அறிமுக தொடரிலேயே டபிள்யூ.பி.எல். அணிகள் சாதனை படைத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரைப் போன்று மகளிர் அணிகளுக்கான டி20 போட்டித் தொடரை இந்த ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. விறுவிறுப்பான போட்டிகள், அனல் பறக்கும் ஆட்டம், பிபியை எகிறச் செய்யும் கடைசி ஓவர்கள் என ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஆண்டுதோறும் இந்த தொடர் திருவிழாவைப் போல் நடத்தப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரை பின்பற்றி வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, துபாய், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் ப்ரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மகளிர் அணிகளுக்கான பிரீமியர் லீக்கை இந்தாண்டு முதல் பிசிசிஐ நடத்துகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
மகளிர் ஐபிஎல் போட்டிக்கு டபிள்யூ.பி.எல்.(WPL Womens Premier League) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது கிடைத்த ஏலத்தொகையை விட தற்போது டபிள்யூ.பி.எல். அணிகளுக்கு அதிக தொகை கிடைத்துள்ளது. ஏலத்தின் மூலம் ரூ. 4669.99 கோடி கிடைத்திருக்கிறது. டபிள்யூ பிஎல் அணிகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தொடர் மூலமாக மகளிர் கிரிக்கெட்டுக்கான புரட்சி பிறந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். டபிள்யூபிஎல் தொடர் பிசிசிஐ எதிர்பார்த்திராத அளவுக்கு வரவேற்பை பெற்று ஆச்சரியம் அளித்துள்ளது. இந்த தொடரை ஒளிபரப்பும் உரிமையை ரிலையன்ஸின் வயாகாம் நிறுவனம் ரூ. 951 கோடிக்கு 5 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது. டபிள்யூ பி.எல். தொடரில் தற்போது 5 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த அணிகளை மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, அதானி குரூப் மற்றும் கேப்ரி குளோபல் ஆகியவை வாங்கியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket