Home /News /sports /

‘கோலி தனது கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது’: முன்னாள் வீரர் கருத்து

‘கோலி தனது கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது’: முன்னாள் வீரர் கருத்து

அஜிங்கியா ரகானே - விராட் கோலி

அஜிங்கியா ரகானே - விராட் கோலி

ரகானேவின் கேப்டன்ஸியை டைகர் பட்டோடியுடன் ஒப்பிட்டு புகழ்ந்த பிஷன் சிங் பேடி, கோலி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் தொடரில் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க கோலி முன்வர வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும் ...
இங்கிலாந்துக்கு எதிராக எதிர்வரும் தொடரில் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் அளிக்க விராட் கோலி முன்வரவேண்டும் என முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சாமானியர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் அசைபோட்டது சமீபத்திய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடராகத்தான் இருக்கும். அதிக அனுபவம் இல்லாத, புதுமுக வீரர்களை வைத்துக் கொண்டே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதற்காக இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய ஊடகங்களே கொண்டாடியது வியப்பாக அமைந்தது.

இத்தொடரில் தமிழக வீரர்கள் நடராஜன் - வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்கள் ஜொலித்தனர். இவர்களையெல்லாம் தாண்டி விராட் கோலி இல்லாத நிலையிலும் இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் அஜிங்கியா ரகானே. 36 ரன்களில் சுருண்டு மிக மோசமான நிலையை சந்தித்த இந்திய அணி அடுத்த போட்டியிலேயே வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியதில் கேப்டனாக செயல்பட்ட ரகானேவின் பங்கு அளப்பரியது. 8 வீரர்கள் காயத்தால் விலக நேரிட்ட போதும் அனுபவமற்ற இளம் வீரர்களை அவர் பயன்படுத்திய விதம், ஃபீல்டிங் வியூகம் அமைத்த விதம் என ரகானேவை பெரிதும் பாராட்டினர் கிரிக்கெட் வல்லுனர்கள்.

இந்திய அணி வீரர்களுடன் ரகானே


இந்திய அணியின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிஷன் சிங் பேடி அஜிங்கியா ரகானேவை வெகுவாக பாராட்டினார்.

ரகானேவின் கேப்டன்ஸியை டைகர் பட்டோடியுடன் ஒப்பிட்டு புகழ்ந்த பிஷன் சிங் பேடி, ரகானேவின் கேப்டன்ஸியின் கீழ் வீரர்கள் செழிப்பாக வளருவதாக தெரிவித்தார்.

மேலும், கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்கி விட்டு பேட்டிங்கில் மட்டும் விராட் கோலி கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிஷன் சிங் பேடி கூறினார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிஷன் சிங் பேடி கூறியிருப்பதாவது, “இந்த தொடரின் போது ரகானேவை நான் கூர்ந்து கவனித்தேன். எந்தவொரு கேப்டனுக்கும் தனிச்சிறப்பு என்னவென்றால், பந்துவீச்சாளர்களை கையாளும் திறன் தான், அதில் தான் ரகானே சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

கவாஸ்கருடன் ரகானே


கேப்டனின் பந்துவீச்சு மாற்றங்கள் மற்றும் பீல்டிங் அமைப்புகளை மதிப்பிடுவதற்கு மூன்று டெஸ்ட்கள் போதுமான நேரம். கடுமையாக முயற்சித்தும் என்னைப் போன்ற கடும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் வகையில் ஒரு வாய்ப்பை கூட ரகானே வழங்கவில்லை.

ஆஸ்திரேலிய வீரர் ரிச்சி பெர்னார்டின் ( Richie Benaud) பிரபலமான ஒரு சொல்லாடல் உண்டு, கேப்டன்ஷிப்பில் ஜொலிக்க 90% அதிர்ஷ்டமும், 10% திறன் இருந்தால் போதுமானது என்பார். ஆனால் ரகானேவிடம் 50% அதிர்ஷ்டமும், 50% திறனும் உள்ளது.

பிஷன் சிங் பேடி


எனவே கோலி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் தொடரில் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க கோலி முன்வர வேண்டும் என பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Ajinkya Rahane, Captain Virat Kohli

அடுத்த செய்தி