ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் போட்டியில் டேவிட் மலன் அடித்த சிக்ஸர் மைதானத்தில் இருந்தவரின் பீர் கப்பில் விழுந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக குறிப்பிட்ட அளவிலான ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் போது ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை சேர்ந்த டேவிட் மலன் அதிரடியாக ஆடி வந்தார். இந்த போட்டியின் போது டேவிட் மலன் அடித்த சிக்ஸரை மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கையில் பட்டு நழுவி அருகே அமர்ந்திருந்த முதியவரின் பீர் கப்பில் விழுந்துவிட்டது. பீர் கப்பில் விழுந்த பந்தை தரமால் இருந்த முதியவர், பந்துடன் கப்பில் இருந்த பீரை குடித்த பின் தான் அந்த பந்தை ஒப்படைத்தார்.
ஆனால் பந்து பீரில் விழுந்ததால் அதை பயன்படுத்த முடியாமல் போனது. இதையடுத்து மாற்றுபந்தில் போட்டி மீண்டும் நடைபெற்றது. மைதானத்தில் நடைபெற்ற இந்த சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த போட்டியில் மலன் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.
இந்தப் போட்டியில் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.