சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் பயிற்சியின் போது ஜெயசூர்யா போன்று பந்துவீசிய வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய வீரர்களுக்கும், வங்கதேச அணி வீரர்களுக்கும் இது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்
பகலிரவு டெஸ்ட் போட்டியில் வீரர்கள் பிங்க் பந்தில் விளையாட உள்ளனர். இதனால் பிங்க் பந்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். பயிற்சியின் போது அஸ்வின் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆல்-ரவுண்டர் ஜெயசூர்யா போன்று பந்துவீசினார்.
ஜெயசூர்யா இடது கையில் பந்துவீசக் கூடியவர். வலதுகையில் பந்துவீசும் அஸ்வின் ஜெயசூர்யா போன்று பந்துவீசியது சற்று வியப்பாகவே இருந்தது. 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஜெயசூர்யா 98 விக்கெட்களையும், 445 ஒரு நாள் போட்டிகளில் 323 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணி மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கான முதல் 3 நாட்கள் டிக்கெட் முழுவதுமாக விற்று உள்ளது. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் போட்டியை காண மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.