முகப்பு /செய்தி /விளையாட்டு / முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி… அஷ்வின், ஜடேஜா சுழலில் அடங்கியது ஆஸ்திரேலியா…

முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி… அஷ்வின், ஜடேஜா சுழலில் அடங்கியது ஆஸ்திரேலியா…

இந்திய அணி

இந்திய அணி

முதல் போட்டி வெற்றியைத் தொடர்ந்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் நம்பர்-1 அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் அடங்கிப் போயுள்ளது.   நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டமான இன்று, 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்களை எடுத்தார். அடுத்தபடியாக அக்சர் படேல் 84 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 70 ரன்களும் எடுத்தனர். 273 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது இரண்டாவது இன்னிங்சை இன்று விளையாடியது. தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்து வெளியேறினர். உஸ்மான் கவாஜா 5 ரன்களும், டேவிட் வார்னர் 10 ரன்களும் எடுத்தனர். அடுத்துவந்த மார்னஸ் லபுஸ்சேன் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜாவின் சுழலில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய மேட் ரென்ஷா,பீட்டர் ஹேன்ஸ்கோம், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகிய மூவரும் அஷ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், இன்னொரு பக்கம் அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை காக்க போராடினார். இருப்பினும் 32.3- ஆவது ஓவரில் 91 ரன்கள் எடுத்திருந்போது ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றி வாகை சூடியுள்ளது. முதல் போட்டி வெற்றியைத் தொடர்ந்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் 51 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 2 ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

First published:

Tags: Cricket, Ind Vs Aus, India vs Australia