நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக, இங்கிலாந்து அணி சார்பில், ஜேசன்ராய், ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜேசன் ராய் 17 ரன்களிலும், பேர்ஸ்டோ 36 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் 7 ரன்களிலும் கேப்டன் இயான் மோர்கன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். தொடக்க வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதன்பிறகு, ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ஆடி விக்கெட் இழக்காமல் ரன் சேர்த்தனர். நிதானமாக ஆடி 60 பந்துகளுக்கு 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஃபெர்குசம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்த வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் மட்டும் நம்பிக்கையுடன் விளையாடினார். இறுதி ஓவரில் 15 ரன்கள் எடுக்கவேண்டிய சூழல் இருந்தது. இரண்டு பந்துகளில் ரன் எடுக்க முடியாத ஸ்டோக்ஸ், மூன்றாவது பந்தில் ஆறு ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்த பந்திலும், ஓவர்த்ரோ முறையில் ஆறு ரன்களை எடுத்தார்.
ஐந்தாவது பந்தில் இரண்டு ரன் ஓடும் முயற்சியில் அடில் ரஷித் ரன்அவுட் ஆனார். இறுதி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் ஸ்டைக்கில் இருந்தார். அவர், பந்தை தட்டிவிட்டு இரண்டாவது ரன் ஓடும்போது, மார்க்வுட் ரன்அவுட் ஆனார். அதனால், மேட்ச் டிராவில் முடிந்தது.
அதனையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். நியூசிலாந்து அணியின், பௌல்ட் பந்துவீசினார். சூப்பர் ஓவரில், ஸ்டோக்ஸ் 8 ரன்களும், பட்லர் 7 ரன்களும் எடுத்தனர்.
சூப்பர் ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நியூசிலாந்து அணி சார்பில், நீசாம் மற்றும் கப்டில் களமிறங்கினார்.
இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்கர் பந்து வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த நீசாம், இரண்டாவது பந்தில் சிக்ஸ் அடித்து அசத்தினார். எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த சூப்பர் ஓவரிலும் இறுதி இரண்டு பந்து மூன்று ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலை இருந்தது. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இரண்டாவது ரன் ஓடும் முயற்சியில் கப்டில் ரன் அவுட் ஆனார். அதனால், சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது.
அதிக பவுண்டரி அடித்தன் அடிப்படையில், நீண்ட வருட காத்திருப்புக்கு பிறகு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்று சாதித்துள்ளது. நியூசிலாந்து அணியின் வெற்றி நூலிழையில் பறிபோனது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.