ஒரு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளிலும் ஒருவர் அல்லது அதிகம் போனால் இருவர் சதம் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம், இப்படிப்பட்ட டெஸ்ட் போட்டிகளெல்லாம் டிரா ஆகி அறுவையாகவே இருக்கும், ஆனால் ஒரே டெஸ்ட் போட்டியில் 8 சதங்கள் என்பது ‘சாரி ரொம்ப டூ மச்’ தான். ஆனால் இதே போல் இருமுறை நடந்திருக்கிறது என்பதுதான் டபுள் ஆச்சரியம்.
2005-ல் தென் ஆப்பிரிக்கா அணி மே.இ.தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது செயிண்ட் ஜான் ஆண்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளிலும் சேர்த்து மொத்தம் 8 பேர் சதம் அடித்தனர். இதே போல் மீண்டும் 2012-13-ல் காலே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியிலும் 8 சதங்கள் விளாசப்பட்டது, ஆனால் இந்த இரு டெஸ்ட் போட்டிகளுமே மந்தமான டிரா ஆனதுதான் மிச்சம்.
2005-ல் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அந்த தொடரை 2-0 என்று கைப்பற்றியது. அப்போதுதான் 4வது டெஸ்ட் போட்டி செயிண்ட் ஜான், ஆண்டிகுவாவில் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்க அணிக்கு கிரேம் ஸ்மித் கேப்டன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுவர் ஷிவ்நரைன் சந்தர்பால் கேப்டன். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்தது.
ஏ.பி.டிவில்லியர்ஸ், கிரேம் ஸ்மித் தொடக்கத்தில் இறங்கினர். இதில் டிவிலியர்ஸ் 114, கிரேம் ஸ்மித் 126 ரன்கள் குவிக்க முதல் விக்கெட்டுக்காக 245 ரன்கள் சேர்க்கப்பட்டது. இவர்களோடு ஜாக் காலீஸ் 147 ரன்கலையும் ஆஷ்வெல் பிரின்ஸ் 131 ரன்களையும் எடுக்க தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 588/6 டிக்ளேர் செய்தது. பிறகுதான் நினைத்திருப்பார் கிரேம் ஸ்மித் ஏண்டா டிக்ளேர் செய்தோம் என்று.
கிறிஸ் கெய்ல் முச்சதம் விளாசல்: தெ.ஆ. அணியில் 11 பேரும் பவுலிங் வீசிய தருணம்:
ஏனெனில் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல் தொடக்க வீரராக இறங்கி 37 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 483 பந்துகளில் 317 ரன்கள் விளாசினார்.
ராம் நரேஷ் சர்வான் 127, சந்தர்பால் 127, நம் சிஎஸ்கே அணிக்கு ஆடிய டிவைன் பிராவோ 7ம் நிலையில் இறங்கி 107, ஆனால் லெஜண்ட் லாரா 4 ரன்களில் அவுட் ஆக மே.இ.தீவுகள் 235 ஓவர்கள் ஆடி 747 ரன்கள் குவித்தது. இன்னொரு வேடிக்கை என்னெவெனில் தென் ஆப்பிரிக்க அணியில் 11 வீரர்களும், விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் உட்பட பவுலிங் செய்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 127/1 என்று ஆக ஆட்டம் டிராவில் முடிந்தது.
இலங்கை-பங்களாதேஷ்:
2012-13-ல் காலே டெஸ்ட் போட்டியிலும் 8 சதங்கள் விளாசப்பட்டது, இலங்கை அணியின் முதல் இன்னிங்சில் குமார் சங்கக்காரா, லாகிரு திரிமானே, தினேஷ் சந்திமால், சதம் எடுக்க இலங்கை அணி 570/4 என்று டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் மொகமது அஷ்ரபுல் 190 ரன்களையும் முஷ்பிகுர் ரஹீம் 200 ரன்களையும் நாசிர் ஹுசைன் 100 ரன்களையும் விளாச வங்கதேசம் 638 ரன்கள் விளாசியது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை இலங்கை ஆட தில்ஷன் 126 ரன்களையும் குமார் சங்கக்காரா 105 ரன்களையும் எடுத்தனர். 335/4 என்று டிக்ளேர் செய்ய. வங்கதேசம் தன் 2வது இன்னிங்ஸில் 70/1 என்று எடுக்க ஆட்டம் டிரா ஆனது. இந்த 2 தருணங்கள்தான் டெஸ்ட் வரலாற்றில் 8 சதங்கள் பதிவான டெஸ்ட் போட்டிகளாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AB de Villiers, Chris gayle, South Africa, West indies