சேப்பாக்கத்தில் ரசிகர்களின் கர்ஜனையை காண காத்திருக்கிறோம்: இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 2வது கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்க இருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களின் கர்ஜனையை காண காத்திருப்பதாக, இந்திகிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக தொழில்கள், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளும் முடங்கின. அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு முக்கியமான துறை தான் விளையாட்டு.

வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒலிம்பிக் உட்பட பல்வேறு முக்கியமான விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளன. அதே போல பல கட்ட சோதனைகளுக்கு பின்னர் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு, தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இக்காலகட்டத்தில் கொரோனாவால் பல்வேறு விளையாட்டு தொடர்களும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமலே பெரும்பாலும் அரங்கேறி வருகின்றன. சிலவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி அங்கு வெற்றி வாகை சூடி இந்தியா திரும்பியது. இதனையடுத்து இங்கிலாந்து அணி இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமலே அரங்கேறியது. 2வது டெஸ்ட் போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது, ஆனால் இப்போட்டியில் 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.முதல் போட்டியில் ரசிகர்கள் இல்லாத நிலையில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. தற்போது 2வது டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் வீரர்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் கிடைக்கும். அதுவும் சென்னை ரசிகர்கள் முன்னிலையில் கிரிக்கெட் விளையாடுவதை எந்த அணியினரும் விரும்புவார்கள்.

தற்போது தோல்வியால் துவண்டு கிடக்கும் இந்திய அணிக்கு சென்னை ரசிகர்களின் உத்வேகம் வெற்றிக்கு வழிநடத்திச் செல்லும் என இந்திய கிரிக்கெட் வாரியமும் கருதுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், காலி சேர்கள் நிரம்பிய சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் கரவொலி பின்னணியில் கேட்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.

“இந்திய அணியின் ரசிகர்களே உங்களை நாங்கள் மிஸ் செய்தோம், மீண்டும் உங்களை மைதானத்தில் வரவேற்க காத்திருக்கிறோம். சேப்பாக்கத்தில் உங்கள் கர்ஜனையை கேட்க நாளை வரை காத்திருக்க முடியாது!” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 2வது கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: