பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பிறகு ஷுப்மன் கில் 91 ரன்களில் நேதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா தற்போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
புஜாரா 30 ரன்களுடனும், ரஹானே 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். கடைசி நாளான இன்று இந்திய அணி 47 ஓவர்களை ஆடிவிட்டால் ஆட்டம் டிரா பார்டர்-கவாஸ்கர் டிராபியைத் தக்கவைக்கும்.
உணவு இடைவேளைக்குப் பிறகு கமின்ஸ், ஸ்டார்க் தொடங்கினர். இதில் ஸ்டார்க்கை மிட் ஆனில் புல் ஆடி கில் தன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். புஜாராவும் கொஞ்சம் ஸ்ட்ரோக் காட்டினார், இவரும் ஸ்டார்க் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை பாயிண்டில் பவுண்டரிக்கு விரட்டினார், ஆஸி. பந்துவீச்சின் பலவீனமாக ஸ்டார்க் திகழ்கிறார். மிட்செல் ஜான்சன் போல் இவர் அச்சுறுத்தல் இல்லை.
மீண்டும் ஸ்டார்க் ஷார்ட் பிட்ச் எகிறு பந்து உத்தியைக் கடைப்பிடிக்க ஷுப்மன் கில் இந்த முறை தரையோடு ஆட வேண்டாம் என்று ஒரே தூக்குத் தூக்கினார் சிக்ஸ். அடுத்த பந்தே மீண்டும் ஷார்ட் பிட்ச் ஆக இந்த முறை தேர்ட்மேனில் அப்பர் கட் பவுண்டரி பறந்தது. மீண்டும் அடுத்த பந்து ஒரு புல்ஷாட் பவுண்டரி என்று விளாசினார் கில், இதே ஓவரில் கடைசி பந்தில் புஜாராவும் அப்பர் கட் பவுண்டரி அடிக்க ஸ்டார்க் அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டார்.
கடைசியில் 146 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 91 ரன்கள் எடுத்து நேதன் லயன் ஒழுங்காக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். உடலுக்குத் தள்ளி மட்டையைக் கொண்டு சென்றார் ஆட்டமிழந்தார்.
சதம் எடுத்திருந்தால் கங்குலிக்கு பிறகு பிரிஸ்பனில் செஞ்சுரி அடித்த இந்திய வீரராக ஆகியிருப்பார் ஷுப்மன் கில். இப்போது இந்தியா 155/2. புஜாரா 34, ரஹானே 16 ஆடிவருகின்றனர், இன்று இன்னும் 45 ஒவர்களை ஓட்டினால் போதும். இந்தியா வெற்றி பெற 172 ரன்கள் தேவை.