எது முக்கியம் திறமையா? அதிர்ஷ்டமா?- அஸ்வின் சதமெடுத்தார் என்பதற்காக குழி பிட்ச் இல்லை என்று ஆகிவிடுமா?

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணி.

அகமதாபாத் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் நிறப்பந்து டியூக் பந்து என்று சொல்கிறார்கள், இதில் ஆண்டர்சன், ஆர்ச்சர் ஆகியோரை மாலையில் ஆடும் போது இந்திய பேட்ஸ்மென்கள் உண்மையான திறமையையும், இந்திய ஸ்பின் பவுலர்களின் உண்மையான திறமையையும் காண்பிக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

  • Share this:
சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை 1-1 என்று சமன் செய்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பைத் தக்க வைத்தது.

ஆனால் பிட்ச் பற்றிய சர்ச்சைகள் இருந்த வண்ணம் உள்ளன. பிட்ச் பற்றிய விமர்சனங்களை நாம் நேர்மறையாக அணுக வேண்டும். இந்தியா 5000 ரன்கள் அடிக்க வேண்டும் எதிரணி 5 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக வேண்டும் என்ற தீவிர ரசிக பக்தர்களை பக்த ரசிகர்களை நாம் விட்டு விடுவோம். மற்றபடி கிரிக்கெட் ஆட்டத்தின் நுணுக்கங்களை அதன் நுட்பத்துக்காக ரசிக்கும் ரசிகர்களுக்கானதே இந்தக் கட்டுரை.

முதல் நாளில் பந்து பிட்ச் ஆனதும் மண், தரை பெயர்ந்து வருவதை எப்படி பார்த்தாலும் நல்ல பிட்ச், ஸ்பின் பிட்ச் என்று சொல்ல வாய்ப்பேயில்லை. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இன்று போய் நாளை வா என்ற படத்தில் கல்லாப் பெட்டி சிங்காரம் காலையில் ஓடி வரும் போது ஒரு பாதாள சாக்கடையில் விழுந்து விடுவார், சிறிது நேரத்தில் கொஞ்சம் தூரத்தில் உள்ள இன்னொரு பாதாள சாக்கடையிலிருந்து வெளியே வந்து அவர்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருப்பார். மிகப்பெரிய காமெடி காட்சி, இதனை பீட் செய்ய இன்று வரை காமெடி வந்ததில்லை.

ஆனால் இந்த சென்னை பிட்ச் கொஞ்சம் அந்தக் காமெடியை கடந்து செல்ல முயற்சித்தது. பந்து பிட்ச் ஆகி பூமிக்குள் போய் இன்னொரு குழி வழியாக மேலே வந்து ஸ்டம்பைத் தாக்கவில்லை மற்றதெல்லாம் நடந்து விட்டது.

முதலில் ஸ்பின் பிட்ச் வேறு, குழி பிட்ச் வேறு. உண்மையான ஸ்பின் பிட்ச் இலங்கையில் போட்டார்கள் அங்கு இங்கிலாந்து வென்றது, அதற்கு இலங்கை அணியின் பலவீனமும் பாதிகாரணமாகும். இதற்கு முன்னால் 1970-80களில் இங்கு உண்மையான ஸ்பின் பிட்ச் போடப்பட்ட போது கவாஸ்கர், விஸ்வநாத், பிரிஜேஷ் படேல், போன்ற ஸ்பின் ஜாம்பவான்கள் இருந்தும் இங்கிலாந்து 4-1 என்று வெற்றி பெற்று செல்லவில்லையா. டோனி கிரேக் தலைமையில் வெல்லவில்லையா?

ஆஸ்திரேலியா சென்று 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்த பிறகு எழுச்சி பெற்று கோலி இல்லாமலேயே, பும்ரா, அஸ்வி இல்லாமலே ஜெயிக்கவில்லையா? ஆகவே முழுத் திறமையை நம்பி களமிறங்காமல் குழிப்பிட்சைப் போட்டு டாஸை நம்பி களமிறங்குவது ரிஸ்க் என்பதே விஷயம்.

இதே 2வது டெஸ்ட்டிலும் ரூட் டாஸ் வென்றிருந்தால் நிச்சயம் இந்தியா தோல்வி அடைந்திருக்கும் அப்போது எது முக்கியம் அதிர்ஷ்டமா? திறமையா? என்ற கேள்வி வரும் அப்போது திறமைதான் என்று புரியவரும், ஏனெனில் முதல் இன்னிங்சில் இந்திய அணி எடுத்த 329 ரன்களில் ரோஹித் சர்மா 161, ரஹானே 67, ரிஷப் பந்த் 58 சேர்ந்து 286 ரன்கள். மீதி 7 பேர் சேர்ந்து 43 ரன்கள்தான். இதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். இப்படியிருக்கும் போது டாஸ்தான் ஆட்டத்தை தீர்மானிக்கும் என்பதற்கு எதற்கு 5 நாட்கள் ஆட வேண்டும்?

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் திறமையை மட்டுமே நம்பித்தான் களமிறங்கினோம், அது எப்படி நாம் அன்னிய மண்ணில் வெற்றி பெற்றால் அது நம் முழுத் திறமை ஆனால் அன்னிய அணிகள் இங்கு வந்து குழிப்பிட்ச்சில் தோற்றால் அது அவர்களின் திறமையின்மையாகும்.

இன்னொரு வாதம் என்னவென்றால்... இதை ஒரு வாதம் என்று ஏற்றுக் கொண்டால், அங்கு சென்றால் கிரீன் டாப், வேகப்பந்து ஆட்டக்களங்களை போடுகிறார்களே? நாம் ஸ்பின் பிட்ச் போட்டால் என்ன தப்பு? என்று சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கான பதில் என்னவெனில் இது முதலில் ஸ்பின் பிட்ச் அல்ல, இது தரை பெயர்ந்து வரும் குழி பிட்ச். இதில் அஸ்வின் சதமெடுத்தார் என்பதற்காக அது குழி பிட்ச் இல்லை என்று ஆகிவிடாது.

அஸ்வின் போன்ற திறமையான பேட்ஸ்மென், ஸ்பின்னர் கூட குழிப்பிட்சுக்கும் ஸ்பின் பிட்சுக்கும் இருக்கும் வித்தியாசத்தை மறைத்து இந்த வகை பிட்ச்களை நியாயப்படுத்தி பேசி வருகிறார்.

பந்து பிட்ச் ஆனவுடன் கிளம்பும் மண்.


அஸ்வின் சதமெடுத்தாரே! என்று வாதிடுபவர்களுக்கு நாம் கூறுவதென்னவெனில், இங்கிலாந்தில் கிரீன் டாப் பிட்சில் குக், பீட்டர்சன், இயன் பெல் போன்றவர்கள் சதமெடுக்கின்றனர், பிராட் அரைசதம் எடுக்கிறார். ஆண்டர்சன் 38 ஓவர்கள் நின்று டெஸ்ட் போட்டியை ட்ரா செய்கிறார். பின் ஏன் நாம் அங்கு சென்று சொல்லி சொல்லி உதை வாங்குகுறோம்? நாம் தோற்றால் அங்கு கிரீன் டாப் பிட்ச் தான் காரணம் என்று சொல்ல வேண்டியது. அவர்கள் இங்கு தோற்றால் குழி பிட்ச் இல்லை அவர்களுக்கு ஸ்பின் ஆடத்தெரியாது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? உண்மையில் உண்மையான பிட்சில் இந்திய பேட்ஸ்மென்கள் பவுலர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். ஏனெனில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவில் வெல்கின்றனர், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் வெல்கின்றனர், அதே போல்தான் நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளும். நாம் மட்டும் ஏன் கிரீன் டாப்பில் சொல்லி சொல்லி உதை வாங்க வேண்டும்?

இந்த விதத்தில்தான் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் பெற்ற வரலாற்று வெற்றி கிரிக்கெட் பற்றிய, இந்திய அணி பற்றிய, இந்தியப் பிட்ச்கள் பற்றிய சிந்தனை-சட்டக மாற்றத்தை (Paradigm shift)ஏற்படுத்திய வெற்றியாகும்.

அப்படி திறமையை நம்பியிருந்தால் முதல் டெஸ்ட் போட்டியில் சென்னையில் ஜோ ரூட் டாஸ் வென்று இங்கிலாந்து 578 ரன்களை எடுக்க விடாமல் செய்திருக்க வேண்டும். டாஸ் தோற்றாலும் முதல் டெஸ்ட்டை வென்றிருந்தால் நாம் திறமையை நம்பியிருக்கிறோம் என்று சொல்லலாம்.

முதல் டெஸ்ட் போட்டி பிட்சும் இதே கதைதான், சென்னை சாலை போன்று முதல் 2 நாட்களுக்கு நன்றாக இருந்தது அடுத்தடுத்த நாட்களில் சென்னை சாலைகள் போலவே குண்டும் குழியுமாகி விட்டது. எனவே குண்டுகுழி பிட்ச் வேறு, உண்மையான பிட்ச் என்பது வேறு. பிஷன் பேடி கேப்டனாக இருந்த போது உண்மையான பிட்சைப் போட்டார். அதில் வெற்றி பெற பாடுபட்டார், அது வேறு விஷயம். பிஷன் பேடி, பிரசன்னா, வெங்கட்ராகவன், சந்திரா என்று ஜாம்பவான் ஸ்பின்னர்களை வைத்துக் கொண்டு நாம் இங்கு தோற்கவில்லையா? காரணம் உண்மையான ஸ்பின் பிட்ச் போட்டால் மட்டைக்கும் பந்துக்கும் சரிசம வாய்ப்பு கிடைக்கும்.

ஏன் அலிஸ்டர் குக் தலைமையில் இங்கு வந்து மாண்ட்டி பனேசர், கிரேம் ஸ்வான் இதே குழிப்பிட்சைப் பயன்படுத்தி நம்மை தோற்கடித்து தொடரை வெல்லவில்லையா? சச்சின் தலைமையில் இப்படித்தான் 2000-ல் தென் ஆப்பிரிக்கா இங்கு வந்த போது குழிப்பிட்சை போட்டு அந்த அணியிடம் 0-2 என்று உதை வாங்கினார். நிக்கி போயே என்ற சாதாரண ஸ்பின்னரையே ஆட முடியவில்லை. எனவே குழி பிட்ச் இப்படியும் போகலாம் அப்படியும் போகலாம், டாஸ்தான் அதில் தீர்மானிக்கும் என்றால் அதிர்ஷ்டத்தை நம்பி களமிறங்க எதற்கு திறமைசாலிகளான கோலி, பும்ரா, ரஹானே, கில், அஸ்வின்?

ஆனால் கோலி வந்த பிறகே குழி பிட்ச்தான் என்ற நிலை நீடிப்பது இந்திய அணியை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாகும்.

அஸ்வின் சதமும் ஜோ ரூட் கேப்டன்சியும்:

அன்று காலை முதல் ஒரு மணி நேரத்தில் 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. அஸ்வின் இறங்கினார், கோலி நின்று கொண்டிருந்தார், கோலி பிட்சின் தன்மையை உணர்ந்து அப்போதுதான் சரியாக ஆடிக்கொண்டிருந்தார். கோலி நிற்பதைப் பார்த்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அஸ்வினை ஃப்ரீயாக விட்டு விட்டார், இதனை நன்றாகப் பயன்படுத்திய அஸ்வின் ஆக்ரோஷமாக ஆடி 40 ரன்களை விரைவில் சேர்த்தார், கோலி விக்கெட் மீது கவனக்குவிப்பை செலுத்தியதால் அஸ்வின் சென்று கொண்டே இருந்தார் ஒரு கட்டத்தில் அவர்கள் களவியூகம் பரவலாக்கப்பட்டு அஸ்வினுக்கு எளிதானது. இந்தப் பிட்சில் சதம் அடிக்கும் அளவுக்கு அஸ்வின் திறமை வளர்ந்திருக்கலாம் ஆனால் அதற்குக் காரணம் ஜோ ரூட்தான்.

அஸ்வின் விளாசிய சதம்.


ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சரை உட்கார வைத்தார். இதை எப்படி ஏற்க முடியும்? ஆண்டர்சன் இருந்திருந்தால் அஸ்வின் சதமெடுத்திருப்பாரா என்பது சந்தேகமே. ஆண்டர்சன் ஆர்ச்சரை உட்காரவைத்தது.. டாம் பெஸ் என்ற உண்மையான ஸ்பின்னரை உட்கார வைத்ததைப் பார்க்கும் போது உஷ் கண்டுக்காதீங்க தருணமாகவே படுகிறது.

மேலும் இது போன்ற பிட்ச்களிலேயே வளர்ந்த அஸ்வின் சதமெடுப்பது ஆச்சரியமல்ல என்றாலும் சதம் எடுக்க விட்டது ஜோ ரூட்டின் தலைமைத்துவமும் அணித்தேர்வும்தான்.

கோலியும் ரசிகர்களும்:

குழி பிட்சைப் போட்டாகி விட்டது, அதில் எதிரணி பேட்ஸ்மென்கள் எவரும் 5-6 ஓவர்களுக்கு மேல் தாங்கப் போவதில்லை, மேலும் இந்திய பிட்ச்களில் இந்திய ஸ்பின்னர்கள் போல வெளிநாட்டு ஸ்பின்னர்கள் வீச முடியாது என்பது அசைக்க முடியாத உண்மை.

இப்படியிருக்கையில் இந்திய பவுலர்களின், தன் கேப்டன்சி திறமையை நம்பாமல் ரசிகர்களை பிகில் விஜய் பாணியில் தூண்டி விட்டுக் கொண்டு ‘காதில் விழவில்லை’ விசில் அடியுங்கள் என்று கோலி நடந்து கொண்டது பார்க்கவே அசிங்கமாக இருந்தது.சென்னை ரசிகர்கள் எப்போதும் நடுநிலை ரசிகர்கள். எதிரணி நன்றாக ஆடினாலும் மனதாரப் பாராட்டுபவர்கள், கைதட்டி மகிழ்பவர்கள், அவர்களையே மாற்றப் பார்க்கிறார் கோலி. இன்னொன்று இதே போல் அகமதாபாத் போன்ற ஊர்களில் செய்தால் என்ன ஆகும்? நாளை நடுவர் கோலிக்கு அவுட் கொடுக்க முடியாது. எதிரணி வீரர்களுக்கு நாம் அப்பீல் செய்தவுடனேயே அவுட் கொடுத்தாக வேண்டும் என்று நடுவருக்கு நெருக்கடி ஏற்படாதா?

அது மட்டுமல்ல கால்பந்து போல் உண்மையான ரசிகர்களை வெறியர்களாக மாற்றுவதில்தான் போய் முடியும். ஒருமுறை ஸ்டீவ் வாஹ் ரசிகர்களுக்கு நன்றி என்ற போது இயன் சாப்பல் கூறியது என்றைக்குமான எச்சரிக்கையாகும், ‘ரசிகர்கள் டாப் வீரர்களின் ஆட்டத்தைப் பார்க்க வந்தவர்கள், அவர்களுக்காக வீரர்கள் ஆடவில்லை. இவர்கள் ஆடுகிறார்கள், அதை ரசிக்க வந்திருக்கிறார்கள் இதில் ரசிகர்களுக்கு கேப்டன்கள் பாராட்டு தெரிவிப்பது அபாயகரமானது’ என்றார். இது மிகவும் துல்லிய விமர்சனம்.

அகமதாபாத் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் நிறப்பந்து டியூக் பந்து என்று சொல்கிறார்கள், இதில் ஆண்டர்சன், ஆர்ச்சர் ஆகியோரை மாலையில் ஆடும் போது இந்திய பேட்ஸ்மென்கள் உண்மையான திறமையையும், இந்திய ஸ்பின் பவுலர்களின் உண்மையான திறமையையும் காண்பிக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். ஆகவே வெற்றி பெற்றேயாக வேண்டும் என்று போடப்பட்ட குழிபிட்சை குறைந்தது ஆதரித்து பேசாமல் தந்திரமாக மவுனம் காப்பதே சிறந்தது.
Published by:Muthukumar
First published: