இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸில் தொடங்கியது, நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் என்று உள்ளது. ஹென்றி நிகோல்ஸ் 99 பந்துகளில் 19 ரன்கள் என்று சுவராக நின்ற போது துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்த விதத்தில் வாயடைத்து நின்றார்.
தேநீர் இடைவேளைக்கு சற்று முன் ஜாக் லீச் வீசிய பந்தை நிகோல்ஸ் நேராக சற்றே தூக்கி அடித்தார். எதிர்முனையில் நின்று கொண்டிருந்த ரன்னர் டேரில் மிட்செல் பந்தில் படக்கூடாது என்று தன் மட்டையை விலக்கிக் கொள்ள நினைத்தார், ஆனால் முடியவில்லை பந்து மட்டையில் பட்டு மிட் ஆஃபில் நின்று கொண்டிருந்த அலெக்ஸ் லீஸிடம் கேட்ச் ஆனது.
ஓ இது அவுட் இது அவுட் என்று பென் ஸ்டோக்ஸ் கொண்டாடத் தொடங்க இங்கிலாந்து வீரர்களும் கொண்டாட்டத்தில் இணைந்தனர், ஆனால் பாவம் ஹென்றி நிகோல்ஸ் என்ன நடந்தது என்று தெரியாமல் வாயடைத்து நின்றார். பிறகு மெதுவாக தனக்குத்தானே ஆறுதல் அடைந்து பெவிலியன் நோக்கி நடந்தார், நிகோல்ஸ் கேட்ச் லீஸ், பவுல்டு லீச் 19.
முன்னதாக நியூசிலாந்து அணி டாம் லேதமை (0) சடுதியில் இழந்தது. வில் யங் 20 ரன்களுக்கு நன்றாக ஆடி ஜாக் லீச் பந்தில் எல்.பி.ஆனார். கோவிட்டிலிருந்து மீண்டு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 5 அற்புதமான பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராடின் அதியற்புத ஆஃப் ஸ்டம்ப் லைன் பந்தில் கேட்ச் ஆனார்.
டெவன் கான்வே 26 ரன்களில் ஓவர்டன் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். 123/5 என்ற நிலையிலிருந்து மீண்டும் நியூசிலாந்தின் ஆபத்பாந்தவர்கள் டேரில் மிட்செல், டாம் பிளண்டெல் அருமையாக ஆடி 225 வரை ஆட்டமிழக்காமல் கொண்டு சென்றனர். மிட்செல் 6 பவுண்டரி 2 அற்புத சிக்சர்களுடன் 78 நாட் அவுட், பிளண்டெல் 5 பவுண்டரிகளுடன் 45 நாட் அவுட்.
இங்கிலாந்து தரப்பில் பிராட், ஜாக் லீச் தலா 2 விக்கெட். ஜேமி ஓவர்டன் 1 விக்கெட். இன்று 2ம் நாள் ஆட்டம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England test, New Zealand