முகப்பு /செய்தி /விளையாட்டு / அகமதாபாத் டெஸ்ட் : 41 ஆண்டுகால ரிக்கார்டை முறியடித்த நாதன் லியோன்…

அகமதாபாத் டெஸ்ட் : 41 ஆண்டுகால ரிக்கார்டை முறியடித்த நாதன் லியோன்…

நாதன் லியோன்

நாதன் லியோன்

கே.எஸ். பரத்தின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், நாதன் லியோன் இந்தியாவில் நடந்த போட்டிகளில் 55 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நாதன் லியோன் 41 ஆண்டு கால சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் வல்லுனர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா என 2 அணிகளும் ரன்களை குவித்துள்ளன. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களும், இந்திய அணி 571 ரன்களையும் எடுத்துள்ளன.

இன்னும் ஒருநாள் ஆட்டமே மீதம் உள்ள நிலையில் இந்த போட்டி டிரா ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. இன்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. நாளைய ஆட்டத்தில் அந்த அணி பெரும்பாலும் தோல்வியை தவிர்க்க விக்கெட் இழப்பை தடுக்க போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் கே.எஸ். பரத்தின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், நாதன் லியோன் இந்தியாவில் நடந்த போட்டிகளில் 55 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார்.

இது வெளிநாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் இந்திய மண்ணில் எடுத்த அதிகமான விக்கெட்டாக அமைந்தது. முன்னதாக 41 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் டெரிக் அண்டர்வுட் எடுத்த 54 விக்கெட்டுகளே சாதனையாக இருந்தது. அதனை லியோன் இன்று முறியடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விராட் கோலி 14 ரன்னில் இரட்டை சதத்தை தவற விட்டார். 3 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இன்று சதம் அடித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

First published:

Tags: Cricket