Home /News /sports /

ஸ்லோ பிட்சில் எப்படி பந்து வீச வேண்டும்-கற்றுக் கொடுத்த இலங்கை- விவரம் புரியாமல் ஆடிய இந்தியா

ஸ்லோ பிட்சில் எப்படி பந்து வீச வேண்டும்-கற்றுக் கொடுத்த இலங்கை- விவரம் புரியாமல் ஆடிய இந்தியா

இலங்கை

இலங்கை

அனைத்து பில்ட்-அப்-களும் முடிந்து விட்டன. இந்திய அணி ஆசியக் கோப்பை 2022 இறுதிக்குள் நுழைவது ஏறக்குறைய முடிந்து விட்டது. துபாயில் நேற்று ஆக மந்தமான ஸ்லோ பிட்சில் இலங்கை அணி நிலைமகளை அட்டகாசமாக பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்தி இறுதிக்குள் சென்று விட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அனைத்து பில்ட்-அப்-களும் முடிந்து விட்டன. இந்திய அணி ஆசியக் கோப்பை 2022 இறுதிக்குள் நுழைவது ஏறக்குறைய முடிந்து விட்டது. துபாயில் நேற்று ஆக மந்தமான ஸ்லோ பிட்சில் இலங்கை அணி நிலைமகளை அட்டகாசமாக பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்தி இறுதிக்குள் சென்று விட்டனர், மாறாக இந்திய அணியின் கோலி முதல் தொடங்கும் மிடில் ஆர்டர் விவரம் பற்றாமல் ஆடி தோல்வி தழுவினர்.

ஆசியக் கோப்பைக்கு முன்பாக பில்ட்-அப் கொடுக்கப்பட்டு நிஜப்புலிகளாக ஊதிப்பெருக்கப்பட்ட இந்திய அணியினர் காகிதப் புலிகளானதுதான் மிச்சம். டாஸில் தோற்றதை ஒன்றும் செய்ய முடியாது. சேசிங்கில் இந்த மைதானத்தில் ஹாங்காங்கும், ஸ்காட்லாந்தும் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. ஆகவே சேசிங் வெற்றி என்பது இங்கு வழக்கம், அதன்படி இலங்கை வென்றது என்று எளிதாக ஒரு பார்முலாப் பார்வையை வைத்துக் கொண்டாலும் அதற்காக இலங்கை மேற்கொண்ட முயற்சி இந்திய அணியின் முயற்சிகளை விட சிறப்பாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

ரோஹித் சர்மா மட்டுமே  41 பந்துகளில் 79 ரன்கள் விளாச மற்றையோர் சேர்ந்து 93 ரன்கள். கடைசி 4 ஓவர்களில் இந்தியாவால் 38 ரன்களையே அடிக்க முடிந்தது.
நாம் புதிர் பவுலர்களை அஜந்தா மெண்டிஸ் காலம் தொட்டே பார்த்திருக்கிறோம், இவரிடம் இந்தியா ஒருமுறை மடிந்தது, அடுத்த முறை எம்.எஸ்.தோனி திட்டம் போட்டு மெண்டிஸை காலி செய்தார்.  ஒன்றுமேயில்லை, அவர்  பந்து வந்தவுடன் ஆடுங்கள், முன்னால் இறங்கி வந்து கண்டபடி ஆட வேண்டாம் என்று அணியினருக்கு அறிவுறுத்தினார், அவ்வளவுதான், அதோடு அஜந்தா மெண்டிஸ் கதை முடிந்தது.

அதே போல் தீக்சனா போன்ற புதிர் பவுலர், இவர் ஏறக்குறைய அஜந்தா மெண்டிஸ் போல்தான். இறங்கி வந்து ஆடக்கூடாது என்பதை ராகுலுக்கு யாராவது சொல்லியிருக்கலாமே, தனக்கு மெசேஜ் அனுப்பியதைக் குறிப்பிட்ட, தோனியுடன் ஆடிய, விராட் கோலியாவது ராகுலுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாமே. ராகுல் திராவிட் சொல்லியிருக்கலாம், ராகுல் அருமையான தீக்சனா பந்துக்கு எல்.பி.ஆனார். பின்னால் நின்று ஆடியிருந்தால் இந்தப் பந்து ஒன்றுமேயில்லை. ஸ்லோ பிட்ச் பவர் ப்ளே மிக முக்கியம் என்று புரியவில்லை.

விராட் கோலியை பற்றி நாம் சொல்ல என்ன இருக்கிறது, பெரிய ரசிகர் பட்டாளம் அவர் எதுசெய்தாலும் நன்மைக்கே என்று நம்பும்போது நாம் சொல்ல ஒன்றுமில்லை. மோசமான வராக்கு ஷாட்டில் மதுசங்காவிடம் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார்.. கேட்டால்  ‘நான் நேர்மையாக ஆடுபவன்’ என்பார்.
ரோஹித் சர்மாவும் எந்தப் பிட்சிலும் எப்படியும் ஆடும் சூரியகுமார் யாதவும் ஸ்கோரை 109/2 என்று கொண்டு சென்ற போது டாஸ் என்பதெல்லாம் ஒன்றுமில்லை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்த போதுதான் இலங்கை அணியினர் அட்டகாசமாக ஸ்லோ பிட்சை பயன்படுத்தினர்.

அப்போதுதான் கருணரத்னே ஸ்லோ பவுன்சர் வீசி ரோஹித்தைக் காலி செய்தார், இது பெரிய திருப்பு முனை.  பிட்சின் மந்தத் தன்மையை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்றால் நடுப்பிட்சில் ஷார்ட் ஆகக் குத்தி மிக மெதுவாக பேட்டரை சென்றடையுமாறும் பேட்டருக்கு அடிக்க இடம் எதுவும் கொடுக்காமலும் அட்டகாசமாக வீசினர், இதை இந்திய அணி செய்யவில்லை என்பதுதான் தோல்விக்குக் காரணம். ஷனகா ஒரு மந்த ஷார்ட் பிட்ச் பாலை வீச சூரியா ஷார்ட் தேர்ட்மேனில் கேட்ச் ஆனார். ஷனகா மீண்டும் ஹர்திக் பாண்டியாவையும் வீழ்த்தினார், இதுவும் பெரிய பந்து அல்ல, ஆனால் பிட்சிம் ஸ்லோ தன்மையால் ஷாட் சரியாக சிக்காமல் பீல்டர் கையில் கேட்ச் ஆனது.

ரிஷப் பண்ட் 5 பந்தில் 12 என்று ஆக்ரோஷமாகத் தொடங்கினார், ஆனால் இவரையும் இலங்கை பிறகு திணறடித்து ஸ்லோ ஷார்ட் பால் போட்டு எடுத்து விட்டனர். கடைசியில் அஸ்வின் அட்டகாசமாக ஆடி 7 பந்தில் 15 ரன்கள் எடுத்த போது இந்திய அணி ஸ்கோர் 173/8 என்று ஓரளவுக்கு ஃபைட்டிங் டோட்டலாக அமைந்தது.  ஒரு நல்ல மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் ஹர்திக் பாண்டியாவை பிடித்து சாத்தி விட்டனர் நிசாங்காவும் குசல் மெண்டிசும். அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை அட்டகாசமாக வீசினாலும் தொடக்கத்தில் சாத்துப்படி விழுந்தது. 11 ஓவர்களில் 97/0 எனும்போது இந்திய அணிக்கு வாய்ப்பில்லை என்றுதான் ஆனது. ஆனால் செஹல் 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்த அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்த 110/4 என்று 14.1 ஓவரில் ஆனபோது இலங்கை தோல்வி அடையும் என்று ஆவல் பிறந்தது. ஆனால் பனுகா ராஜபக்ச இறங்கி செஹலையும் அஸ்வினையும் சிக்சர்கள் விளாசினார்.

ஷனகா அருமையாக ஆடினார், காரணம் பாண்டியா,  புவனேஷ்வர் குமார் திட்டமிடாத பந்துவீச்சுதான். நடுப்பிட்சில் குத்தி ஸ்லோ பவுன்சர் ஆட இடம் கொடுக்காமல் வீசி இலங்கை அணி இந்திய அணிக்கு முதலில் பவுலிங் செய்து பாடம் எடுத்ததை புரிந்து கொள்ளாமல் இந்தியா பவுலிங் செய்தது என்பதால்தான் தோற்றது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் அட்டகாசமாக 4 யார்க்கர்களை வீசினார், கடைசியில் மட்டையில் ஆடி ஜெயிக்காமல் பை ரன்கள் ஓடிதான் இலங்கை வெற்றி பெற்றது. பாடம் என்னவெனில் இலங்கை அணி கண்டிஷனை அபாரமாகப் பயன்படுத்தினர், இந்திய அணி அதில் சோடை போனது.
Published by:Murugesh M
First published:

Tags: Asia cup, Cricket, India v Srilanka

அடுத்த செய்தி