முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20 போட்டிகள் ஆதிக்கம்… டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த டேவிட் வார்னர்…

டி20 போட்டிகள் ஆதிக்கம்… டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த டேவிட் வார்னர்…

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் கவலை தெரிவித்துள்ளார். அவரது பேட்டி கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. இதனால் 5 நாட்களுக்கு நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஒருநாள் போட்டிகளை காண்பதற்கான ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் குறையத் தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த 3ஆவது ஒருநாள் போட்டியை உதாரணமாக சொல்லலாம். திருவனந்தபுரத்தில் நடந்த இந்த போட்டியைக் காண மைதானத்திற்குள் பாதிக்கும் குறைவானவர்களே வந்திருந்தனர்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எதிர்காலம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- கிரிக்கெட் வீரர்கள் சிலரிடம் பேசினேன். அவர்கள் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுகிறார்கள். இன்னும் 5 – 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளின் நிலைமை என்னவாகும் என்றே தெரியவில்லை. இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஏனென்றால் டெஸ்ட் போட்டிகள்தான் கிரிக்கெட்டின் பாரம்பரியம். அது தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. அடுத்தடுத்த போட்டிகள் டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடத்தப்படவுள்ளன. இந்த தொடர் மார்ச் 13-ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதன்பின்னர் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

First published:

Tags: Cricket