முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘விராட் கோலியுடன் பாபர் ஆசமை ஒப்பிடுவது முட்டாள்தனமானது’ – பாக். முன்னாள் கேப்டன் அதிரடி பேட்டி

‘விராட் கோலியுடன் பாபர் ஆசமை ஒப்பிடுவது முட்டாள்தனமானது’ – பாக். முன்னாள் கேப்டன் அதிரடி பேட்டி

விராட் கோலி - பாபர் ஆசம்

விராட் கோலி - பாபர் ஆசம்

‘தற்போதைய சூழலில் விராட் கோலிக்கு இணையான கிரிக்கெட் வீரர் யாரும் இல்லை.’

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விராட் கோலியுடன் பாபர் ஆசமை ஒப்பிடுவது முட்டாள்தனமானது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் பாபர் ஆசம், கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர் என்ற ஐசிசியின் 2 விருதுகள் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2,600 ரன்களுக்கும் மேலாக பாபர் ஆசம் குவித்துள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது.

இத்தகைய காரணங்களால் அவரை இந்திய அணியின் விராட் கோலியுடன் ஒப்பிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஒப்பீடு குறித்து, கிரிக்கெட் வல்லுநர்கள் பலரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. விராட் கோலியுடன் பாபர் ஆசமை ஒப்பிடக் கூடாது என்று கோலியின் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது- விராட் கோலியுடன் தற்போதைய சூழலில் பாபர் ஆசத்தை ஒப்பிட முடியாது. ஏனென்றால் விராட் கோலி ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். பாபர் ஆசம் தனது கெரியரை இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்.

தற்போதைய சூழலில் விராட் கோலிக்கு இணையான கிரிக்கெட் வீரர் யாரும் இல்லை. பாபர் அற்புதமான ஆட்டக்காரர் என்பதில் சந்தேகமில்லை. கோலியைப் போன்று அவரும் பல சாதனைகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம். ஆனால் தற்போதைய சூழலில் விராட் கோலியுடன் பாபர் ஆசத்தை ஒப்பிடுவது என்பது முட்டாள்தனமானது. இவ்வாறு மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார். இதேபோன்று முன்னாள் கேப்டன் சல்மான் பட் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். விராட் கோலியுடன் பாபர் ஆசத்தை ஒப்பிடுவது என்பது வாசிம் அக்ரமுடன், ஷாஹின் அப்ரிடியை ஒப்பிடுவதற்கு சமமாகும் என்று அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

First published:

Tags: Cricket, Virat Kohli