ஆஸ்திரேலிய பவுலிங்கைக் கிழித்துத் தொங்க விட்ட டெவன் கான்வே 1 ரன்னில் சதத்தை தவற விட்டார்: நியூஸிலாந்து செம வெற்றி

99 நாட் அவுட் டெவன் கான்வே, ஆஸி. தோல்வி. நியூஸி வெற்றி

185 ரன்கள் இலக்கை எதித்து ஆஸ்திரேலியாவின் ஏரோன் பிஞ்ச், மேத்யூ வேட் இறங்கினர். ஆனால் வெள்ளைப்பந்து விளக்கொளியில் கண்ட படி ஸ்விங் ஆக பிஞ்ச், ஜோஷ் பிலிப்ஸ் கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் நால்வரும் வெளியேற ஆஸ்திரேலியா 19/4 என்று ஆனது, ட்ரெண்ட் போல்ட், சவுதி தலா 2 விக்கெட்டுகள்.

  • Share this:
நியூஸிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி இன்று கிறைஸ்ட் சர்ச்சில் முதல் டி20 போட்டியை விளையாடியது, இதில் நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஏரோன் பிஞ்ச் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 184/5 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி போல்ட், சவுதி, இஷ் சோதி (4/28) ஆகியோரது ஆக்ரோஷ பவுலிங்குக்கு 17.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்ததை நியாயப்படுத்துமாறு நியூஸிலாந்து அணி விரைவில் கப்தில் (0), செய்ஃபர்ட் (1), கேப்டன் கேன் வில்லியம்சன் (12) ஆகியோரை இழந்து 4 ஓவர்களில் 19/3 என்று நியூஸிலாந்து தத்தளித்தது. டேனியல் சாம்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஜை ரிச்சர்ட்சன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூஸிலாந்துக்கு ஆடும் இடது கை அதிரடி வீரர் டெவன் கான்வே அப்போதுதான் இறங்கினார். இவர் இதுவரை 6 டி20 சர்வதேச போட்டிகளில் மட்டும் ஆடியுள்ளார். சராசரி 58, அதிகபட்ச ஸ்கோர் 65 நாட் அவுட், ஸ்ட்ரைக் ரேட் 151.30 ஆகும்.

இவரும் கிளென் பிலிப்ஸும் சேர்ந்து கொண்டு சென்றனர். 5வது ஓவரில் ஜை ரிச்சர்ட்ஸெனை லாங் லெக்கில் தூக்கி சிக்சருக்கு அடித்து அதிரடியைத் தொடங்கினார் டெவன் கான்வே.

பிறகு கேன் ரிச்சர்ட்ச்னை ஒரு அழகான பாயிண்ட் பவுண்டரி விளாசினார். பவர் ப்ளே முடிவில் நியூஸிலாந்து 34/3 என்று இருந்தது. ஜாம்பா ஒரு முனையிலும் ஆஷ்டன் ஆகர் ஒருமுனையிலும் டைட்டாக வைத்திருந்தனர். ஜை ரிச்சர்ட்ஸனை கிளென் பிலிப்ஸ் புல் ஷாட்டில் சிக்சர் அடிக்க இந்த 3 ஓவர்களில் வெறும் 21 ரன்கள்தான் வந்தது, 9ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து 55/3 என்று இருந்தது.

10வது ஓவரை ஆகர் வீச கான்வே கடைசி 2 பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்ப 10 ஓவர்கள் முடிவில் 67/3 என்று 7 ரன்களுக்குள்தான் சென்று கொண்டிருந்தது. 11வது ஓவரிலிருந்து சாத்துப்படி தொடங்கியது இதில் கிளென் பிலிப்ஸ், ஜாம்பாவை 2 சிக்சர்கள் விளாசினார். 12வது ஓவரில் டெவன் கான்வே, கேன் ரிச்சர்ட்சனை 2 அழகான பவுண்டரிகள் விளாசினார். 12 ஓவர்கள் முடிவில் 91/3 என்று ஸ்கோர் உயர்ந்தது. 13வது ஓவரில் 3 சிக்சர்களுடன் 30 ரன்கள் எடுத்த கிளென் பிலிப்ஸ், ஸ்டாய்னிஸ்னி ஸ்லோ பந்தை கொடியேற்றி கேட்ச் ஆனார்.

