186/6-லிருந்து ஆஸி.யைக் கதறவிட்ட சுந்தர், ஷர்துல் தாக்குர்: சுந்தர் சாதனை; இந்தியா 336 ரன்கள் ஆல் அவுட்

பிரிஸ்பன் டெஸ்ட்: ஷர்துல், சுந்தர் அபாரம்.

ஆஸ்திரேலியாவில் அறிமுகமான அயல் நாட்டு வீரர்களில் 7-ம் நிலையில் இறங்கும் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரை சுந்தர் எட்டி புதிய சாதனைப் படைத்துள்ளார்.

  • Share this:
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று 186/6 என்று தடுமாறி வந்த இந்திய அணியை ஷர்துல் தாக்குர் (67), வாஷிங்டன் சுந்தர் (62) ஆகியோர் தூக்கி நிறுத்தினர். கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவிடமிருந்து வெற்றி நம்பிக்கயை பறித்து விட்டனர் என்றே கூற வேண்டும். கடைசியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவில் அறிமுகமான அயல் நாட்டு வீரர்களில் 7-ம் நிலையில் இறங்கும் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரை சுந்தர் எட்டி புதிய சாதனைப் படைத்துள்ளார். அதே போல் பிரிஸ்பன் மைதானத்தில் 7வது விக்கெட்டுக்காக 1991-ம் ஆண்டு தொடரில் கபில்தேவ், மனோஜ் பிரபாகர் சேர்த்த 58 ரன்களைக் கடந்து இருவரும் 123 ரன்களை அடித்து சதக்கூட்டணி அமைத்ததும் புதிய இந்திய டெஸ்ட் சாதனையாகும்.

மொத்தம் 33 ரன்களே ஆஸி. முன்னிலை, கடந்த போட்டியில் 406 இலக்கை விரட்டி விடுவோம் ஜாக்கிரதை என்று பந்த், புஜாரா, மிரட்டியதையடுத்து இன்று 10 ஓவர்கள் ஆடி நாளை வேகமாக ரன் எடுத்து டிக்ளேர் செய்ய வேண்டும், அப்படியில்லையெனில் அவர்களை நாம் விரைவில் சுருட்டி நமக்கான வெற்றி வாய்ப்பை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

இன்று 62/2 என்று தொடங்கிய இந்திய அணி புஜாரா (25), ரஹானே(37) ஆகியோரின் உறுதியினால் 105 வரை கொண்டு சென்றனர், அப்போது புஜாரா ஹேசில்வுட் பந்து ஒன்று உள்ளே வந்து சற்றே வெளியே எடுக்க எட்ஜ் ஆகி வெளியேறினார். நல்ல அருமையான பந்து.

ரஹானே 98 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். 105/3 என்ற நிலையிலிருந்து மயங்க் அகர்வால் (38), ரஹானே ஸ்கோரை 149 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், அகர்வால் கடினமாக உழைத்து 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸுடன் நன்றாக ஆடி வந்தார். ஆனால் அப்போது ரஹானே 37 ரன்களில் ஸ்டார்க் வீசிய வைடு பந்தை அடிக்கப் போய் எட்ஜ் ஆகி மேத்யூ வேட் கேட்ச் எடுக்க வெளியேறினார், தேவையில்லாத ஷாட். தூக்கி எறிந்தார் விக்கெட்டை.

ரஹானே ஆட்டமிழந்தவுடன் பந்த் இறங்கினார். அகர்வால் நேதன் லயன் பந்தை மேலேறி வந்து லாங் ஆன் மேல் ஒரு சிக்சரை விளாசினார். உணவு இடைவேளையின் போது 161/4 என்று பதற்றமான நிலைமை இருந்தது இரண்டரை மணி நடந்த அந்த செஷனில் இந்திய அணி 34 ஓவர்களில் 99 ரன்களைச் சேர்த்து புஜாரா, ரஹானே விக்கெட்டுகளை இழந்தது.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியவுடன் முதல் ஓவரை ஹேசில்வுட் வீச 2வது பந்து ஃபுல் பந்தல்ல, டிரைவ் ஆட முடியாத பந்து. ஷார்ட் ஆஃப் லெந்த் பந்து பின்னால் சென்று ஆடியிருக்க வேண்டும், ஆனால் அகர்வால் மிக மோசமாக தூக்கி அடிக்கப் பார்ப்பது போல் மட்டையை விட்டு ஸ்மித்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 75 பந்துகளில் அவர் 38 ரன்களில் அவுட்.

அப்போதுதான் வந்தார் வாஷிங்டன் சுந்தர். இடது கை வீரர். ரிஷப் பந்த் கமின்ஸை அபாரமான ஒரு பவுண்டரி அடித்து 23 ரன்களில் ஹேசில் வுட் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வந்த ஷார்ட் பிட்ச் பந்தை உடம்பை ஒதுக்கிக் கொண்டு அப்பர் கட் செய்யப் பார்த்தார், பந்தும் நன்றாக மாட்டியது, வேகமாகச் சென்றது ஆனால் அருகிலேயே கிரீன் அபாரமான கேட்சை எடுத்தார். மிகவும் கடினமான கேட்ச்.

