முகப்பு /செய்தி /விளையாட்டு / 3-ஆவது டி20 போட்டியிலும் வங்கதேச அணி வெற்றி… உலக சாம்பியன் இங்கிலாந்து அணி வாஷ் அவுட்

3-ஆவது டி20 போட்டியிலும் வங்கதேச அணி வெற்றி… உலக சாம்பியன் இங்கிலாந்து அணி வாஷ் அவுட்

இங்கிலாந்து அணியின் விக்கெட் விழுந்ததை கொண்டாடும் வங்கதேச வீரர்கள்

இங்கிலாந்து அணியின் விக்கெட் விழுந்ததை கொண்டாடும் வங்கதேச வீரர்கள்

மிக சிறப்பாக பந்துவீசிய வங்கதேச அணி, ரன்களை குவிக்க விடாமல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை 3 ஆவது டி20 போட்டியிலும் வீழ்த்தி வங்கதேச அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது. உலக சாம்பியன் வாஷ் அவுட் ஆகியிருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடியுள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேச அணி தொடரை வென்ற நிலையில் இன்று 3 ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் மற்றும் ரோனி தலுக்தார் ஆகியோர் களத்தில் இறங்கினர். ரோனி 22 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இணைந்த லிட்டன் தாஸ் – நஜ்முல் ஹொசைன் சான்ட்டோ இணை பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. அணி 139 ரன்னை எட்டியபோது லிட்டன் தாஸ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடத் தொடங்கியது. அந்த அணியின் ஃபிலிப் சான்ட்னர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இணைந்த கேப்டன் ஜோஸ் பட்லர் – டேவிட் மாலன் இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 13.1 ஓவரில் அணி 100 ரன்களை எட்டியபோது 53 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மாலன் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் கேப்டன் பட்லர் 40 ரன்னில் வெளியேறினார். இதன்பின்னர் மிக சிறப்பாக பந்துவீசிய வங்கதேச அணி, ரன்களை குவிக்க விடாமல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டி20 போட்டிகளில் உலக சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து அணி வங்க தேசத்திற்கு எதிரான 3 போட்டிகளிலும் தோல்வியடைந்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

First published:

Tags: Cricket