ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பெவிலியனுக்கு தோனியின் பெயரை சூட்டியுள்ள மாநில கிரிக்கெட் சங்கம், அதை அவர் கையால் திறக்க வேண்டும் என்று விரும்பிய நிலையில், தோனி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, கடந்த 2004-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். தனது அசாத்திய திறமைகளால் அணியின் கேப்டனாக உயர்ந்தார்.
அத்துடன், ஐசிசியின் 3 முக்கியமான கோப்பைகளை வென்று கொடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வெற்றிக் கேப்டன் என்ற பெருமையையும் தோனி பெற்றார். தற்போது, கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும், சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.
இந்திய அணி இக்கெட்டான நிலையில் தவிக்கும்போது கை கொடுக்கும் வீரர்களில் முன்னணி இடத்தில் தோனி இருக்கிறார். கடந்த ஓராண்டுகளாக பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த அவர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் தன்னை மீண்டும் நிரூபித்தார்.
இதற்கிடையே, முதல் முறையாக கிரிக்கெட் மைதானத்தின் பெவிலியனுக்கு மகேந்திர சிங் தோனியின் பெயர் வைக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானம் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ளது.
இந்த மைதானத்தில் தெற்குப் பகுதிக்கு (South stand) எம்.எஸ்.தோனி பெவிலியன் என்ற பெயரிடப்பட்டது. இந்த பெவிலியனை தோனி தனது கைகளால் திறந்து வைக்க வேண்டும் என்று கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அவரை அணுகியுள்ளனர்.
ஆனால், அவர் திறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். “என்னுடைய சொந்த வீட்டை நான் திறந்து வைக்கனுமா?” என்று தோனி வந்தவர்களிடம் கூறி நெகிழ வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்த மைதானத்தில் நடக்க உள்ளது. உலகக்கோப்பைக்கு பின்னர் தோனி ஓய்வு பெறலாம் என்ற தகவல்கள் கூறி வரும் நிலையில், சொந்த ஊரில் அவருக்கு இது கடைசி போட்டியாக கூட இருக்கலாம்.
Also See....
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.