India vs New Zealand | புஜாராவின் ஸ்ட்ரை ரேட்டை வைத்து அவரை மட்டம்தட்டுவது முட்டாள்தனம்: தினேஷ் கார்த்திக் பளிச்

தினேஷ் கார்த்திக்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் நடப்பு அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மென் புஜாராதான், அவர் மெதுவாக ஆடுகிறார், ஸ்ட்ரைக் ரேட்டைப் பாருங்கள் என்றெல்லாம் அவரை மட்டம் தட்டுவது சுத்த ‘நான்-சென்ஸ்’ என்று தினேஷ் கார்த்திக் புஜாரா விமர்சகர்கள் மீது துல்லியத் தாக்குதல் வைத்தார்.

 • Share this:
  இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மதியம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

  பைனலில் பலப்பரீட்சையைத் தொடங்குகின்றன. இதற்கான இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா இரண்டு ஸ்பின்னர்களுடன் இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சும் பேட்டிங்கில் ஷுப்மன் கில், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பந்த் ஆகியோர் அடங்கிய வலுவான இந்திய அணி களமிறங்குகிறது.

  விராட் கோலி ஆரம்ப காலத்தில் கேப்டன்சிக்கு வந்த போது புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி சூசகமாகத் தெரிவித்தார், கோலி சொல்வதை வழிமொழியும் வழக்கம் கொண்ட ரவிசாஸ்திரியும் இந்தக் கருத்தை ஆதரித்தார். இந்நிலையில் டிவிட்டர் ஸ்பேசஸ் நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய விவாதங்களைக் கருத்துகளை ‘நான்சென்ஸ்’ என்று புறந்தள்ளினார்.

  சட்டீஸ்வர் புஜாரா


  “நானும் ஆகாஷ் சோப்ராவும் இதில் ஒத்துப் போகிறோம். புஜாராவை அவரது ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து எடைபோடுவது சுத்த நான்சென்ஸ். 4 நாட்களில் 80-82% டெஸ்ட் போட்டிகள் முடிகின்றன. இதில் என்ன ஸ்ட்ரைக் ரேட் வேண்டிக்கிடக்கிறது. அவர் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று தர முடியும் என்றால் தன் பாணியில் ஆடிவிட்டுப் போகட்டுமே.

  இப்போது புஜாரா மாட்டிக் கொண்டுள்ளார், அவர் ஏன் ரன் எடுக்கவில்லை என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கடைசியாக அவர் ஆடிய பிட்ச்கள் பந்துகள் கடுமையாக திரும்பும் பிட்ச்கள், என்பதோடு 200 ரன்களை எடுக்கவே ஒட்டுமொத்த அணியுமே திணறும்போது புஜாரா சதமெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நாம் கடினமான சில சூழ்நிலைகளில் ஆடினோம், மேலும் ஒருவரது ஆட்டத்தை மதிப்பிட அவரது எண்களை வைத்து மதிப்பிடக் கூடாது. சிட்னி டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், ஆகாஷ் சோப்ரா கூறுவது போல் எத்தனை அடிகளை அவர் உடலில் வாங்கினார்.

  ஐபிஎல் போட்டியின் போது பாட் கமின்ஸ் என்னிடம் இது தொடர்பாகப் பேசினார். இந்தியா டெஸ்ட்டை டிரா செய்ததற்கும் தோற்பதற்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் புஜாராதான் என்றார் பாட் கமின்ஸ். எவ்வளவு நேரம் ஆடினார், உடலில் பந்துகளை வாங்கினார். அப்போது பிட்சில் கொஞ்சம் சாதகம் பவுலர்களுக்கு இருக்கும் போது வேறு எந்த இந்திய பேட்ஸ்மெனுமே அங்கு தட்டுத் தடுமாறியிருப்பார்கள் என்பதே உண்மை.

  அந்தப் போட்டியில் டிரா செய்து பிரிஸ்பன் போட்டிக்கு நம்மை சேதாரம் இல்லாமல் அழைத்துச் சென்றது புஜாராதான். அவர சதம் எடுக்கவில்லையே, அதனால் என்ன, பரவாயில்லை. அவர் திறமை நமக்கு தெரியும், அவரது தரமும் நமக்குத் தெரியும். நம் டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வீரர் புஜாரா என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை. நாம் 100+ ரன்களை எடுத்தால்தான் சிறந்த பேட்ஸ்மென் என்று நம்பர் கேமில் போக வேண்டிய அவசியமில்லை” என்றார் தினேஷ் கார்த்திக்.
  Published by:Muthukumar
  First published: