Home /News /sports /

புஜாரா நீ நார்மலா ஆடு, நான் ஷாட் ஆடிக்கிறேன்: வெற்றிக்குப் பிறகு நடந்ததை விவரித்த ரஹானே

புஜாரா நீ நார்மலா ஆடு, நான் ஷாட் ஆடிக்கிறேன்: வெற்றிக்குப் பிறகு நடந்ததை விவரித்த ரஹானே

பிரிஸ்பன் வெற்றி குறித்து ரஹானே மட்டற்ற மகிழ்ச்சி.

பிரிஸ்பன் வெற்றி குறித்து ரஹானே மட்டற்ற மகிழ்ச்சி.

முடிவு பற்றி கவலைப்படவில்லை நாம் சிறப்பாக ஆடுவோம் என்பதுதான் செய்தி. நான் இறங்கும் போது புஜியிடம் (புஜாரா) கூறினேன், நீ நார்மலா ஆடு, நான் ஷாட் ஆடுகிறேன் என்று.

  பிரிஸ்பன் டெஸ்ட் வெற்றி இந்திய அணிக்கு ஒரு மைல்கல் வெற்றியாக, உச்சபட்ச தொடர் வெற்றியாக அமைந்ததில் கேப்டன் ரஹானேவின் கூலான அணுகுமுறையும் பெரும்பங்கு வகித்தது.

  இன்று ரோஹித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தாலும் ஷுப்மன் கில்லின் அட்டகாசமான பேக்புட் பஞ்ச், நேர் டிரைவ், புல்ஷாட் சிக்ஸ், அப்பர் கட் சிக்ஸ், கண்களில் ஒத்திக்கொள்வதாக அமைந்தது, இவரது ஆக்ரோஷ அணுகுமுறைக்கு சரியான சமச்சீர் தன்மையைக் கொடுத்தது புஜாராவின் தடுப்பாட்டம், ஷார்ட் பிட்ச் பவுன்சர் உத்தியை உடம்பில் வாங்கிக் கொண்டு எதிர்கொண்டார், பிறகு அடிக்கவும் செய்தார்.

  இருவரும் சேர்ந்து 132 ரன்களுக்கு ஸ்கோரை உயர்த்தினர். ரஹானே 1 பவுண்டரி மற்றும் ஒரு மிகப்பெரிய சிக்சருடன் 22 பந்துகளில் 24 ரன்கள் விளாசி கமின்ஸ் பந்தில் பெயினிடம் கெட்ச் ஆனார். ரஹானே தான் அவுட் ஆனவுடன் அகர்வாலை இறக்காமல் பந்த்தை இறக்கியது மாஸ்டர் ஸ்ட்ரோக், புஜாராவும் இவரும் மேலும் ஸ்கோரை வேகமாக நகர்த்தி 228 ரன்களுக்குக் கொண்டு சென்றனர் அப்போது புஜாரா, கமின்ஸ் பந்தில் எல்.பி.ஆனார். அது நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் ரிவியூவிலும் நாட் அவுட் ஆகியிருக்கும், இங்கு அவுட் என்பதால் அங்கும் அவுட், பிறகு எதற்கு ரிவியூ? நடுவர் பிழையைத் திருத்தத்தானே? இது ஒரு புரியாத புதிர்.

  மயங்க் அகர்வால் நன்றாக நேராக ஆடி வந்தார், திடீரென பித்துப் பிடிக்க ஆஸி.யின் சிறந்த பவுலர் கமின்ஸைப் போய் கவருக்கு மேல் தூக்கி அடிக்க முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.

  வாஷிங்டன் சுந்தர் தைரியம் காட்டி கமின்ஸை நேர் பவுண்டரி ஒன்றை அடித்தார், கோபமடைந்த கமின்ஸ் அடுத்த ஓவரில் ஷார்ட் பிட்ச் பவுன்சரை வீச திரும்பிக்கொண்டு விட்டார் அதை சிக்சருக்கு, அடுத்த பந்துக்கும் மட்டையை விட்டார், பந்து தேர்ட்மேனில் எகிறியது பவுண்டரிக்கு, ஆனால் இவரும் 22 ரன்களில் லயன் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பவுல்டு ஆனார். ஆனால் ஆஸ்திரேலியா கொண்டாடவில்லை. காரணம் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவை 10 ரன்களே. ரிஷப் பந்த் ஹேசில்வுட்டை நேராக பவுண்டரி அடித்த தருணம் வரலாற்று சிற்பமானது.

  இந்த வெற்றி குறித்து ரஹானே ஆட்டம் முடிந்து கூறியதாவது:

  இந்த வெற்றியின் தாக்கம் எங்களுக்கு மிகப்பெரியது. இந்த வெற்றியை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. ஒவ்வொருவரை நினைத்தும் பெருமைப் படுகிறேன். முடிவு பற்றி கவலைப்படவில்லை நாம் சிறப்பாக ஆடுவோம் என்பதுதான் செய்தி. நான் இறங்கும் போது புஜியிடம் (புஜாரா) கூறினேன், நீ நார்மலா ஆடு, நான் ஷாட் ஆடுகிறேன் என்று.

  ஏனென்றால் ரிஷப், மயங்க் இருந்தார்கள். புஜாராவுக்கு பாராட்டுகள், அழுத்தத்தை அவர் கையாண்ட விதம் அபாரம். ரிஷப் முடிவில் பின்னி விட்டார். 20 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் முக்கியம். அதனால்தான் 5 பவுலர்களை தேர்ந்தெடுத்தோம். சிராஜ் 2 டெஸ்ட், சைனி 1, தாக்குர் 1, நடராஜன் அறிமுக வீரர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  அடிலெய்டுக்குப் பிறகே என்ன நடந்தது என்பதை விவாதிக்கவே இல்லை. நல்ல அணுகுமுறையில் நம் ஆட்டத்தை ஆடுவதுதான் முக்கியம் என்று முடிவெடுத்தோம். இதெல்லாம் ஒரு அணியின் முயற்சி. ரசிகர்களுக்கும் நன்றி. 100 டெஸ்ட் போட்டிகள் கண்ட நேதன் லயனுக்கு கையெழுத்திட்ட ஜெர்சியை அளிக்க விரும்புகிறோம்.

  இவ்வாறு கூறினார் ரஹானே.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Ajinkya Rahane, India vs Australia, Rahane, Rishabh pant

  அடுத்த செய்தி