முகப்பு /செய்தி /விளையாட்டு / சொதப்பலான வெற்றி: பேட்டிங்கில் ராகுல் மந்தம்- ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மோசம்

சொதப்பலான வெற்றி: பேட்டிங்கில் ராகுல் மந்தம்- ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மோசம்

ஆசியா கோப்பை

ஆசியா கோப்பை

இந்தியாவுக்கும் ஹாங்காங் அணிக்கும் இடையிலான ஆசியக் கோப்பை 2022 டி20 போட்டியில் நேற்று ஹாங்காங் அணியை இந்தியா 40 ரன்களில் வீழ்த்தினாலும் இந்திய அணி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இன்னும் உள்ளன என்பதை எடுத்துக் காட்டியது.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கும் ஹாங்காங் அணிக்கும் இடையிலான ஆசியக் கோப்பை 2022 டி20 போட்டியில் நேற்று ஹாங்காங் அணியை இந்தியா 40 ரன்களில் வீழ்த்தினாலும் இந்திய அணி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இன்னும் உள்ளன என்பதை எடுத்துக் காட்டியது.

சூரியகுமார் யாதவ் மட்டுமே ஹாங்காங் பவுலிங்கிற்கு என்ன ‘மரியாதை’ கொடுக்க வேண்டுமோ கொடுத்தார், விராட் கோலி ஸ்டெடியாக ஆடினாரே தவிர ஆதிக்கமான இன்னிங்ஸ் என்று சொல்ல முடியாது, கே.எல்.ராகுல் இருவரும் வெள்ள சொக்கா, நீலச்சொக்கா குழப்பத்தில் ஆடியது போல் தெரிந்தது.

ஹாங்காங் அணி இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்த போது பிட்ச் மந்தமாக இருந்ததோடு நம் ஓப்பனர்களும் மந்தமாக இருந்ததால் ரன்களை விரைவு கதியில் எடுக்க முடியவில்லை.

முதல் 2 ஓவர்களில் ஓவருக்கு 6 ரன்கள் வீதத்தில் தான் வந்தது. கடைசியில் ரோஹித் சர்மா பொறுத்தது போதும் என்று ஹாங்காங் வேகப்பந்து வீச்சாளர் ஹாருன் பந்தை எகிறி வந்து சிக்ஸ் விளாசினார், பிறகு அதே ஓவரில் ஃப்ரீ ஹிட் ஒன்றை ராகுல் டீப் மிட்விக்கெட்டில் பார்வையாளர்கள் வரிசையில் பல வரிசைகடந்து செலுத்தினார், அதே ஓவரில் ரோஹித் ஒரு பவுண்டரி அடிக்க ஒரே ஓவரில் 22 ரன்கள் வந்தன. ஆயுஷ் சுக்லா ஓப்பனர்களை உடைத்தார். ரோஹித் சர்மா அசிங்கமாக அவுட் ஆனார். ஆனால் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்.

அதன் பிறகு ராகுல் திணறினார், கோலியும் பீல்டர் கைகளில் பந்தை அடித்துக் கொண்டிருந்தார். ராகுல் 25 பந்துகளில் 21 என்று எடுத்திருந்தார். டெஸ்ட் மேட்சில் கூட கொஞ்சம் வேகமாக ஆடுவார் போல். கோலியும் 14 பந்துகளில் 12 ரன்களே எடுத்திருந்தார். இருவரும் 22 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி அடிக்க முடியாமல் திணறினர். இதனால் இந்தியா 10 ஓவர்களில் 70/1 என்ற ஸ்கோரில்தான் இருந்தது.

இதையும் படிங்க: விராட் கோலி சூர்ய குமார் யாதவ் அரைசதம் , ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி

ஹாங்காங் போன்ற கத்துக் குட்டி அணியாக இல்லாமல் இருந்திருந்தால் இந்திய அணி 70/3 விக்கெட்டுகளை இழந்திருக்கும், அதே போல் 20 ஓவர் முடிவில் அன்று பாகிஸ்தானுக்கு எதிராக வந்த ஸ்கொரான 147 என்பதற்கு அருகில் தான் வந்திருக்கும். இது ஹாங்காங், அதனால் கோலி வெளுத்துக் கட்டினார். ராகுல் கடைசி வரையில் டச்சுக்கு வராமல்  39 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஸ்வீப் ஷாட் ஆடப்போய் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரின் ரிஃப்ளெக்ஸ் கேட்சுக்கு வெளியேறினார்.

சூரியகுமார் யாதவ் இறங்கிய முதல் பந்து முதல் பவுண்டரிகளாக விளாசித்தள்ளினார். இவரும் கோலியும் 42 பந்துகளில் 98 ரன்களைச் சேர்த்தாலும் அதில் சூரியகுமாரின் பங்கு  6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 68 ரன்களாகும். சூரியகுமார் யாதவ் ஆடியதுதான் சரியான அணுகுமுறை. ஆனால் அவரிடம் ஏகப்பட்ட ஸ்ட்ரோக்குகள் இருந்தன.  நம் கிங் கோலி ஸ்ட்ரோக்குகள் வற்றிய கிங் ஆகவே இருந்தார். இந்த இன்னிங்ஸை வைத்து ஆஹா விராட் கோலி பார்முக்கு வந்துவிட்டார் என்று ஊடகங்கள் தண்டோரா போட்டால் அதை கோலி நம்பினால் நிச்சயம் அவருக்குக் கஷ்டம்தான்.

அதே போல் பவுலிங்கில் ஆவேஷ் கான் 4 ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.  கத்துக்குட்டி அணிகளிடம் மட்டுமே ஆடிவரும் கத்துக் குட்டி அணியான ஹாங்காங் பேட்டர்களுக்கே இவரால் போட முடியவில்லை. அதே போல் அர்ஷ்தீப் சிங், இவர் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்தார். பாபர் ஹயாத் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் என்றும் கின்சித் ஷா 30 ரன்களையும் ஜீஷன் அலி 17 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 26 ரன்களையும் கடைசியில் ஸ்காட் மெகெக்னி இறங்கி 8 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 16 ரன்கள் விளாச இவர்கள் அனைவருமே அர்ஷ்தீப் சிங், குறிப்பாக ஆவேஷ் கானை வெளுத்து வாங்கினர்.

டாப் 3 பேட்டிங்கும், முன்னணி பவுலர்கள் இல்லாத நிலையிலும் ஷமி போன்ற பவுலர்களை ஓரங்கட்டுவதினாலும் பயன் இருக்கப் போவதில்லை என்பதை ராகுல் திராவிட், ரோஹித் சர்மா உணர வேண்டும், திருப்தியற்ற வெற்றி இது. சூரியகுமார் யாதவ் என்ற தனிநபர் பிரில்லியன்ஸைத் தவிர இந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா உரிமை கொண்டாட முடியாது என்பதே உண்மை.

First published:

Tags: Asia cup cricket, Cricket, Team India