13 ஓவர்களில் ஸ்கோர் 98/4 என்று இருந்த போது டெவன் கான்வே 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். ஜேம்ஸ் நீஷம் இறங்கினார். கிளென் மேக்ஸ்வெல் 14வது ஓவரில் பவுண்டரி கொடுக்காமல் 10 ரன்களை விட்டுக் கொடுத்தார். 15வது ஓவரில் ஸ்டாய்னிஸ், டெவன் கான்வேயின் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்களை விட்டு கொடுக்க ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 118/4 என்று பெரிய ஸ்கோராக இல்லை.

16வது ஓவரில் சாம்ஸ் 14 ரன்களை விட்டுக் கொடுத்தார். நீஷம் 22 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஜை ரிச்சர்ட்ஸனிடம் வெளியேற 17வது ஓவரின் முடிவில் 141/5 தான்.

18வது ஓவரை கேன் ரிச்சர்ட்ஸன் வீச கான்வே ஒரு பவுண்டரியுடன் இவரும் சாண்ட்னரும் சேர்ந்து 10 ரன்களை எடுத்தனர். கான்வே 49 பந்துகளில் 72 என்று இருந்தார். 19வது ஓவரை சாம்ஸ் வீச பைன்லெக்கில் மிக அபாரமான பிளிக் சிக்ஸ் ஒன்றை விளாசினார் டெவன் கான்வே. பிறகு கவர் திசையில் ஒரு பளார் பவுண்டரியுடன் அந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டது, கான்வே 55 பந்துகளில் 87 நாட் அவுட், நியூஸிலாந்து 19 ஓவர்கள் முடிவில் 167/5.

கடைசி ஓவரை கேன் ரிச்சர்ட்சன் வீச சாண்ட்னர் ஒரு பவுண்டரி ஒரு பை எடுத்து ஸ்ட்ரைக்கை டெவன் கான்வேயிடம் கொடுத்தார். ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்து 98 ரன்களுக்கு வந்தார் டெவன் கான்வே. 20வது ஓவர் கடைசி பந்தில் சதம் எடுப்பார் என்று எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போக டீப் பாயிண்டில் பீல்டர் கைக்கு வேகமாகச் செல்லுமாறு ஒரு ஷாட்டை அடிக்க ஒரு ரன் மட்டுமே எடுத்தார், 2வது ரன்னை முயற்சிக்கவே இல்லை. இதனால் 59 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அவர் 99 நாட் அவுட் என்று முடிந்தார். நியூஸிலாந்து 184/5 என்று முடிந்தது.

ஆஸ்திரேலியா படுமோசம்:

185 ரன்கள் இலக்கை எதித்து ஆஸ்திரேலியாவின் ஏரோன் பிஞ்ச், மேத்யூ வேட் இறங்கினர். ஆனால் வெள்ளைப்பந்து விளக்கொளியில் கண்ட படி ஸ்விங் ஆக பிஞ்ச், ஜோஷ் பிலிப்ஸ் கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் நால்வரும் வெளியேற ஆஸ்திரேலியா 19/4 என்று ஆனது, ட்ரெண்ட் போல்ட், சவுதி தலா 2 விக்கெட்டுகள்.

இந்த வீழ்ச்சிக்குப் பிறகு மீள முடியாத ஆஸ்திரேலியா அணியில் ஆஷ்டன் ஆகர் (23) ஓரளவுக்கு ஆட, மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். ஜை ரிச்சர்ட்ஸன் 15, ஆடம் ஸாம்பா 13 என்று ஏதோ பங்களிப்பு செய்ய 131 ரன்களுக்கு சுருண்டது. சவுதி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த இஷ் சோதி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கைலி ஜேமிசன் மற்றும் சாண்ட்னர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக டெவன் கான்வே தேர்வு செய்யப்பட்டார். இவரது கடைசி 5 இன்னிங்ஸ் ஸ்கோர் 50 69* 91* 93* 99*.
Published by:Muthukumar
First published: