ஆரம்பிச்சுட்டாங்கப்பா! முதல் நாளிலேயே பந்துகள் வேகமாகத் திரும்புமாம்: 2-வது சென்னை டெஸ்ட்டிற்கு ‘உண்மை’யான குழிபிட்ச்?!

ஆரம்பிச்சுட்டாங்கப்பா! முதல் நாளிலேயே பந்துகள் வேகமாகத் திரும்புமாம்: 2-வது சென்னை டெஸ்ட்டிற்கு ‘உண்மை’யான குழிபிட்ச்?!

2வது டெஸ்ட்டுக்கான சென்னை பிட்ச்.

பிட்சில் இந்திய கேப்டன் எதிர்பார்ப்பு என்னவெனில் முதல்நாளே இல்லை முதல் பந்தே குத்தி வேகமாக திரும்ப வேண்டும். அதாவது முதலிலிருந்தே குழிப்பிட்சை போடுங்கப்பா என்கிறார்.

  • Share this:
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அந்தப் பிட்ச் சென்னை சாலைகளை நினைவூட்டியது, அதாவது ரோடு போட்ட இரண்டு நாட்களுக்கு பிரமாதமாக இருப்பது போல் தெரியும் பிறகு 500-600 தண்ணி லாரிகள் போனது போல் குண்டும் குழியுமாக மாறிவிடும், அதே போல்தான் கடந்த டெஸ்ட் போட்டியில் சென்னை பிட்ச் சாலைபோல் 2 நாட்கள் நன்றாக இருந்தது அதன் பிறகு குண்டும்குழியுமாகி உள்ளங்காலுக்குக் கீழெல்லாம் பந்து சென்றது.

இதனால் டாஸ் வென்ற அணி வெல்லும் என்ற வாய்ப்பாட்டுக்கு இணங்க இங்கிலாந்து வென்றது.

அதனால  ‘எனக்கு 2 நாள் கழிச்சு திரும்பற பிட்ச் எல்லாம் வேண்டாம், முதல் பந்திலேயே திரும்ப வேண்டும்’ என்று கூறிவிட்டதாம் இந்திய அணி நிர்வாகம். அதற்கேற்ப முதல்நாளில் முதல் ஹவரிலேயே உடையும் குழிப்பிட்ச் தயார் என்று கூறப்படுகிறது.அதனால்  நாளை நடைபெறவிருக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கு பந்துகள் முதல்நாளிலேயே வேகமாகத்திரும்பும் பிட்சாக இருக்கும் என்று சென்னை ஆடுகளத் தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் டெஸ்ட் போட்டியில் பிட்ச் செம்மண் நிறத்தில் இருந்ததால் அது உடைய கொஞ்சம் காலமெடுக்கும். ஆனால் 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தின் அடிப்பகுதி செம்மண்ணாகவும் மேல்புறம் கருப்பு மண்ணாகவும் இருக்கும். வெயில் அடிக்கும் போது கருங்களிமண் பிட்ச் வேகமாக உடையத் தொடங்கும்.

சென்னையில் செம்மண் பிட்ச் உடையக் கொஞ்சம் காலம் எடுக்கும், ஆனால் இந்தியாவில் மற்ற இடங்களில் உள்ள பிட்ச்களில் செம்மண் தரை உடையாது, அதனால் கடைசி வரை ஒரே மாதிரி இருக்கும்.

முதல் டெஸ்ட் பிட்ச் 2 நாட்களுக்கு செத்தப் பிட்ச் ஆக ரூட் இரட்டைச் சதமெடுத்தார், இங்கிலாந்து 578 ரன்கள் குவிதது, பிட்ச் உடையத் தொடங்கியதும் அஸ்வினை ஆடத்திணறி 6 விக்கெட்டுகளை அவரிடம் கொடுத்து 178 ரன்களுக்குச் சுருண்டது.

முதல் டெஸ்ட் பிட்ச் போல் போட்டால் பந்து விரைவில் தன் பளபளப்பை இழந்து பந்தின் தையல் விரைவில் பிதுங்கி பும்ரா, இஷாந்த் சர்மாவுக்கு நரகத்தையே அளிக்கும், அளித்தது. அவர்களும் பிட்சை ‘ரோடு’ என்றனர். மெல்போர்ன், பிரிஸ்பனிலெல்லாம் முதல் நாள் பிட்சில் விக்கெட் எடுக்கும் அஸ்வின் சேப்பாக்கத்தில் திணற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

இந்நிலையில் பிட்சில் இந்திய கேப்டன் எதிர்பார்ப்பு என்னவெனில் முதல்நாளே இல்லை முதல் பந்தே குத்தி வேகமாக திரும்ப வேண்டும். அதாவது முதலிலிருந்தே குழிப்பிட்சை போடுங்கப்பா என்கிறார்.

இன்னொன்று இந்த மாதிரி பிட்ச்களில் இன்னொரு விஷயம் பந்துகள் தாழ்வாக வரும்.

பிட்ச் எப்படி அமையுமோ அப்படித்தான் இந்திய அணியின் லெவன் அமையும். அக்சர் படேல், ஷாபாஸ் நதீமுக்கு பதிலாக வரவிருக்கிறார், சுந்தரா, குல்தீப்பா என்பதில்தான் சிக்கல் உள்ளது, இதில் சுந்தர் வெளியே போய் குல்தீப் வர அதிக வாய்ப்பிருப்பதாக இப்போதைக்குத் தெரிகிறது.நம் கேள்வி என்னவெனில் குழிபிட்சாக இருந்தால் சுந்தரும்தான் விக்கெட் எடுப்பார், மேலும் பேட்டிங்கில் அசாத்திய பார்மில் இருக்கிறார் சுந்தர். 2வது இன்னிங்ஸில் சுந்தருக்கு கோலி பவுலிங் தரவில்லை அதனால் குழிப்பிட்சில் அவர் எப்படி வீசுவார் என்பது தெரியவில்லை. அதனால் அக்சர் படேல் தேவையில்லாத லக்கேஜ்தான் சுந்தர், குல்தீப் யாதவ்வை வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அதே போல் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளித்து ஷர்துல் தாக்குரையும் கொண்டு வந்தால் கடைசி வரை பேட்டிங் இருக்கும்.. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் வரை வலுவான 11 பேர் பேட்டிங்கில் இருக்கின்றனர்.

2வது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற கோலிக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. நாம் கேட்பதெல்லாம் ஏன் ஒரு உண்மையான பிட்சைப் போட்டு ஆட வேண்டியதுதானே, குழிப்பிட்ச், தார்ச்சாலை பிட்சை விட்டால் வேறு கதி கிடையாதா என்பதே.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் கேப்டன்சியில் 1999-ல் 3-0 என்று இந்தியா ஒயிட் வாஷ் உதை வாங்கி இந்தியா திரும்பிய போது தென் ஆப்பிரிக்கா இங்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அப்போது பிட்ச் கமிட்டியில் இருந்தார். கேப்டன் சச்சின், தனக்கு முதல் பந்தே கண்டபடி திரும்பும் பிட்ச் வேண்டும் என்றார். ஆனால் என்ன ஆனது 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றோம், தென் ஆப்பிரிக்காவின் நிக்கி போயே என்ற சொத்தை பவுலர், பாய்காட் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ‘லாலிபாப்’ பவுலர் இந்திய அணியை சுருட்டிப்பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

அந்தத் தொடர் முடிந்தவுடன் ஸ்ரீகாந்த் சொன்னார், அதாவது ‘சச்சின் இதெல்லாம் வேண்டாம் ஒழுங்கான பிட்சை போடுவோம்’என்றாராம் ஆனால் சச்சின் ஒப்புக் கொள்ளவில்லை, இதனையடுத்து குழிபிட்சில் கடைசியில் 2 டெஸ்ட்களையும் தோற்றது நாம்தான். என்றார்.

வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான் கேப்டனுக்கு அழகு.
Published by:Muthukumar
First published: