ரிஷப் பந்த் தவறு செய்தால் தோனி, தோனி என்று கோஷமிட்டார்கள்: வீரர்கள் பற்றிய பார்வை மாற வேண்டும்- அஸ்வின் விருப்பம்

அஸ்வின்

2 மாதங்களுக்க்கு முன்னதாக கேமரூம் கிரீன் என்ற ஆஸ்திரேலிய வீரரைப் பற்றி அவர் அறிமுகமாகும் முன்பே ஏகப்பட்ட பில்ட் அப், அதாவது அடுத்த மிகப்பெரிய விஷயம் அவர்தான் என்று பில்ட் அப் கொடுத்தனர்.

 • Share this:
  பிறந்து வளர்ந்த மண்ணான சென்னையில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ’ஹீரோ’வாக வலம் வரும் அஸ்வின், பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பற்றிய எண்ணங்களை ரசிகர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

  ஆஸ்திரேலியாவில் ஹீரோவாக இருந்த ரிஷப் பந்த் இதற்கு முன்பு இந்தியாவில் ஆடிய போது விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினால் உடனே ரசிகர்கள் தோனி தோனி என்று கத்தி ரிஷப் பந்த்தை மட்டம் தட்டினார்கள். தோனியின் ஆரம்ப கால கீப்பிங்கை இவர்கள் பார்த்ததில்லை. அது ரிஷப் பந்த்தை விடவும் சுமாராகத்தான் இருந்தது.

  அதே போல்தான் ரிஷப் பந்த்தும் போகப்போக பெரிய கீப்பராக வாய்ப்பிருக்கிறது, அதற்குள் அவரை மட்டம்தட்டுவது, மீம் போடுவது, ட்ரால் செய்வது என்று ரசிகர்களின் மனம் குப்பையாகி வருகிறது.

  இது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்துக்குக் கூறியதாவது:

  2 மாதங்களுக்க்கு முன்னதாக கேமரூம் கிரீன் என்ற ஆஸ்திரேலிய வீரரைப் பற்றி அவர் அறிமுகமாகும் முன்பே ஏகப்பட்ட பில்ட் அப், அதாவது அடுத்த மிகப்பெரிய விஷயம் அவர்தான் என்று பில்ட் அப் கொடுத்தனர். ஆனால் அவர் நமக்கு எதிரான தொடரில் ஒரேயொரு அரைசதம் எடுத்ததாக மட்டுமே நினைவு.

  எவ்வளவு பில்ட் அப், அவருக்கு ஆஸ்திரேலியா கொடுத்த நம்பிக்கை இருக்கிறதே.. அசாத்தியம். இங்கும் கிரிக்கெட் வீரர்கள் பற்றிய கருத்துக்கள் மக்களிடையே மாற வேண்டும். குறிப்பாக ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களைப் பற்றிய பார்வை. கேமரூன் கிரீன் சம்பவம் எனக்குள் மிகப்பெரிய பார்வையை ஏற்படுத்தியது.

  ரிஷப் பந்த் பிரமாதமான ஒரு கிரிக்கெட் வீரர், அணிக்குள்ளும் வெளியிலும் இன்னும் பிரமாதமான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். இவர்கள் பிரமாதம் என்பதால்தான் இந்திய அணிக்கு ஆட முடிகிறது. ஆனால் நாட்டுக்காக ஆடும்போது அவர் மீது தவறு, குறை கண்டுப்பிடிப்பதே வாடிக்கையாக இருக்கிறது.

  ரிஷப் பந்த் எப்போதும் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராகத் திகழ்வார், எப்போதும் அவர் கீப்பிங் முன்னேற்றப்பாதையில் செல்லும். அதாவது அவர் வேகமாக முன்னேறும் வகையில் நாம் அவருக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆனால் எப்போதும் குறைகண்டு கொண்டிருந்தால் அவர்கள் முன்னேற்றமடைய நாட்கள் பல ஆகும். ஒரு சமூகமாக நாம் கிரிக்கெட் வீரரை ஊக்குவித்து அவர் முன்னேற நம்பிக்கை அளிக்க வேண்டும். நாம் நிறைய பாசிட்டிவ்களை பார்க்க முடியும் ஆனால் நாம் நெகெட்டிவ்களையே தேர்வு செய்கிறோம். பாசிட்டிவ்களைப் பார்க்கப் பார்க்க நிறைய சாம்பியன் கிரிக்கெட் வீரர்கள் வருவார்கள்.

  இவ்வாறு கூறினார் அஸ்வின்.
  Published by:Muthukumar
  First published: