• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வர வைத்த சச்சின்: ரெய்னா ருசிகரம்

என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வர வைத்த சச்சின்: ரெய்னா ருசிகரம்

 சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம்.

சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம்.

அடுத்த நாள், என்னை, யுவராஜ், ஹர்பஜனை உணவு விடுதிக்கு இட்டுச் சென்றார் சச்சின். அது ஒரு ஜப்பானிய உணவு விடுதி... சுரேஷ் ரெய்னாவின் நெகிழ்ச்சிப்பதிவு.

  • Share this:
லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனக்குப் பயிற்சி அளித்ததையும் அவருடன் ஆடிய டெஸ்ட் போட்டியையும் அவர் தனக்கு அளித்த ஹோட்டல் விருந்து, அறிவுரைகளை சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

தி கிரிக்கெட் மந்த்லிக்கு அவர் கூறியிருப்பதாவது:

மும்பையில் 2001-ம் ஆண்டு என்று நினைக்கிறேன், டைம் ஷீல்டு டிராபிக்காகச் சென்றிருந்தேன். அப்போது அதுல் ரணாதே என்னிடம் சச்சின் இங்கு பயிற்சி செய்ய வந்தாலும் வருவார் என்றார்.

நான் சச்சினைப் பார்த்து பார்த்தே கிரிக்கெட்டை வளர்த்தெடுத்துக் கொண்டேன். ஷார்ஜா மணற்புயல் அதிரடியை மறக்க முடியுமா? 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சென்ற போது நான், என் சகோதரர்கள் காலையில் டிவியைப் போட்டு அமர்ந்து விடுவோம். சச்சினின் நேர் ட்ரைவ், அவரது முழங்கை லாவகம் நிமிர்ந்த தலை, கால் நகர்த்தல் அனைத்தும் கச்சிதமாக இருந்ததைக் கண்டு மிரண்டிருக்கிறேன்.

ரணாதேவிடம் சச்சினைச் சந்திக்க வேண்டும் என்றேன், அப்போது சஹாரா ஜெர்சியில், எம்.ஆர்.எப் மட்டைகளுடன் காட்சியளித்தார். அவரை ரசிகராகச் சந்தித்தேன், ஆனால் அதுதான் என் கனவை நினைவாக்கியது.

அவருடன் ஆடியது இன்றும் எனக்கு சிலிர்க்கும் தருணம் குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றி. 2008-ல் ஆஸ்திரேலியாவில் சிபி தொடர் வெற்றி. நியூஸிலாந்தில் ஒருநாள், டெஸ்ட் தொடரை வென்றது. நம்பர் 1 டெஸ்ட் அணியாக வந்தது எல்லாம் அருமையான தருணங்கள்.

சச்சின் 100வது சர்வதேச சதத்தை எடுக்கும் போது அவருடன் களத்தில் நான் தான் இருந்தேன் என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்க இனிமையாக உள்ளது.

2010-ல் சச்சினுடன் இலங்கை பயணத்தில் என் அறிமுக டெஸ்ட் போட்டியில் நான் சதம் எடுத்தேன், சச்சின் இரட்டைச் சதம், எனக்கும் அவருக்கும் மிகப்பெரிய கூட்டணி. அடுத்த நாள், என்னை, யுவராஜ், ஹர்பஜனை உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார் சச்சின். அது ஒரு ஜப்பானிய உணவு விடுதி. நான் எப்போதுமே ரொட்டி-பருப்பு, ராஜ்மா , சாத வகையைச் சேர்ந்தவன். ஆனால் வாஸாபி வந்தது, யுவி, சச்சின், ஹர்பஜன் அனைவரும் என்னை சாப்பிடு சுரேஷ் என்றனர். நான் இரண்டு பன்களை எடுத்து இடையில் வசாபியை வைத்துக் கடித்தேன். அடுத்த மணி நேரத்தில் என் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்துகொண்டே இருந்தது. இதை மறக்க முடியாது.

சச்சின் ஓய்வு பெற்றாலும் எங்கள் இருவருக்குமான பிணைப்பு இப்போதும் வலுவாகவே உள்ளது.

2014 இங்கிலாந்து தொடருக்காக மும்பை வந்து அவரிடம் பயிற்சி எடுத்துக் கொள்ள முடிவெடுத்தேன். இரண்டு வாரங்கள் முழுதும் என்னுடன் தான் இருந்தார். தினமும் சச்சின், சமீர் டீகே ஆகியோருடன் 3 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போதுதான் சச்சின் சொன்னார், ‘உன்னை நம்பு, நீ அதிசயங்கள் பல நிகழ்த்த முடியும்” என்றார். அன்றைய தினமே என் முழங்கையில் believe என்று பச்சைக் குத்தினேன். அந்த இரண்டு வாரங்கள் என்னை முற்றிலும் வேறு ஒரு பிரதேசத்துக்கு உருமாற்றியது.

இங்கிலாந்தில் ஒருநாள் போட்டியில் 75 பந்துகளில் சதம் அடித்தேன். ஆட்ட நாயகனானேன், தொடரை வென்றோம், தொடர் நாயகனும் நானே, அப்போது என் போனைப் பார்த்தேன் அதில் சச்சின் ‘பிலீவ் இன் யுவர்செல்ஃப்’என்று மெசேஜ் போட்டிருந்தார்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: