• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அச்சுறுத்திய நயீம்... வேற லெவல் பவுலிங் செய்த தீபக் சாஹர்...! போட்டியின் சுவாரஸ்யங்கள்

அச்சுறுத்திய நயீம்... வேற லெவல் பவுலிங் செய்த தீபக் சாஹர்...! போட்டியின் சுவாரஸ்யங்கள்

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி, 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என தொடர வென்றது. இப்போட்டியில், ஹாட்ரிக் விக்கெட்டுடன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த தீபக் சாஹர் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

    இந்தியா - வங்கதேசம் இடையிலான டி-20 கிரிக்கெட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. இதையடுத்து, 3-வது மற்றும் கடைசிப் போட்டி, நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 2 ரன்களிலும், ஷிகர் தவன் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    இருப்பினும், பின்னர் கைகோர்த்த லோகேஷ் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர், வங்கதேச பந்துவீச்சை தும்வம் செய்து, இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

    குறிப்பாக ஆபிஃப் உசேன் வீசிய ஆட்டத்தின் 15-வது ஓவரில் ஷ்ரேயாஸ் ஹாட்ரிக் சிக்சர் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்தியா, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து சவாலான இலக்கை துரத்திய வங்கதேச அணியில், லிட்டன் தாஸ் 9 ரன்களுக்கும், அவரையடுத்து வந்த சவுமியா சர்கார் டக்-அவுட்டாகினர்.

    விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய முகமது நயீம் அரைசதம் கடந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்.

    ஆனால், ஆட்டத்தின் 16-வது ஓவரை வீசிய ஷிவம் துபே, முகமது நயீம், ஆபிஃப் உசேன் ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாகி, திருப்புமுனை ஏற்படுத்தினார். இதையடுத்து, வங்கதேசம் சரிவை சந்தித்தது.

    மேலும், 18-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஷபிபுல் இஸ்லாம்-ஐ வெளியேற்றிய தீபக் சாஹர், 20-வது ஓவரை வீசுகையில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்து, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    4 பந்துகளில் மீதம் இருக்கையில் வங்கதேசம் அணி 144 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா, 2-1 என டி-20 தொடரையும் வென்றது.

    இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தீபக் சாஹர், 3.2 ஓவர்கள் வீசி, 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



    இதன் மூலம் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்களுக்கு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    இதற்கு, முன்பு இலங்கையின் அஜந்த மெண்டிஸ் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை தீபக் சாஹர் முறியடித்துள்ளார்.

    அதுமட்டும் இல்லாமல் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    அடுத்ததாக, இந்தியா - வங்கதேசம் இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம், வருகின்ற 14-ம் தேதி, இந்தூரில் தொடங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: