England vs New Zealand: வில்லியம்சன் விடுத்த சவால்; சேஸ் செய்ய துணிவற்ற ஜோ ரூட்- லார்ட்ஸ் டெஸ்ட் டிரா

கேன் வில்லியம்சன் - ஜோ ரூட்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான நேற்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இங்கிலாந்துக்கு 273 ரன்களை சேஸ் செய்யுமாறு இலக்கு நிர்ணயித்தார், ஆனால் இங்கிலாந்து கேப்டன் சவாலை ஏற்காமல் அறுவையாக ஆடி கடைசியில் 170/3 என்று சொத்தையாக டிரா ஆனது லார்ட்ஸ் டெஸ்ட்.

  • Share this:
இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 169/6 என்று தடுமாறியது, பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகிக் கொண்டிருந்தன. அப்படியும் டிரா ஆகக் கூடாது என்ற ரீதியில் போட்டியை உயிர்ப்புடன் வைத்திருக்க டிக்ளேர் செய்து 75 ஓவர்களில் 273 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இங்கிலாந்துக்கு சவால் அளித்தார் கேன் வில்லியம்சன்.

ஆனால் இலக்கை விரட்டுவது ‘ரியலிஸ்டிக்’ ஆக இருக்காது என்று ஜோ ரூட் ஒரு அறுவையான டிராவுக்கு திட்டமிட்டு தன் அணியை ஆடப்பணித்தார். விராட் கோலியாக இருந்தால் வருவது வரட்டும் இலக்கை விரட்டுங்கள் என்று கூறியிருப்பார்.

இருப்பினும் 56/2 என்றவுடன் கொஞ்சம் இங்கிலாந்து வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும். ஆனால் ஜோ ரூட் (40), டாம் சிப்லி (60 நாட் அவுட்) ஆகியோர் 80 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்து பதட்டத்தைத் தணித்தனர். டாம் சிப்லி 207 பந்துகளில் 60 ரன்களை ஆக அறுவையாக ஆடி எடுத்தார்.

ரோரி பர்ன்ஸ் 25 ரன்களுக்கு நீல் வாக்னர் பந்தை தொட்டார் கெட்டார். சவுத்தி அருமையாக இடது புறம் பாய்ந்து பிடித்தார். ஜாக் கிராலி 25 பந்துகள் ஆடி பரிதாபமாக 2 ரன்களை மட்டுமே எடுத்து சவுத்தியிடம் மீண்டும் தளர்வான ஒரு ட்ரைவில் எட்ஜ் ஆகி கல்லியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

Also Read:  Ollie Robinson: 8 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறு- அறிமுக இங்கிலாந்து பவுலர் ஆலி ராபின்சன் விளையாடத் தடை: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி

சிப்லி அறுவையான பேட்டிங்கில் 3 பவுண்டரிகளையே அடித்தார். ஜோ ரூட் 71 பந்துகளில் 40 ரன்கள் என்று டிராவுக்காக ஆடி உயிரோட்டத்தைக் கெடுத்து சொத்தை டெஸ்ட் போட்டியாக்கி விட்டது இங்கிலாந்து. சிப்லியும் ஆலி போப்பும் களத்தில் இருக்க 170/3 எனும் போது இரு அணிகளும் கைகொடுத்துக் கொண்டன. ஆட்டம் டிரா ஆனது.

வியாழனன்று எட்ஜ்பாஸ்டனில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. காலையில் நியூசிலாந்து அணி தீவிரத்துடன் ஆக்ரோஷமாக ஆடியது, குறிப்பாக ராஸ் டெய்லர் 33 பந்துகளில் 2 மிகப்பெரிய சிக்சர்களுடன் 35 ரன்களை அவசர கதியில் எடுத்தார். 2 சிக்சர்களுமே பிரமாதம், ஒன்று ஆலி ராபின்சன் பந்தில் இன்னொன்று அதிவேக பவுலர் மார்க் உட் பந்தில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்சில் அசைக்க முடியாது நின்று டெவன் கான்வே தேர்வு செய்யப்பட்டார். டெவன் கான்வே, ஆலி ராபின்சன் அறிமுகமான இந்த டெஸ்ட் போட்டியில் ஆலி ராபின்சன் தான் 8-9 ஆண்டுகளுக்கு முன் செய்த மிகப்பெரிய தவறினால் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து தடைசெய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

டெஸ்ட்டுக்கு உயிர் கொடுத்த கேன் வில்லியம்சனின் டிக்ளேர் உத்தியைப் பலரும் பாராட்ட, இலக்கை விரட்டத் துணியாத ஜோ ரூட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Published by:Muthukumar
First published: