Home /News /sports /

நஜிபுல்லா சத்ரான் சிக்சர் மழை; வங்கதேசத்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான் - சூப்பர்-4க்குத் தகுதி

நஜிபுல்லா சத்ரான் சிக்சர் மழை; வங்கதேசத்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான் - சூப்பர்-4க்குத் தகுதி

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

Asia Cup 2022 : ஆப்கான் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற, வங்கதேசம்-இலங்கை போட்டி வாழ்வா சாவா போட்டியாகி விட்டது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Inter, IndiaDubai
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி ஆசியக் கோப்பை 2022-ன் சூப்பர் 4 சுற்றுக்கு முதலில் தகுதி பெற்ற அணியானது.

வங்கதேச கேப்டன் ஷாகிப் உல் ஹசன் இங்கு ஐபிஎல் ஆடியிருக்கிறார், இந்த கண்டிஷன் நன்றாகத் தெரியும் இருந்தாலும் டாஸ் வென்று ஏதோ 300 அடித்துவிடுவது போல் முதலில் பேட்டிங் தேர்வு செய்து செமத்தியாகச் சிக்கினார்.  ஆப்கான் ஸ்பின்னர்கள் முடக்க 20 ஓவர்களில் 127/7 என்று முடிந்தனர்,பின்னர் இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் 18.3 ஓவர்களில் 131/3 என்று அபார வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நாகின் டான்ஸ் அணியை பெட்டிப்பாம்பாக்க, பேட்டிங்கில் இப்ராஹிம் சத்ரான் (42), நஜிபுல்லா சத்ரான் (17 பந்து, 43 ரன் 1 பவுண்டரி 6 சிக்சர்கள்) இலக்கை ஒன்றுமில்லாமல் ஊதினர்.  இலக்கை விரட்டும் போது ஆப்கானிஸ்தான் 10 ஒவர்களில் 48/2 என்று திணறினர், பிறகு 33 பந்துகளில் 63 தேவைப்பட்டது. அப்போதுதான் நஜிபுல்லா சத்ரான், சிக்சர் மழை பொழிய இரண்டு சத்ரான்களும் 33 பந்துகளில் 69 ரன்கள் விளாசினர்.

வங்கதேச டாப் ஆர்டரைக் காலி செய்த முஜிபுர்:

டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணியை முஜிபுர் ரஹ்மான் படுத்தி எடுத்தார், தன் முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிர்ச்சியளித்தார். முதலில் கேரம் பந்து மூலம் முகமது நயீமின் ஸ்டம்பைப் பெயர்த்தார். அனாமுல் ஹக் ஸ்வீப்பா, புல்லா என்று தெரியாத ஒரு ஷாட்டில் முஜிபுரிடம் எல்.பி.ஆனார். கேப்டன் ஷாகிப் உல் ஹசன் இறங்கி அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசி நான் இருக்கேன்னு சொல்லு என்று ஆடினார், ஆனால் இவரும் முஜிபுரின் கேரம் பந்துக்கு ஸ்டம்பை இழந்தார்.

இது கிட்டத்தட்ட லெக் ஸ்பின் போல் வந்தது, ஒதுங்கிக் கொண்டு பொறுப்பட்ட முறையில் சவட்ட நினைத்து பவுல்டு ஆனார் ஷாகிப் அல் ஹசன்.  முஷ்பிகுர் ரஹிம் இந்தக் களேபரத்தில் டி20-யில் மிகச்சிறந்த ஸ்பின்னரான ரஷீத் கானை எதிர்கொள்ளும் கடினத்தில் சிக்கினார். ரஷீத் வந்தார் 2வது பந்தில் கூக்ளியில் முஷ்பிகுர் எல்.பி.ஆனார். அபீப் ஹுசைன், மஹமுதுல்லா அதன் பிறகு 25 ரன்கள் கூட்டணி அமைத்தனர், ஆனால் இதையும் உடைத்தார் ரஷீத் கான். அஃபீப் கூக்ளியில் எல்.பி.ஆனார்.

மஹமுதுல்லா ஸ்லாக் ஸ்வீப் ஆடுகிறேன் என்று ரஷீத்தின் 3வது விக்கெட் ஆனார்.   53/5 என்ற நிலையில் இறங்கிய வங்கதேச ஆல்ரவுண்டர் மொசாடெக் ஹுசைன் 31 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்தார், மெஹதி ஹசன் 14 ரன்களை எடுக்க வங்கதேசம் ஒருவழியாக 127/7 என்ற ஸ்கோரை எட்டியது. வங்கதேசத்தில் குழிப்பிட்சைப் போட்டு இத்தகைய சிறிய இலக்குகளை வென்ற வங்கதேச அணிக்கு ஷார்ஜாவில் பாச்சா பலிக்கவில்லை.

Also Read : ஷாஹின் அப்ரிடி மட்டும் ஐபிஎல் ஆடினா அவருக்கு ரூ.15 கோடி நிச்சயம் - அஸ்வின்

 அடித்து தூள் பரத்திய ஆப்கான்: 

ஆப்கான் அன்று இலங்கையை சாத்தியது போல் சாத்தலாம் என்றுதான் இறங்கியது குர்பாஸ், சசாய் ஜோடி, ஆனால் ஷார்ஜா பிட்ச் இடம்கொடுக்கவில்லை. ஆனால் முஸ்தபிசுர் ரஹ்மானை தலைக்கு மேல் தூக்கி ஒரு பவுண்டரி அடித்தார் குர்பாஸ். பிறகு மகமதுல்லா எளிதான கேட்சை குர்பாஸுக்கு விட, சரி இன்னிக்கு படையல்தான் என்று நினைக்கும் போது ஷாகிப் பந்தை தேவையில்லாமல் குருட்டுத் தனமாக இறங்கி வந்து ஸ்டம்ப்டு ஆனார்.

ஹஸ்ரத்துல்லா சசாய் 2 பவுண்டரிகளை விளாசினார், ஆனால் அவரால் இஷ்டத்துக்கு அடிக்க முடியவில்லை 23 ரன்கள் எடுத்து மொசாடெக்கிடம் எல்பி ஆனார். கேப்டன் முகமது நபி 9 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து சைஃபுதினிடம் எல்.பி.ஆனார். கடைசி 6 ஓவர்களில் 63 தேவைப்பட நஜிபுல்லா சத்ரான் சிக்சர்களை விளாசித்தள்ளினார். முதலில் இப்ராஹிம் சத்ரான், டஸ்கின் அகமட் ஓவரில் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசி தொடங்கி வைத்தார்.

Also Read:  பண்ட், பாண்டியா, ஜடேஜா மிகமிக அபாயக் கூட்டணி - இன்சமாம் உல் ஹக்

மெஹதி ஹசன், முஸ்தபிசுர் இருவரையும் 3 சிக்சர் விளாசினார் நஜிபுல்லா சத்ரான். 18 பந்தில் 26 தேவை என்று ஆனது. ஆனால்18வது ஓவரில் இப்ராஹிம் சத்ரான் முதலில் சயிஃபுதீனை பவுண்டரி விளாச பிறகு அதே ஓவரில் நஜிப்புல்லா 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாச 22 ரன்கள் அந்த ஓவரில் வந்தது. 10 பந்துகளில் 3 ரன் தேவை எனும்போது மொசாடெக் ஹுசைனை நேராக சிக்சர் விளாசி நஜிபுல்லா மேட்சை முடித்து வைத்தார். ஆட்ட நாயகன் முஜிபுர் ரஹ்மான்.  இப்போது ஆப்கான் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற, வங்கதேசம்-இலங்கை போட்டி வாழ்வா சாவா போட்டியாகி விட்டது.
Published by:Ramprasath H
First published:

Tags: Asia cup, Asia cup cricket, Bangladesh and Afghanistan

அடுத்த செய்தி