நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று இங்கிலாந்து அணி ஒரே நாளில் 383 ரன்கள் குவித்து ஆட்ட முடிவில் 473/5 என்று நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ரன்களை விட 80 ரன்களே குறைவாக உள்ளது. ஜோ ரூட் 163 நாட் அவுட், முன்னதாக ஆலி போப் 145 ரன்கள் எடுத்து தன் 2வது டெஸ்ட் சதத்தை எடுத்தார்.
ஜோ ரூட் 116 பந்துகளில் சதம் கண்டது அவரது அதிவேக டெஸ்ட் சதமாகும் இது அவரது 27வது டெஸ்ட் சதம். நியூசிலாந்து தரப்பில் இங்கிலாந்து போலவே கேட்ச்களை விட்டது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது, 183 ரன்கள் எடுத்த டேரில் மிட்செல் 2 கேட்ச்களை விட்டார்.
இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 67 ரன்களில் ஆட்டமிழந்தார், இவருக்கு கையும் நகரவில்லை, காலும் நகரவில்லை இவர் ஆடுகிறார் என்றால் ஆடுகளம் பிளாஸ்டிக் ஆகிவிட்டது என்று பொருள். பென் ஸ்டோக்ஸ் 33 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 46 ரன்கள் விளாசினார்.
ஜோ ரூட், ஆலி போப் இணைந்து 187 ரன்கள் கூட்டணி அமைத்தனர். மதிய செஷனில் மட்டும் பிளந்து கட்டியது இங்கிலாந்து 28 ஓவர்களில் 136 ரன்கள் விளாசினர். ரூட் களமிறங்கும்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து 100 ரன்களுக்கும் மேல் அடித்திருந்தது மொத்தம் 25 பவுண்டரிகளை அடித்தார் ஜோ ரூட். ரூட்டுக்கும் ஒரு லைஃப் உண்டு, ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தை அவர் கட் செய்ய சவுதி கையின் ஊடாக கேட்ச் சென்றது. பந்தும் பவுண்டரிக்குப் பறந்தது.
ஜோ ரூட் பவுண்டரிகளை விளாச 56 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். இரண்டாவது செஷனில் முதல் 5 ஓவர்களில் 33 ரன்கள் விளாசப்பட்டது. பிறகு ரூட்டும் போப்பும் சதக்கூட்டணி அமைத்த பிறகு 10 ஓவர்களில் 58 ரன்களை விளாசினர். ரூட் பிரமாதமாக ஆடினாலும் அவர் சதம் எடுத்த ஷாட் அசிங்கமாக இருந்தது, பிரெஞ்ச் கட் என்பார்களே அப்படி லெக் ஸ்டம்பை உரசியபடி பைன் லெக் பவுண்டரிக்குச் சென்றது.
தேநீர் இடைவேளைக்கு முன்பு நியூசிலாந்து புதிய பந்தை எடுத்தனர். போப் போல்ட் பந்தை (3/89) டாப் எட்ஜ் செய்து வெளியேறினார். ஜானி பேர்ஸ்டோவும் 8 ரன்களில் போல்ட்டிடம் வீழ்ந்தார். ஸ்டோக்ஸ் இறங்கி சவுத்தியை 2 பவுண்டரிகள் விளாசினார். கைல் ஜேமிசன் பந்தை ஸ்டாண்ட்ஸுக்கு அனுப்பினார். பிறகு ஸ்பின்னர் பிரேஸ்வெல்லை நேராக ஒரே தூக்குத் தூக்கி சிக்ஸ் விளாசினார். ஆனால் இன்னொரு சிக்ஸ் முயற்சியில் ஸ்டோக்ஸ் டீப் மிட்விக்கெட்டில் போல்ட்டிடம் கேட்ச் ஆனார்.
நாளின் புள்ளி விவரங்கள்:
ஆலி போப் தன் 2வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். முதல் சதம் போர்ட் எலிசெபத்தில் எடுக்கப்பட்டது.
ரூட் கிரீசிற்கு வரும்போது இங்கிலாந்து ஸ்கோர் 100ஐ தாண்டி இருப்பது கடந்த 45 இன்னிங்ஸில் முதல் முறை.
ரூட் 116 பந்துகளில் சதம் எடுத்தது அவரது அதிவேக டெஸ்ட் சதமாகும், இதற்கு முன்னர் கார்டிஃபில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 118 பந்துகளில் சதம் எடுத்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England test, Joe Root, New Zealand