லீட்ஸில் நடைபெறும் 3வது கடைசி டெஸ்ட் போட்டியின் 2 நாளான நேற்று இங்கிலாந்து அணி 264/6 என்று முடித்துள்ளது. நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 329-ஐக் கடக்க இங்கிலாந்துக்கு இன்னும் 65 ரன்கள் தேவை. 55/6 என்று
ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சில் சரிந்த இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ (130 நாட் அவுட்). அறிமுக ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் (89 நாட் அவுட்) இணைந்து 209 ரன்களை 27 ஓவர்களில் அடித்து குவித்தனர்.
கடந்த போட்டியில் அதிரடி சதம் எடுத்து இங்கிலாந்தின் தொடர் வெற்றியை சாத்தியமாக்கிய பேர்ஸ்டோவை நேற்றும் கட்டுப்படுத்த முடியவில்லை 95 பந்துகளில் சதம் கண்ட பேர்ஸ்டோ 126 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஜேமி ஓவர்டன் 106 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 89 நாட் அவுட். பேர்ஸ்டோவின் ஆட்டம் சேவாகை நினைவூட்டுவதாக இருந்தது என்றால் ஜேமி ஓவர்டன் ஆட்டம் பிளிண்டாஃபை நினைவுட்டுவதாக இருந்தது.
இங்கிலாந்து இன்னிங்ஸ் பேரழிவில் தொடங்கியது அலெக்ஸ் லீஸ் (4), ஜாக் கிராலி (6), ஆலி போப் (5) ஆகியோர் ஸ்டம்புகளை தெறிக்கவிட்டார் ட்ரெண்ட் போல்ட். ஜோ ரூட்ட்டை பிளண்டெல் கேட்சுக்கு சவுதீ வீழ்த்தினார். 21/4 என்ற நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இறங்கி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 13 பந்துகளில் 18 ரன்கள் விளாசினார், ஆனால் இவரும் பென் ஃபோக்சும் நீல் வாக்னரின் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 55/6 என்று சரிவின் மடியில் இருந்தது.
ஆனால் அதன் பிறகு தான் என்ன நடந்தது என்றே நியூசிலாந்துக்குப் புரியவில்லை. 223 பந்துகளில் 209 ரன்கள் கூட்டணி. இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் 7வது விக்கெட்டுக்கான அதிகபட்ச சாதனை கூட்டணி இது. இது புதிய இங்கிலாந்து, இந்திய அணி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அல்லது மெக்கல்லம் பாடத்தை அவருக்கே புகட்ட வேண்டும் இல்லையெனில் இந்திய அணி மிக மோசமான தோல்வியைத் தழுவும்.

பேர்ஸ்டோ- ஓவர்டன் 223 பந்துகளில் 209 ரன்கள் விளாசல்
நியூசிலாந்து பவுலர் நீல் வாக்னர், ஓவர்டன் கால்காப்பில் வாங்கச் செய்தார், ஆனால் ரிவியூ செய்யாமலேயே போனார், அது அவுட்,ரிவியூ செய்யாததால் வாய்ப்பு நழுவியது, அதே போல் நீல் வாக்னர், பேர்ஸ்டொ 27 ரன்களில் இருந்த போது காட் அண்ட் பவுல்டு வாய்ப்பை விட்டார். ஆஃப் ஸ்டம்ப் பந்துகள் எல்லாம் தேர்ட் மேன் பவுண்டரிக்கு பறக்க 51 பந்தில் 50 ரன்கள் எடுத்தார் பேர்ஸ்டோ.
ஆஃப் ஸ்பின்னர் பிரேஸ்வெல் வந்தவுடன் ஓவர்டன் உள்ளே புகுந்தார், பிரேஸ்வெல் 4 ஓவர் 37 ரன்கள் விளாசப்பட்டார், அதன் பிறகு அனைவருக்கும் அடிதான், போல்ட், சவுதி, வாக்னர் அனைவருக்கும் சாத்துமுறை நடந்தது. ஃபுல் லெந்த்தில் போட்டால் தூக்கி அடி, ஷார்ட் பிட்ச் ஆகப் போட்டாலும் தூக்கி அடி என்ற அணுகுமுறையில் பேர்ஸ்டோ, ஓவர்டன் நியூசிலாந்தை மீண்டும் மைதானம் நெடுக ஓடவிட்டார். இருவரும் இன்னும் அவுட் ஆகவில்லை. என்பது நியூசிலாந்துக்கு கேடு.
முன்னதாக நியூசிலாந்தின் டேரல் மிட்செல் தொடரின் 3வது சதத்தை எடுத்தார், அவர் 109 ரன்களை எடுக்க டிம் சவுதி 29 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுக்க நியூசிலாந்து 117.3 ஒவர்களில் 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆனால் இங்கிலாந்து 264 ரன்களை 49 ஓவர்களில் எடுத்து 5.38 என்ற ரன் ரேட்டை வைத்துள்ளது. இது புதிய இங்கிலாந்து டெஸ்ட் அணி என்பதை இந்திய அணி உணர வேண்டும், திராவிட் உணர வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.