ஜிம்பாப்வே கிரிக்கெட் நட்சத்திரம் பிரெண்டன் டெய்லர், அவரை ஸ்பாட் ஃபிக்ஸ் சூதாட்டத்தில் சிக்க வைக்க கொகெய்ன் போதை மருந்து பயன்படுத்திய வீடியோவைக் கொண்டு இந்திய தொழிலதிபர் ஒருவர் தன்னை பிளாக்மெயில் செய்தார் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை இன்று வெளியிட்டார்.
ட்விட்டரில் இது தொடராக பேசிய பிரெண்டன் டெய்லர் ஜிம்பாப்வேயில் அப்போது நடைபெறவிருந்த T20 போட்டியின் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு தான் அழைக்கப்பட்டதையும் அப்போது அவருக்கு போதை மருந்தான கொகெயின் வழங்கப்பட்டதையும் பின்னர் அடுத்த நாள் அவர் சட்டவிரோதமான பொருளைப் பயன்படுத்துவதை வீடியோவில் காட்டி சூதாட்டத்தில் ஈடுபடுமாறு மிரட்டப்பட்டதையும் போட்டு உடைத்துள்ளார். மிரட்டியது ஒரு இந்தியத் தொழில் அதிபர் என்பதையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
டெய்லர் ஸ்பாட் பிக்சிங்கிற்காக $15,000 "டெபாசிட்டாக" தனக்கு வழங்குவதாகவும் , மேலும் பணியைச் செய்து முடித்ததும் மேலும் $20,000 அளிப்பதாகவும் தொழிலதிபர் தனக்கு வலை விரித்த கதையை விவரித்துள்ளார்.
2019 அக்டோபரில் நடந்த இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அவர் புகார் அளித்ததாகக் கூறினார். அவர் ஒருபோதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்றும், அந்த நேரத்தில் தனது பாதுகாப்புக்கு பயந்து 'அங்கிருந்து வெளியேற வேண்டும்' என்பதால் $15,000 மட்டுமே எடுத்ததாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக பிரெண்டன் டெய்லர் கூறும்போது, “அக்டோபர் 2019 இன் பிற்பகுதியில், ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் ஜிம்பாப்வேயில் T20 போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க ஒரு இந்திய தொழிலதிபர் என்னை அணுகினார், மேலும் பயணத்தை மேற்கொள்ள எனக்கு USD$15,000 வழங்கப்படும் என்று அறிவுறுத்தினார்.
நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்ததை மறுக்க முடியாது. ஆனால், ஜிம்பாப்வே கிரிக்கெட்டால் 6 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், ஜிம்பாப்வேயால் சர்வதேச அரங்கில் தொடர்ந்து விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. அதனால் நான் பயணம் செய்தேன்.
அவர் சொன்னது போலவே விவாதங்கள் நடந்தன, எங்கள் கடைசி இரவில் ஹோட்டலில், தொழிலதிபரும் அவரது சகாக்களும் என்னை ஒரு கொண்டாட்ட விருந்துக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் பானங்கள் அருந்தினோம், மாலையின் போது அவர்கள் வெளிப்படையாக எனக்கு கொகெயின் வழங்கினர், அவர்களும் அதைப் பயன்படுத்தினார்கள். நான் முட்டாள்தனமாக தூண்டிலில் விழுந்தேன். என்னை வைத்து அவர்கள் விளையாடியதை நினைக்கும் போது இன்றும் என் வயிறு கலங்குகிறது.
மறுநாள் காலை, அதே ஆட்கள் எனது ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, கொகெயின் சாப்பிட்ட அந்த இரவு எடுத்த வீடியோவை என்னிடம் காட்டி, அவர்களுக்கான சர்வதேச போட்டிகளில் நான் ஸ்பாட் ஃபிக்ஸ் செய்யவில்லை என்றால், அந்த வீடியோவை பொதுமக்களுக்கு வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள்.
அவர்கள் 6 பேர் இருந்தனர், நான் என் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டேன். பயத்தினால் என் வாழ்க்கையையே மாற்றிய அந்தச் சூழ்நிலையின் கைதியானேன். எனக்கு 15,000 டாலர்கள் கொடுத்தனர். அது டெபாசிட்தானாம், நான் சூதாட்டத்தில் ஈடுபட்டு அவர்கள் சொல்படி நடந்தால் மேலும் 20,000 டாலர்கள் தருவதாகக் கூறினர். அப்போது எனக்கு வேறு வழியில்லை, அவர்களிடம் மறுக்க முடியவில்லை. நான் இங்கிருந்து எப்படியாவது எஸ்கேப் ஆகவேண்டும் என்று ஒப்புக் கொண்டேன்.
நான் எந்த விதமான மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபட்டதில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். நான் தவறுகள் செய்திருக்கலாம் ஆனால் நான் ஏமாற்றுபவன் அல்ல. அழகான கிரிக்கெட் விளையாட்டின் மீதான எனது நேசம் என் வழியில் வீசப்படும் எந்த அச்சுறுத்தல்களையும் விட அதிகமாக உள்ளது," என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவருக்கு தடை விதிக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாகவும், அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். "சுத்தமாக இருக்கவும், என் வாழ்க்கையை மீண்டும் நேர்வழியில் கொண்டு வரவும்" மறுவாழ்வு மையத்தில் இணைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.