மன்னிப்பு கேட்டார் டேல் ஸ்டெய்ன்: ஐபிஎல் ஆடினால் கிரிக்கெட் மறந்து விடும் கருத்திலிருந்து பல்டி
பாகிஸ்தான் சூப்பர் லீக், இலங்கை பிரிமியர் லீக் டி20 தொடர்கள் கிரிக்கெட்டுக்குப் பயனளிக்கும் ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் பணத்தைப் பற்றிதான் பேச்சு இருக்கும் இதில் கிரிக்கெட்டை நாம் மறந்து விடுவோம் என்று கருத்து தெரிவித்திருந்தார். அது பரவலான விமர்சனங்களை கிளப்பவே தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார் டேல் ஸ்டெய்ன்.
இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
IPL has been nothing short of amazing in my career, as well as other players too.
My words were never intended to be degrading, insulting, or comparing of any leagues. Social media and words out of context can often do that.
என் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் என்னுள் ஆழ்ந்த வியப்பை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது, மற்றவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று கருதுகிறேன்.
என்னுடைய கருத்துக்கள் தரம் தாழ்த்திக் கூறுவதற்காகவோ புண்படுத்துவதற்காகவோ அல்லது லீகுகளை ஒப்பிடுவதற்காகவோ சொல்லப்பட்டதல்ல. சமூக ஊடகங்களும், அந்த கூற்றிடச்சூழலிலிருந்து விடுவித்து வார்த்தைகளைப் புரிந்து கொள்வதினாலும் ஏற்படும் தவறு இது.
என் கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். என்று மன்னிப்பு கேட்டுள்ளார் டேல் ஸ்டெய்ன்.
முன்னதாக கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு அவர் அளித்த சர்ச்சைக்குரிய பேட்டியில், “ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிரச்சனை என்னவெனில் பெரிய அணிகளாக இருக்கின்றன, பெரிய பெயர்கள், நட்சத்திரங்கள், எவ்வளவு பணத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டனர், என்ன சம்பாத்தியம், எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் இப்படித்தான் அங்கு நிலைமை உள்ளது. இதனால் கிரிக்கெட் மறக்கப்படுகிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக், ஸ்ரீலங்கா பிரிமியர் லீகில் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஐபிஎல் ஆடினால் கிரிக்கெட் மறந்து விடும். அங்கு பேசப்படும் விஷயமே இந்த ஐபிஎல்-ல் எவ்வளவு பணம் கிடைக்கும் எந்தத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டோம் இதே பேச்சாகத்தான் இருக்கும். இதை நான் மிகவும் கறாரான நேர்மையுடன் கூறுகிறேன். அதனால் அதிலிருந்து விலக முடிவெடுத்தேன். ஆகவே கிரிக்கெட்டுக்கு மதிப்பு சேர்க்கும் தொடர்களில் சில பாசிட்டிவ் ஆன அம்சங்களைக் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பல விமர்சனங்கள் எழவே அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார், இதோடு பிசிசிஐ மிகவும் செல்வாக்கு மிக்க பணக்கார வாரியம், அதைப் பகைத்துக் கொண்டால் பிழைக்க முடியுமா என்ற சந்தேகமும் ஸ்டெய்ன் மன்னிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.