Home /News /sports /

ரோஹித் சர்மா செய்த இமாலயத் தவறுகள், அர்ஷ்தீப் சிங் விட்ட கேட்ச், கோலியின் கடைசி ’டாட்’பால்கள்- இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இவைதான்

ரோஹித் சர்மா செய்த இமாலயத் தவறுகள், அர்ஷ்தீப் சிங் விட்ட கேட்ச், கோலியின் கடைசி ’டாட்’பால்கள்- இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இவைதான்

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பல கேள்விகளை எழுப்பியது, அப்பட்டமான தவறுகளும் கண்கூடு.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நேற்று துபாயில் நள்ளிரவு வரை நீடித்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி வழக்கம் போல் த்ரில்லராக அமைந்தது, ஆனால் இம்முறை பாகிஸ்தான் பதற்றங்களையும் மீறி அனுபவமற்ற அர்ஷ்தீப் பந்து வீச்சில் கடைசி பந்து மீதமிருக்க வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பல கேள்விகளை எழுப்பியது, அப்பட்டமான தவறுகளும் கண்கூடு.

ரோஹித் சர்மா கேப்டன்சியில் ஏகப்பட்ட தவறுகளைச் செய்தார், ஹர்திக் பாண்டியாவுக்குப் பதில் ரிஷப் பண்ட்டை முன்னால் இறக்கியது, தீபக் ஹூடாவுக்கு ஒரு ஓவர் கொடுத்துப் பார்க்காமல் விட்டது, கடைசியில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வீசச் செய்து 6 வைடுகளை கொடுக்கச் செய்தது. ஸ்லோ ஓவர் ரேட்டினால் கடைசியில் 5 பீல்டர்களை சர்க்கிளுக்குள் கொண்டு வருமாறு சொதப்பியது என்று கூறலாம். அனைத்திற்கும் மேலாக அர்ஷ்தீப் சிங் கடைசியில் குழந்தைகளே எளிதாகப் பிடிக்கும் கேட்சை தவற விட்டது இந்திய தோல்விக்குக் காரணங்களாக அமைந்து விட்டது.

டாஸ் வெல்லும் அணி வெல்கிறது என்பது யுஏஇயின் ஒரு டெம்ப்ளேட் ஆகி விட்டது, அதனால் பாபர் அசாம் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதை உணர்ந்து இந்திய அணியும் ஆக்ரோஷமாகத் தொடங்கியது, ரோஹித் சர்மா நசீம் ஷாவை மிட் ஆஃப் மேல் பவுண்டரியும் பிறகு பின்னால் சென்று மிட்விக்கெட்டில் சிக்சரும் விளாசி ஆக்ரோஷம் காட்ட ராகுல் நசீமின் 3வது ஓவரில் 2 பிரமிப்பூட்டும் சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் 4.2 ஓவர்களில் 50 என்ற எழுச்சித் தொடக்கம் கண்டது இந்திய அணி, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இது இரண்டாவது அதிவேக பவர் ப்ளே அதிக ஸ்கோர் ஆகும். ஆனால் 62 ரன்களில் ரோஹித், ராகுல் இருவரும் பெவிலியன் திரும்ப விராட் கோலி, சூரியகுமார் சேர்ந்தனர்.

இதில் சூரியகுமார் சோபிக்கவில்லை, முதல் பந்திலேயே பவுண்டரி அடிப்பதை வழக்கமாக அவர் கொண்டிருந்தாலும், நேற்று பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் இந்திய ஸ்பின்னர்களை விட சிறப்பாக வீசி கட்டுப்படுத்த சூரியா கையில் கேட்ச் கொடுத்து விட்டுச் சென்றார். சூரியகுமார் அவுட் ஆனவுடன் பார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவை இறக்கியிருக்க வேண்டும், இது தொடர்பாக ரோஹித் சர்மாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே வாக்குவாதம் போல் நிகழ்ந்ததை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.

ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் ஆடுகிறார் என்றால் அவருக்கு ஹாங்காங் போட்டியில் ஆட வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும், அல்லது முதல் பாகிஸ்தான் போட்டியிலேயே ஆட வைத்திருக்க வேண்டும்.  அல்லது இந்தப் போட்டியிலும் அவரை சேர்த்திருக்கக் கூடாது. ஏனெனில் டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் திணறுகிறார். பாவம் தினேஷ் கார்த்திக்! உண்மையில் ஆடாமலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஒருவேளை அவர் இருந்து பினிஷ் செய்திருந்தால் ஸ்கோர் 195-197 ரன்கள் என்றால் பாகிஸ்தான் தோற்றிருக்கும்.

அதே போல் 4.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து விட்டு கடைசியில் பாகிஸ்தான் பீல்டர் பகர் ஜமான் விட்ட இரண்டு பவுண்டரிகளால் ஸ்கோர் 181 வந்தது என்பது கொஞ்சம் இந்திய பேட்டிங் உத்தியை விமர்சனத்துக்குட்படுத்த வேண்டியதாகிறது. விராட் கோலி நன்றாக ஆடினார், ஆனால் அவர் பிக் ஹிட்டரெல்லாம் கிடையாது. அவர் ரன்களை சேகரிப்பவர். அவர் பின்னால் ஸ்லோ ஆகிவிட்டார் என்பதை விட பாகிஸ்தான் பவுலர்கள் அவரை கட்டுப்படுத்தி விட்டனர் என்றுதான் கூற வேண்டும். அந்த இடத்தில் தீபக் ஹூடாவுக்குப் பதில் தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் என்ற கேள்வி எழாமல் இல்லை.

விராட் கோலியை பார்முக்கு வரவைப்பதில்தான் ஒட்டுமொத்த இந்திய அணி ஊடகங்கள் கவனமாக இருக்கிறதே தவிர போட்டியை வெல்வதில் அல்ல என்பது கண்கூடு. ஏனெனில் கோலி நேற்று இறங்கி வந்து ஆடிக்கொண்டிருந்தவர், அரைசதம் நெருங்கும் போது சிங்கிளாக எடுக்க நினைத்து பீல்டர்கள் கையில் அடித்துக் கொண்டிருந்தார். இன்னொன்று கடைசி ஓவரில் 4 பந்துகள் டாட் பால் என்பது மிகப்பெரிய தவறு. மேலும் டெஸ்ட் போட்டிகளில் எதிர்முனையில் டெய்ல் எண்டர்கள் இருந்தால் பாதுகாக்கவும் விக்கெட்டை தடுக்கவும் ஸ்ட்ரைக்கைத் தக்க வைத்து கொள்ளலாம், ஆனால் டி20-யில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம், ஆனால் புவனேஷ்வர் குமாருக்கு ஸ்ட்ரைக்கை மறுத்தார் கோலி, இவரால் அடிக்க முடியவில்லை, ஏன் புவனேஷ்வர் குமார் பவுண்டரி அடிக்க மாட்டாரா? அதை எப்படி கோலி முன் தவிர்க்க முடியும்? கடைசியில் பிஷ்னாய்தானே 2 பவுண்டரிகளை அடித்தார்.

இடைப்பட்ட ஓவர்களில் விராட் கோலி பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் பந்தில்  அதிவிரைவில் ரன் குவிக்கத் தவறியதும் தன் அரைசதத்துக்காக ஸ்லோ ஆனதும் கடைசி ஓவரில் பந்தை அடிக்க முடியாமல் 4 டாட்பால்களை கொடுத்ததும் இந்தியத்தோல்வியில் பிரதானப் பங்கு வகித்தது என்பதே உண்மை.  அதே போல் பவுலிங்கில் ஒரு சீனியர் பவுலர் இல்லாதது பெரிய குறை. சிராஜோ, ஷமியோ யாரையாவது வைத்திருக்க வேண்டும். அல்லது தீபக் சாஹரையாவது கொண்டு வந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.

மேலும் முகமது ரிஸ்வானிடம் ஒரே ஸ்ட்ரோக்குத்தான் உள்ளது, அந்த ஸ்கொயர்லெக், மிட்விக்கெட்டில் வராக்கு போடுவது, அவருக்கு இந்திய பவுலர்கள் தொடர்ந்து போட்டுக்கொடுத்தனர் என்பதே உண்மை. ஒரே ஸ்ட்ரோக்கை வைத்துக் கொண்டு அவர் வெளுத்துக் கட்டி விட்டார், யஜுவேந்திர செஹலுக்குப் பதில் அஸ்வினையே வைத்திருக்கலாம். ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சும் சோடை போனது. அனைத்துக்கும் மேலாக கடைசியில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடு வீசும் உத்தியைக் கடைப்பிடித்தது ரோஹித் சர்மா உத்தியின் மிகப்பெரிய தவறு. ஹர்திக் பாண்டியாவின் பலம் ஷார்ட் பிட்ச் பந்து அதை விடுத்து அவரைப்போய் வைடாக வீசச்சொல்லி கடைசியில் 6 வைடுகளை இந்திய பவுலர்கள் வீசினர். 6 வைடுகள் என்றால் ஒரு ஓவரை கூடுதலாக வீசியுள்ளனர், ஆகவே பாகிஸ்தான் 20 ஓவர்களில் அல்ல 21 ஓவர்களில் இந்த இலக்கை எட்ட வழிவகையானது.

இதையும் படிங்க: Asia Cup: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி

புவனேஷ்வர் குமார் தன் 3வது ஓவரை சிறப்பாக வீசி முகமது நவாஸை முக்கியக் கட்டத்தில் வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்தினார். ஆனால் அவரே தன் கடைசி ஓவரில் ரோஹித் சர்மாவின் வைடு டெலிவரி உத்திக்கு இரையானார். அவரது பலம் ஸ்லோ பந்துகள், யார்க்கர்கள். அதை விடுத்து வைடு உத்தியில் சிக்கி வைடுகளை வீசினார். இதனால் அந்த ஓவரில் 19 ரன்களை வாரி வழங்க போட்டி பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தது. அர்ஷ்தீப் சிங் பவுலிங் நன்றாக இருந்தாலும் சுலபமான கேட்சை விட்டதும் ஒரு பெரிய தவறாகிப் போனது.

ஒரு நல்ல முதிர்ச்சியான வேகப்பந்து வீச்சாளர் இல்லாததே இந்தியத் தோல்விக்குப் பிரதான காரணம், விராட் கோலியை பார்முக்கு வரவைக்கும் ’அதிமுக்கிய’ கவனங்களை விட அவரை மிடில் ஓவரில் ரன்களை விரைவாகக் குவிக்கச் செய்வதும் அவசியம். நுணுக்கமாக நோக்கினால் கோலியால்தான் இந்த ஸ்கோராவது வந்தது என்று கூற முடியும், ஆனால் அவர் கடைசி ஓவர் வரை நின்றதும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது என்றும் கூற முடியும், தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் என்ற அங்கலாய்ப்பை தவிர்க்க முடியவில்லை.
Published by:Murugesh M
First published:

Tags: Asia cup, Cricket, India vs Pakistan

அடுத்த செய்தி