ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 571 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த விராட் கோலி 14 ரன்னில் இரட்டை சதத்தை தவற விட்டார். இன்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 3 ரன்களை எடுத்துள்ளது. நாளை ஒருநாள் மட்டும் ஆட்டம் இருப்பதால், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இந்திய அணி எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 4ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
உஸ்மான் கவாஜாவின் 180 ரன்கள், கேமரூன் க்ரீனின் 114 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது.
இதையடுத்து விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 571 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 186 ரன்களும், சுப்மன் கில் 128 ரன்களும் எடுத்தனர். இதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் மேத்யூ குன்மே 18 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமலும், டிராவிஸ் ஹெட் 18 பந்தில் 3 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket