முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி... இங்கி., இலங்கைக்கு ஷாக் கொடுத்த பாக்...! நேற்றைய போட்டிகளின் ஹைலைட்ஸ்

news18
Updated: June 30, 2019, 8:18 AM IST
முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி... இங்கி., இலங்கைக்கு ஷாக் கொடுத்த பாக்...! நேற்றைய போட்டிகளின் ஹைலைட்ஸ்
பாகிஸ்தான் அணி
news18
Updated: June 30, 2019, 8:18 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாகிஸ்தான், அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. மற்றொரு போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதின. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி, 57 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து வந்த வீரர்களில், ஆஸ்கர் ஆப்கன், நஜிபுல்லா சட்ரன் தலா 42 ரன்கள் எடுத்து கவுரமான ஸ்கோர் எட்ட வழி வகுத்தனர்.


முடிவில், ஆப்கானிஸ்தான் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் பஹர் ஜமான் டக்-அவுட்டாகினார். சற்று நிலைத்து நின்று ஆடிய பாபர் ஆசம், இமாம் உல் ஹக் அணியின் ரன் உயர்வுக்கு வழி வகுத்தனர்.



ஆனால், இவர்கள் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. ஆனால், அந்த ஓவரின் 4-வது பந்திலேயே பாகிஸ்தான் இலக்கை எட்டி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில், 49 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இமாத் வாசிம் ஆட்டநாயகனாக தேர்வானார். மேலும், இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

இந்த வெற்றி மூலம் அரையிறுதிக்கு நான்காவதாக முன்னேறுவதற்கு போட்டியில் இருந்த இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு பாகிஸ்தான் ஷாக் கொடுத்துள்ளது.



இதனிடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கத்திலேயே நியூசிலாந்து தாக்குதலை தொடுத்ததால், 46 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. இருப்பினும், பொறுப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா, 88 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

கடைசி ஓவரை வீசிய டிரென்ட் போல்ட், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். முடிவில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்தது.

இலக்கை விரட்டிய நியூசிலாந்துக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். இதை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால், 43 புள்ளி 4 ஓவர்களில் நியூசிலாந்து 157 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று, பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.



இப்போட்டியில், 71 ரன்கள் விளாசி, ஆஸ்திரேலிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேவேளையில், தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணி 3-வது இடத்திலேயே தொடருகிறது.




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





First published: June 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...