு முன் கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டது. தற்போது தேவைப்பட்டால் நான்கு மணி வழங்கப்படும்

  மெல்போர்னில் 90 விழுக்காடு மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் திங்கள்கிழமை ரிசர்வ் டே வரைக்கும் போட்டி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. யார் வெற்றி பெற்றாலும் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுகிறார்களா அல்லது மழையால் கோப்பையை பகிர்ந்து கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்தே பார்போம்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: England, ICC, Melbourne, Pakistan cricket, T20 World Cup