ஃபிளாட், ஸ்லோ சென்னை பிட்ச்; 100வது டெஸ்டில் ஜோ ரூட் ஹாட்ரிக் சதம்: இங்கிலாந்து ஆதிக்கம்

100வது டெஸ்ட், ஹாட்ரிக் சதம், ஜோ ரூட் சாதனை.

ஷாபாஸ் நதீம் 20 ஓவர்களில் 69 ரன்கள் விட்டுக் கொடுத்தார், இவர் வீசுவதைப் பார்த்தால் விக்கெட் எடுப்பாரா என்ற சந்தேகமே எழுகிறது.

  • Share this:
சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.

தன் 100வது டெஸ்டில் ஹாட்ரிக் சதம் எடுத்து 20வது டெஸ்ட் சதத்தை புகழ்பெற்ற சேப்பாக்கத்தில் ஜோ ரூட் எடுத்து இந்திய பவுலர்களைத் தண்ணி குடிக்க வைத்தார். 100வது டெஸ்ட்டில் சதம் எடுத்த 9வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ஜோ ரூட்.

அவர் 128 ரன்களுடன் களத்தில் இருக்கிறார், இவருடன் பிரமாதமாக ஆடிய சிப்லி 87 ரன்களில் பும்ராவின் இன்ஸ்விங்கிங் யார்க்கர் பந்தில் எல்.பி.ஆகி முதல் நாள் ஆட்ட கடைசி ஓவரில் வெளியேறியதால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

பும்ரா 18.3 ஓவர் 40 ரன்கள் 2 விக்கெட். என்று பிரமாதமாக வீசினார். சென்னை பிட்ச் ஃபிளாட்டாக, ஸ்லோவாக உள்ளது. எப்போதும் முதல் நாள் சென்னை பிட்சில் விக்கெட் எடுப்பது பெரிய சவால்தான். புதிதாக வந்த ஷாபாஸ் நதீம் 20 ஓவர்களில் 69 ரன்கள் விட்டுக் கொடுத்தார், இவர் வீசுவதைப் பார்த்தால் விக்கெட் எடுப்பாரா என்ற சந்தேகமே எழுகிறது.

வாஷிங்டன் சுந்தரை இன்று ஜோ ரூட், சிப்லி சாத்தி எடுத்து விட்டனர், அவர் 12 ஓவர்களில் 55 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இஷாந்த் சர்மா டைட்டாக வீசினாரே தவிர ஒன்றிரண்டு முறை எட்ஜ் எடுத்து பீல்டர் முன்னால் பந்து விழுந்தது. மற்றபடி அச்சுறுத்தல் இல்லை.

பும்ரா, அஸ்வின் தான் அருமையாக வீசினார்கள். பும்ரா 2 விக்கெட் அஸ்வின் 1 விக்கெட், அஸ்வினின் ஒரு சில கடைசி நேர பந்துகள் எகிறி திரும்பின, நாளை ஸ்பின் எடுக்கலாம், இந்திய அணி பேட் செய்யும் போது நிச்சயம் இங்கிலாந்து ஸ்பின்னர்கள் டாம் பெஸ், ஜாக் லீச்சிற்கு பந்துகள் திரும்பும் என்று எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு கொஞ்சம் ரிவர்ஸ் ஸ்விங்கும் எடுக்கிறது.

பும்ரா இந்தியாவில் தன் முதல் விக்கெட்டை சென்னையில் வீழ்த்தினார், டேன் லாரன்ஸ் (0), சிப்லி (87) விக்கெட்டுகளை எல்.பி.முறையில் வீழ்த்தினார் பும்ரா.

ஜோ ரூட், சிப்ளி இணைந்து 3வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்து இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்தனர்.

ஜோ ரூட் 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 197 பந்துகளில் 128 என்று ஆடிவருகிறார். ஜோ ரூட், ஸ்வீப் ஷாட், பஞ்ச், டிரைவ் என்று பிரமாதமாக ஆடினார். ஜடேஜா இருந்திருந்தால் அவரது வேகமான, ரன் கட்டுப்பாடு பவுலிங் பெரிய அளவில் உதவியிருக்கும் ஆனால் ஷாபாஸ் நதீம் அந்த அளவுக்கு இல்லை. ஒருவேளை இரண்டாவது இன்னிங்ஸில் இவருக்குப் பந்துகள் திரும்பலாம்.

350க்குள் இங்கிலாந்தை மடிய வைக்க வேண்டும் ஆனால் இன்னும் அதிரடி மன்னன் பென் ஸ்டோக்ஸ், இருக்கிறார் ஜோஸ் பட்லர் இருக்கிறார்.. ஆலி போப் இருக்கிறார், வலுவானபின் வரிசை வீரர்களைக் கொண்டது இங்கிலாந்து அணி. ஆட்ட முடிவில் இங்கிலாந்து 263/3 என்று வலுவாக உள்ளது.
Published by:Muthukumar
First published: