நடப்பு உலகக் கோப்பை டி20 தொடருடன் மேற்குஇந்திய தீவுகளின் நட்சத்திர அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியான தகவல் குறித்து கெய்ல் விளக்கம் அளித்துள்ளார்.
யுனிவர்சல் பாஸ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மேற்கு இந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். அநாயசமாக இவர் பேட்டை சுழற்றி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடுவதை பார்ப்பது உற்சாகத்தை வரவழைப்பதாக இருக்கும். அமீரகம் ஓமனில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் 42 வயதாகும் கெய்ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறப்பட்டது.
நேற்று மேற்குஇந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதுவே குரூப் ஏ பிரிவில் கடைசி போட்டியாகும். இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, மேற்குஇந்திய தீவுகளை 157 ரன்களில் சுருட்டியது. பின் 17வது ஓவரில் வெறும் இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை துரத்திப் பிடித்து அசத்தலான வெற்றியை பெற்றது ஆஸ்திரேலியா.
கிறிஸ் கெய்ல் இந்த உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டதால் இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கெய்ல் 9 பந்துகளில் இரண்டு சிக்ஸருடன் 15 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மேலும் இந்த போட்டியில் அவர் பந்து வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். அரை சதம் அடித்திருந்த மிட்செல் மார்ஷை தனது பந்துவீச்சில் கெய்ல் வெளியேற்றியதால் மார்ஷ், பெவிலியன் நோக்கி நடந்து கொண்டிருந்த போது அவரின் முதுகின் மேல் ஏறி கெய்ல் வழியனுப்பி வைத்தார். அவருடைய இந்த செய்கை ரசிகர்களை கவர்ந்தது. கெய்லின் கடைசி போட்டி இதுவாக இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் ரசித்தனர்.
Also read:
பாகிஸ்தான் வெற்றியை மனைவி பட்டாசு வெடித்து கொண்டாடியதாக போலீசில் புகார் கொடுத்த கணவர்!
இதனிடையே இந்த போட்டிக்கு பின்னர் கெய்ல் செய்தியாளர்களிடையே பேசும்போது, நான் ஓய்வுபெறுவதாக அறிவிக்கவில்லை. நான் என்னுடைய சொந்த ஊரான ஜமைக்காவில் ரசிகர்கள் முன்னிலையில் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன். மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் அடுத்த உலகக் கோப்பை தொடரிலும் கூட நான் ஆடுவேன். ஆனால் அதற்கு சாத்தியம் இருக்காது என கூறினார் கெய்ல்.
தனிப்பட்ட முறையில் இதுவே நான் பார்த்தவரையில் மேற்கு இந்திய தீவுகளின் மோசமான உலகக் கோப்பை தொடராக இருக்கும். என்னுடைய கேரியரின் கடைசி கட்டத்தில் இப்படியொன்று நடந்திருக்கிறது. இருந்தாலும் இதெல்லாம் சகஜம் தான். இந்த உலகக் கோப்பையை நான் ரசித்து விளையாடினேன். அதே நேரத்தில் இத்தனை ஆண்டுகளின் நான் விளையாடிய விதத்தினால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்” இவ்வாறு கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.