கதறவிட்ட ஷர்துல், சுந்தர்:

ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தருடன் இணைந்தார். ஆனால் வந்தவுடனேயே தான் யார் என்பதை காட்டினார். கமின்ஸ் வீசிய எகிறு பந்தை ஸ்கொயர் லெக் மேல் சிக்சருக்கு எகிற விட்டு அசத்தினார் கமின்ஸ் உண்மையில் ஆச்சரியமடைந்தார், காரணம் அவ்வளவு அருமையான புல் ஷாட் அது. பிறகு பின்னால் சென்று ஒரு பஞ்ச் செய்து கவரில் தள்ளி விட்டு 2 ரன்கள் ஓடினார், அதே ஓவரில் கமின்ஸ் ஓவர் பிட்ச் என்றவுடன் மிட் ஆஃபில் பந்து பவுண்டரியில் கதறியது. கமின்ஸை 12 ரன்கள் விளாசி விட்டார் ஷர்துல்.

பிரிஸ்பன்.


சுந்தர் ஒரு புறம் திடமான தடுப்பாட்டம் ஆடினார், ஷார்ட் பிட்ச் உத்தியையெல்லாம் அனாயசமாக ஊதினார், அதாவது ஆடாமல் விட்டார், அல்லது உடம்பில் வாங்கிக் கொண்டார். இப்படி ஆடிய சுந்தர் ஸ்டார்க் வீசிய 14வது ஓவரில் இரண்டு அபாரமான பவுண்டரிகளை விளாசினார். ஒன்று ஸ்கொயர் லெக் திசையில் இன்னொன்று ஆஃப் டிரைவ். நேதன் லயனையும் இருவரும் அற்புதமாக ஆடினர், சாலிட் டிபன்ஸ் என்பார்களே அப்படி ஆடினர். அதிலும் சுந்தர் பிரமாதம்.

82வது ஓவரில் ஹாசில்வுட் பந்து ஒன்று ஷர்துல் தாக்குர் மட்டையின் உள்விளிம்பில் பட்டு உடலைப் பிளந்து கொண்டு பவுண்டரிக்குச் சென்றது. முன்னதாக ஃபைன் லெக்கில் பிளிக் பவுண்டரியையும் அடித்து அசத்தினார். கமின்ஸ் ஒரு பந்தில் ரூம் கொடுக்க வாஷிங்டன் சுந்தர் இம்முறை தேர்ட்மேனில் பவுண்டரி அடித்தார்

இருவரும் தேநீர் இடைவேளை வரை இந்திய அணியை மேலும் சேதம் ஆகாமல் 253/6 என்று கொண்டு சென்றனர். தாக்குர் 33, சுந்தர் 38 என்று இருந்தனர்.

தேநீர் இடைவேளை முடிந்து ஸ்டார்க் வீசிய ஓவரில் தாக்குர் 2 பவுண்டரிகளை விளாசினார், ஒன்று மிட் ஆஃபில் பறந்தது. அடுத்து அப்பர் கட் செய்து பாயிண்ட் பவுண்டரியை அலற விட்டார். பிறகு இதே ஸ்டார்க்கின் இன்னொரு ஓவரில் இந்த போட்டியின் சிறந்த கவர் டிரைவை அடித்தார் தாக்குர், ஓவர் பிட்ச், சேவாக் பாணியில் கால்களை நகர்த்தாமல் மட்டையை இடிபோல் பந்தின் மீது இறக்க கவர் பவுண்டரியில் பந்து அலறியது.

89 பந்துகளில் 47 என்று இருந்த ஷர்துல் தாக்குர் நேதன் லயன் பந்தை மேலேறி வந்து சேவாக் பாணியில் ஒரே தூக்குத் தூக்கி சிக்ஸருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார்.
வாஷிங்டன் சுந்தர், ஸ்டார்க் பந்தை ஆஃப் திசையில் தள்ளிவிட்டு ஒருரன் எடுத்து அறிமுக டெஸ்ட்டிலேயே அரைசதம் கண்டார்.

9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 115 பந்துகளில் 67 ரன்கள் என்று ஒரு கபில்தேவ் இன்னிங்சை ஆடிய ஷர்துல் தாக்குர் கமின்ஸ் இன்கட்டரில் பவுல்டு ஆனார். இருவரும் சேர்ந்து 36 ஓவர்களில் 123 ரன்களைச் சேர்த்தனர். காயமடைந்த நவ்தீப் சைனி 5 ரன்களில் ஹேசில்வுட்டிடம் அவுட் ஆனார். வாஷிங்டன் சுந்தர் நேதன் லயனை மிகப்பிரமாதமாக ஒரு லாங் ஆன் சிக்சரை விளாசினார். அவர் 62 ரன்களில் 7 பவுண்டரி 1 சிக்சர் உடன் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். கடைசியில் மொகம்து சிராஜ் (13) ரெண்டு காட்டுக் காட்ட ஸ்கோர் 336 ரன்களுக்கு வந்தது, கடைசியில் அவர் ஹேசில்வுட்டிடம் பவுல்டு ஆனார். ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் கோபமாக ஆடினார், சிராஜை ஒரே ஓவரில் வரிசையாக 3 பவுண்டரிகள் விளாசினார். அவர் 20 ரன்களுடனும் ஹாரிஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருக்க ஆஸ்திரேலியா 21 ரன்கள் எடுத்து மொத்தமாக 54 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நாள் சுந்தர், ஷர்துல் தாக்குர் இன்னிங்ஸை மறக்க முடியாத நாளாக அமைந்தது.
Published by:Muthukumar
First published: