Home /News /sports /

என்ன செய்யப் போகிறார் ஜோ ரூட்?- பாலோ ஆன் கொடுப்பதா வேண்டாமா?- இந்திய அணியின் சமீபத்திய 4வது இன்னிங்ஸ் ஆட்டம் கண் முன்னால் வந்து போவதால் மிரளல்

என்ன செய்யப் போகிறார் ஜோ ரூட்?- பாலோ ஆன் கொடுப்பதா வேண்டாமா?- இந்திய அணியின் சமீபத்திய 4வது இன்னிங்ஸ் ஆட்டம் கண் முன்னால் வந்து போவதால் மிரளல்

ஜாக் லீச்சை சிக்ஸ் விளாசிய ரிஷப் பந்த்.

ஜாக் லீச்சை சிக்ஸ் விளாசிய ரிஷப் பந்த்.

பாலோ ஆன் கொடுத்தாலும் பிரச்சனை, மீண்டும் பேட் செய்தாலும் இந்தியாவின் 4வது இன்னிங்ஸ் அதிரடி விரட்டல் மிரட்டுகிறது என்று ஜோ ரூட் இரண்டக நிலையில் இருக்கிறார்..

சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு இரண்டக நிலை ஏற்பட்டுள்ளது, ஒன்று 4ம் நாளான இன்று இந்திய அணியை விரைவில் சுருட்ட வேண்டும், பிறகு பாலோ ஆன் கொடுப்பதா அல்ல, மீண்டும் இங்கிலாந்தே பேட் செய்து ஒரு இலக்கை நிர்ணயிப்பதா என்ற இரண்டக நிலையில் ஜோ ரூட் சிக்கிக் கொள்வார்.

ஏன் இரண்டக நிலை என்றால் ஃபாலோ ஆன் கொடுத்தால் கொல்கத்தாவில் 2001-ல் லஷ்மண் திராவிட் போல் ரஹானே, கோலி, புஜாரா, கில், ரோஹித் சர்மா கூட்டணி வெளுத்து வாங்கி விடுமோ என்ற பயம் ஒருபுறம்.

சரி பாலோ ஆன் கொடுக்க வேண்டாம், 250 ரன்கள் முன்னிலையுடன் மேலும் ஒரு 175-180 ரன்கள் சேர்த்து 425-435 ரன்களுடன் இந்திய அணியை மாலை களமிறக்கி ஆடச்சொன்னால் சமீபமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியிலும் பிரிஸ்பனிலும் நடந்தவையும் இந்திய வெற்றியும் சிட்னியில் ஆஸி.யை மிரட்டிய இன்னிங்ஸும் கண்ணு முன்னால வந்து போகுமா இல்லையா?

4வது இன்னிங்சில் இந்த இந்திய அணியின் செல்வாக்கைக் கண்டு ஜோ ரூட் நிச்சயம் அரண்டு போயிருப்பார். ஆகவே என்ன செய்வது என்பதில் அவருக்கு நிச்சயம் இன்று பிரச்சினை உள்ளது.
ஜோப்ரா ஆர்ச்சர் தொடக்க ஸ்பெல்லை நேற்று பிரமாதமாக வீசி பிரமாதமாக ஆடிய ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மாவை வீழ்த்தினார், பிறகு டாம் பெஸ் விராட் கோலி, ரஹானேவைக் காலி செய்து இந்திய அணியின் முதுகெலும்பை உடைத்தார். இந்தியா 73/4 என்று ஆனது. விராட் கோலி பின்னால் சென்று ஆட வேண்டிய பந்தை முன்னால் மட்டையை நீட்டி ஆடி எட்ஜ் ஆனார். பின்னால் சென்று ஆடியிருந்தால் அது ஒரு ஆபத்தில்லாத பந்து. மேலும் 48 பந்துகளில் 11 ரன்கள் என்று பம்மினால் எந்த ஸ்பின்னர்தான் அவரை ஆதிக்கம் செலுத்த முடியாது? ஏற்கெனவே ஆர்ச்சரிடம் பீட்டன் ஆனார்.

ஆனால் அதன் பிறகு ரிஷப் பந்த், முந்தைய கபில்தேவ் அதன் பிறகான ஆடம் கில்கிறிஸ்ட் பாணி எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடி பின்னி எடுத்தார். 9 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விளாசினார். இடது கை ஸ்பின்னர் ஜாக் லீச் இவரிடம் வசமாகச் சிக்கினார், இவரை மட்டும் பந்த் 5 சிக்சர்களை சடுதியில் அடித்து அவரது அனாலிசிஸை காலி செய்தார், அவர் 8 ஓவர்களில் 80 ரன்களுக்கும் மேல் கொடுத்தார்.

மறுமுனையில் புஜாரா மிக அழகாக மேலேறி வந்து மிட் ஆன் மிட்விக்கெட்டில் பிளிக்குகளையும் டாம் பெஸ்சை ஸ்பின் ஆகும் திசைகு எதிராக ஆஃப் திசையில் மிட் ஆஃபில் பவுண்டரிகளையும் விளாசினார்.  ஆண்டர்சனை இரண்டு பவுண்டரிகளையும் ஆர்ச்சரை இரண்டு பவுண்டரிகளையும் டாம் பெஸ்ஸை 2 பவுண்டரிகளையும் விளாசினார் ரிஷப் பந்த்.

புஜாரா 11  பவுண்டரிகளுடன் 73 ரன்களுடன் பிரமாதமாக ஆடி வந்த புஜாரா, பெஸ் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆடி பவுண்டரிக்கு அடிக்க முயன்ற போது ஷார்ட் லெக் பீல்டரின் முதுகில் பட்டு பர்ன்சிடம் எளிதான கேட்ச் ஆனது. ரிஷப் பந்த் 88 பந்துகளில் 91 ரன்கள் விளாசி தேவையில்லாமல் பெஸ் பந்தை குறிபார்த்து மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் தேவையில்லாத ஷாட்.

வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களையும் அஸ்வின் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 122 ரன்கள் தேவை. இன்னும் 6 ஓவர்கள் சென்றால் புதிய பந்து எடுக்கப்படும். இந்தியா 257/6 என்று உள்ளது.

இந்நிலையில்தான் பாலோ ஆன் கொடுத்தாலும் பிரச்சனை, மீண்டும் பேட் செய்தாலும் இந்தியாவின் 4வது இன்னிங்ஸ் அதிரடி விரட்டல் மிரட்டுகிறது என்று ஜோ ரூட் இரண்டக நிலையில் இருக்கிறார்.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, Cheteshwar Pujara, India Vs England, Rishabh pant

அடுத்த செய்தி