ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனை!

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று புதிய உலக சாதனை படைத்தது ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி.

  • Share this:
நியூசிலாந்தின் Mount Maunganui-ல் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா மகளிர் அணியினர் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்தனர். நியூசிலாந்துக்கு எதிரான இந்த வெற்றி ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக பெற்ற 22வது வெற்றி ஆகும்.

இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த அளவில் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச வெற்றி என்ற உலக சாதனையை ஆஸ்திரேலிய மகளிர் அணி படைத்துள்ளது. 2003ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 21 வெற்றிகளை குவித்திருந்தது. தற்போது அந்த நீண்ட கால சாதனையை ஆஸ்திரேலியாவின் மகளிர் அணியினர் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.கடைசியாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியினர் தோல்வியை தழுவியிருந்தது 2017 அக்டோபரில் தான்.

ஆஸ்திரேலிய மகளிர் அணியினரின் இந்த தொடர் வெற்றி இந்தியாவின் பரோடா மைதானத்தில் கடந்த 2018 மார்ச்சில் தொடங்கியது. இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது. அதன் பிறகு பாகிஸ்தான் (3-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (3-0), மேற்கு இந்திய தீவுகள்(3-0), இலங்கை (3-0), நியூசிலாந்து (3-0) என தொடர்ந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.தற்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று தனது தொடர் வெற்றிகளின் எண்ணிக்கையை 22 ஆக உயர்த்தி புதிய சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நியூசிலாந்தின் தொடக்க வீராங்கனை லாரன் டவுன் 134 பந்துகளில் 90 ரன்களை குவித்து அந்த அணிக்கான முன்னிலை ரன் குவித்த வீராங்கனையானார். கேப்டன் ஏமி 32 ரன்களும், அமீலியா கெர் 33 ரன்களும் எடுத்தனர். 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது.தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஆலிசா ஹீலி 68 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். எலிசா பெரி மற்றும் கார்ட்னர் அரை சதம் கண்டனர். 69 பந்துகள் மிச்சம் இருக்கும் போதே 38.3 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றியை ருசித்தது.
Published by:Arun
First published: