ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சாம்பியன் யார் என்பதை நிரூபிப்பதற்கான, இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஆசிய கோப்பை 14-வது கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று மூலம் நடைபெற்ற போட்டியில், இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டியில் அடியெடுத்து வைத்தது. அதேவேளையில், சூப்பர் 4 சுற்றில், வாழ்வா சாவா என்ற நிலையில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேச அணி இறுதி வாய்ப்பை எட்டிப் பிடித்தது. இதையடுத்து, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதவுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, லீக், சூப்பர் 4 சுற்றில் தொடர் வெற்றியை பதிவு செய்த போதும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியில், போராடி சமன் செய்தது. இதில் ரோஹித், தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி என வலுவான பேட்டிங் வரிசையுடன், பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப், ஜடேஜா ஆகியோர் பந்து வீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர்.
அதே வேளையில், வங்கதேச அணியிலும், லித்தன் தாஸ், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், முகமதுல்லா இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவால் அளிக்க கூடும். மேலும் பந்துவீச்சில் முஷ்தபிஜுர் ரஹ்மான் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறார்.
இருந்த போதும், சூப்பர் 4 சுற்றில், இந்திய அணியிடம் வங்கதேசம் தோல்வியைத் தழுவியுள்ளது.
தற்போது 7-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில இந்தியா உள்ளது. 3-வது முறை இறுதிக்குள் நுழைந்துள்ள வங்கதேசம் முதல் முறை பட்டம் வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. அத்துடன், கடந்த 2016 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி, இந்தியா மகுடம் சூடியது. இதற்கு, தற்போது வங்கதேசம் பதிலடி கொடுக்குமா அல்லது இந்தியா ஆதிக்கத்தை நிலைநாட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. துபாயில் இந்தியா நேரப்படி மாலை 5 மணிக்கு இறுதி போட்டி நடைபெறுகிறது.
ALSO WATCH...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.