முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் விலகல்… ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் விலகல்… ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

அடுத்த மாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ள இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், டேவிட் வார்னர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 3 மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், வார்னரின் இழப்பு அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை எளிதாக வென்றது.

இவ்விரு போட்டிகளும் 3 நாட்களில் முடிந்தன. அந்தளவுக்கு ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக இருந்ததை காண முடிந்தது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வரும் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியிலும், கடைசி போட்டியிலும் பங்கேற்க உள்ள இந்திய அணி சில நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக கருதப்படும் டேவிட் வார்னர், காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அவருக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சில வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து வார்னர் விலகியுள்ளார். அடுத்த மாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ள இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், டேவிட் வார்னர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் அணியில் இணைகின்றனர். இவர்கள் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket