126 ரன்களுக்குச் சுருண்டு இலங்கை படுதோல்வி- ஒயிட்வாஷ்: தொடரை வென்று மிரட்டுகிறது இங்கிலாந்து

வெற்றிக் களிப்பில் இங்கிலாந்து அணி.

ஆட்ட நாயகனும் ஜோ ரூட் தான், தொடர் நாயகனும் ஜோ ரூட்தான், ஏனெனில் முதல் டெஸ்ட்டில் இரட்டைச் சதம் அடித்த ஜோ ரூட் இந்தப் போட்டியில் 186 ரன்களைக் குவித்தார்.

  • Share this:
    கால்லே மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

    4ம் நாளான இன்று 339/9 என்று தொடங்கிய இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 344 ரன்கள் எடுத்து இலங்கையை விட 37 ரன்கள் பின் தங்கியிருந்தது. ஆனால் அதன் பிறகு களமிறங்கிய இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்சில் சற்றும் எதிர்பாராத வகையில் 35.5 ஓவர்களில் இங்கிலாந்து ஸ்பின்னர்களான ஜேக் லீச் (4/59), டாம் பெஸ் (4/49) ஆகியோரிடம் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து 164 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 4/89 என்று தடுமாறியது, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் சாய்த்த இலங்கை இடது கை ஸ்பின்னர் லசித் எம்புல்டேனியா மீண்டும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 10 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றி சாதனை புரிந்தார்.

    ஆனால் அதன் பிறகு கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் டாம் சிப்லி (56), ஜோஸ் பட்லர் (46) என்று மேலும் சேதம் ஏற்படாமல் அணியை 164/4 என்று வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

    ஆட்ட நாயகனும் ஜோ ரூட் தான், தொடர் நாயகனும் ஜோ ரூட்தான், ஏனெனில் முதல் டெஸ்ட்டில் இரட்டைச் சதம் அடித்த ஜோ ரூட் இந்தப் போட்டியில் 186 ரன்களைக் குவித்தார்.ஆனால் இரண்டாவது இன்னிங்சில் 11 ரன்களுக்கு மெண்டிஸிடம் பவுல்டு ஆனார்.

    37 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய இலங்கை அணி உண்மையில் என்ன நினைத்து ஆடியது என்று புரியவில்லை, படுமோசமான ஆட்டத்தில் உணவு இடைவேளையின் போது 67/6 என்று சரிந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்கவில்லை, ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குக் கைப்பற்றினார்.

    இந்நிலையில் 2வது இன்னிங்சில் இடது கை ஸ்பின்னர் ஜாக் லீச், வலது கை ஆஃப் ஸ்பின்னர் டாம் பெஸ் ஆதிக்கம் செலுத்தினர்.

    குசல் பெரேரா (14), லாஹிரு திருமானே(13), ஒஷாண்டோ பெர்னாண்டோ (3), முதல் இன்னிங்சில் சதம் எடுத்த ஆஞ்சேலோ மேத்யூஸ் (5) தினேஷ் சந்திமால் (9), டிக்வெல்லா (7) என்று அனைவரும் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். உணவு இடைவேளையின் போது திலுருவன் பெரேரா, ரமேஷ் மெண்டிஸ் கிரீசில் இருந்தனர்.

    உணவு இடைவேளைக்குப் பிறகு மெண்டிஸ் 16 ரன்களில் லீச்சிடம் ஆட்டமிழக்க, பெரேரா 4 ரன்களில் பெஸ் இடம் ஆட்டமிழந்தார், சுரங்க லக்மல் 11 ரன்கள் எடுக்க இவருடன் இடது கை சுழற்பந்து வீச்சாளர் எம்புல்டேனியா இணைந்து ஸ்கோரை 126 ரன்களுக்கு உயர்த்தினர். எம்புல்டேனியா 42 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் அதிரடியாக ஆடி 40 ரன்கள் சேர்த்தார். ஜோ ரூட் அடுத்தடுத்து எம்புல்டேனியாவையும் அசிதா பெர்னாண்டோவையும் வீழ்த்த இலங்கை 126 ரன்களுக்கு முடிந்தது.

    164 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி ஜாக் கிராலி (13) விக்கெட்டை இழந்தது. ஜானி பேர்ஸ்டோவ் இறங்கி 29 ரன்களை 28 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் சேர்த்து எம்புல்டேனியா பந்தில் எல்.பி.ஆனார். ஜோ ரூட், டேன் லாரன்ஸ் அடுத்தடுத்து சொற்பமாக ஆட்டமிழக்க இங்கிலாந்து 89/4 என்று இலங்கைக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது.

    ஆனால் சிப்லி 56 ரன்களைப் போராடி எடுக்க, ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுக்க 164/4 என்று பாதுகாப்பாக இலக்கை வந்து சேர்ந்தனர்.

    இலங்கைக்கு ஒயிட் வாஷ் அளித்தது இங்கிலாந்து, அடுத்து இந்தியாவுக்குப் பயணிக்கிறது, பிப்.5ம் தேதி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி.
    Published by:Muthukumar
    First published: