Home /News /sports /

வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் இயன் சாப்பல்- இனி நல்ல வர்ணனையை கேட்க முடியுமா?

வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் இயன் சாப்பல்- இனி நல்ல வர்ணனையை கேட்க முடியுமா?

இயன் சாப்பல்

இயன் சாப்பல்

சுமார் 40 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையை கிரிக்கெட்டின் அனைத்து நுட்பங்களுடனும் நுணுக்கங்களுடனும் வர்ணனை அறையிலிருந்து நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டனும் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வர்ணனையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
சுமார் 40 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையை கிரிக்கெட்டின் அனைத்து நுட்பங்களுடனும் நுணுக்கங்களுடனும் வர்ணனை அறையிலிருந்து நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டனும் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வர்ணனையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

75 டெஸ்ட் போட்டிகளில் ஆடி கேப்டன்சியில் புதியன புகுத்திய இயன் சாப்பல் 5000 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியை 30 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தினார். 1980-ல் சேனல் 9-ல் இயன் சாப்பல் கிரேட் ரிச்சி பெனோ, பில் லாரி, டோனி கிரேக் ஆகியோருடன் வர்ணனையில் இணைந்தார். இப்போது இயன் சாப்பலுக்கு வயது 78.

“கிரிக்கெட் ஆடிய காலத்தில் கூட கிரிக்கெட் போதும் என்று ஒரு கணத்தில் முடிவெடுத்தேன். அன்றைய ஆட்டம் முடியும் போது மணி மாலை 5:11. ஆம் அப்போது முடிவெடுத்தேன், எப்போது மணியை பார்க்க ஆரம்பித்தேனோ நான் ஓய்வு பெற வேண்டும் என்று முடிவெடுத்தேன்.” என்றார்.

இவரது வர்ணனையை மறக்க முடியாது, மிகவும் கூர்மையாக பேட்டர், பவுலர், கேப்டன்களின் நகர்வை அவதானிப்பவர். ஒருமுறை ஷார்ஜாவில் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயங்கரமான இன்னிங்ஸை ஆடிய போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் காஸ்பரோவிச் ஒரு பந்தை வீச சச்சின் நேராக ஷார்ஜா மேற்கூரைக்கு அடித்தார்.

அடுத்த பந்தை காஸ்பரோவிச் கோபத்தில் ஷார்ட் பிட்ச் பவுன்சராக வீச சச்சின் அதற்குத் தயாராகி பந்தை இப்போது ஸ்கொயர் லெக் மேல் ஷார்ஜா மேற்கூரைக்கு அனுப்பினார், அப்போது இயன் சாப்பல், காஸ்பரோவிச் பவுலிங்கை ‘ரிடிகுலஸ்’ என்று வர்ணித்ததோடு, முதல் பந்தை சிக்ஸ் அடித்தால் அடுத்து பவுன்சர் வரும் என்று சச்சினுக்குத் தெரியாதா, அப்படியா வீசுவது காஸ்பரோவிச்சின் மோசமான தருணம் என்று வர்ணித்தார்.

அதே போல் ஆஸ்திரேலியாவில் சச்சின் புகழ்பெற்றிருந்த சமயம் பிரியன் லாராவும் சிட்னியில் ஒரு பெரிய 270 என்ற செஞ்சுரியை அடித்தார். அப்போது கூட வர்ணனையில் இருந்த இயன் சாப்பல், ‘just like Sachin Tendulkar, but not quite that talent' என்று சச்சினை லாராவை விட ஒரு படிமேலே வைத்து கூறியதையும் மறக்க முடியாது.

பீல்டிங்கில் நல்ல உத்தியைக் கடைப்பிடித்தால் கூட அருமையாகப் பாராட்டுவார் இயன் சாப்பல். ஒரு முறை இந்தியாவின் வெங்கடபதி ராஜு டீப்பில் நன்றாக பீல்ட் செய்த போது, வெங்கடபதி ராஜு நல்ல டெக்னிக்குடன் பீல்ட் செய்கிறார் என்று பாராட்டினார்.

இந்திய அணி அங்கு போய் தோனி கேப்டன்சியில் உதை வாங்கிய போது தோனியின் கேப்டன்சி உத்திகளை கடுமையாக விமர்சனம் செய்தார், ஆனால் இதே இயன் சாப்பல்தான் தோனியை கேப்டனாக்கியதையும் பாராட்டினார்.

சுனில் கவாஸ்கர் எதிர்கொண்ட உலக வேகப்பந்து வீச்சாளர்களை பட்டியலிட்டு இவர்களை ஒரு பேட்டர் தொடக்கத்தில் முதல் பந்தை எதிர்கொள்ளும் தைரியம் கவாஸ்கர் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று கவாஸ்கரை புகழ்ந்தார்.

மற்றபடி இவரது கிரேட்கள் பட்டியலில் டான் பிராட்மேன், தென் ஆப்பிரிக்காவின் பேரி ரிச்சர்ட்ஸ், மேற்கிந்திய தீவுகளின் கேரி சோபர்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர், சச்சின், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங் என்று பட்டியல் நீளும். பவுலிங்கில் இவருக்கு டெனிஸ் லில்லி, தாம்சன், எல்லாவற்றுக்கும் மேலாக வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, வெஸ்ட் இண்டீஸின் 80களின் பவுலர்கள் என்று இந்தப் பட்டியலும் நீளும்.

சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர்தான் இயன் சாப்பல், டான் பிராட்மேன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் புகுந்து கஞ்சத்தனம் காட்டியதால்தான் கெரி பேக்கர் என்ற ஒரு நபர் தனியார் கிரிக்கெட்டை தொடங்க வீரர்கள் அதன் பக்கம் சாய்ந்தனர் என்று ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் தந்தையாகக் கருதப்படும் டான் பிராட்மேனையே எதிர்கொண்டார்.

அதே போல் டான் பிராட்மேனே தன்னைப் போல் ஆடுவதாகக் கூறிய சச்சின் டெண்டுல்கரையும் ஒருமுறை, ‘சச்சின் ஒருமுறை கண்ணாடியில் தன் உடலைப் பார்த்து விட்டு ஓய்வு பெற முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறினார். சச்சின் டெண்டுல்கர் கடைசியாக மே.இ.தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் ஆடிய போது இவரை வர்ணனைக்காக பிசிசிஐ அழைத்தது, ஆனால் ஒரு நிபந்தனை விதித்தது, சச்சினை விமர்சனம் செய்யக் கூடாது என்ற நிபந்தனைதான் அது, இயன் சாப்பல் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் வர்ணனைக்கும் வரவில்லை என்றார்.

நெஞ்சில் துணிவும், நேர்மையும் அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசுபவராகவும் இருந்த இயன் சாப்பல் குரலை இனி வர்ணனையில் கேட்க முடியாது என்பது வேதனை தருவதாகவே உள்ளது.
Published by:Muthukumar
First published:

Tags: Australia, Cricket

அடுத்த செய்தி