ஆஷஸ் தொடரில் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியை மோசமாகத் தோற்றதோடு ஓவர்களை மெதுவாக வீசியதற்காக இங்கிலாந்தின் 11 வீரர்களும் 100% ஆட்டத்தொகையை அபராதத்தில் இழந்தனர், ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 5 புள்ளிகளையும் இழந்தனர். இந்நிலையில் 13 ஒவர்கள் வீசி 102 ரன்கள் வாரி வழங்கிய ஸ்பின்னர் ஜாக் லீச்சை ஜோ ரூட்டினால் தூக்க முடியாது அது ஏன் தெரியுமா?
வடிவேலு ஒரு படத்தில் நடந்து வந்து கொண்டிருப்பார், குப்பைத்தொட்டி அருகே ஒருவர் நின்று கொண்டு 2 விரல்ல ஏதாவது ஒண்ணத் தொடுங்கண்ணே என்பார், வடிவேலுவும் எதார்த்தமாக தொடுவார், என்னண்ணே இப்படி சிக்கிட்டீங்களே.. கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போற விரலைத் தொட்டுட்டீங்களே என்பார், அதுபோல் ஜாக் லீச் விரலைத் தொடச் சொன்னால் ஜோ ரூட் தொடுவதா? அந்த நிலையில்தான் சிக்கியுள்ளார் ஜோ ரூட்.
இங்கிலாந்து வீரர்களுக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் ஊதியம் 27,000 டாலர்கள், பிரிஸ்பன் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மொத்தமாக 3 லட்சம் டாலர்களை அபராதமாக இழந்தனர். இது மட்டுமல்ல அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு சீனியர் பவுலர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட் திரும்புகையில் ஜாக் லீச்சைத்தான் அணியை விட்டு தூக்க முடியும். ஆனால் அவரைத் தூக்கி விட்டு அவரது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் வந்தாரென்றால் குறித்த நேரத்தில் ஓவர்களை முடிக்க முடியாமல் மீண்டுமொருமுறை சிக்குவார் ஜோ ரூட்.
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஜாக் லீச் ஒழுங்காக வீசியிருந்தால் இன்னும் 5 ஓவர்களை அவருக்குக் கொடுத்திருந்தால் ஸ்லோ ஓவர் ரேட் பிரச்சனை வந்திருக்காது, ஆனால் அவர் பந்து போட வந்தாலே ஸ்டேடியத்துக்கு வெளியேதான் பீல்டர்களை நிறுத்த வேண்டும் போல் இருக்கிறது, அல்லது பெவிலியனில் வால் கேட்ச்தான் பிடிக்க வேண்டும் அப்படியிருக்கிறது இவரது பவுலிங்.
இந்நிலையில் நியூஸ் கார்ப்பரேஷனின் முன்னிலை நிருபர் ராபர்ட் கிரடாக் கூறும்போது, “அடிலெய்டில் அவர்கள் தேர்வு செய்யும் அணி சிறைக்குத்தான் அவர்களை கொண்டு செல்லும்” என்று தமாஷாக சொல்கிறார்.
ஆட்டத்தொகை முழுதையும் இழந்து, 5 புள்ளிகளையும் இழந்து இப்போது ஸ்பின்னரை அணியிலிருந்து நீக்கினால் அதுவும் பெரிய பிரச்சனையாக முடியும் இதுதான் சிறை என்கிறார் கிரடாக். இதனால் ஜாக் லீச்சைத்தான் மீண்டும் தேர்வு செய்யும் நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும் அப்படி இவரை தேர்வு செய்தால் போட்டியைத் தோற்பதோடு அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாக வேண்டிய நிலையில்தான் உள்ளது இங்கிலாந்து. சரி ஜாக் லீச் வேண்டாம் ஆஃப் ஸ்பின்னர் டாம் பெஸ் வைத்துக்கொள்ளலாம் என்றால் அவரைப் பெயரைக் கேட்டவுடனேயே ஆஸ்திரேலிய பேட்டர்கள் பேட்டுகளுக்கு எண்ணெய் தடவி வா ராஜா வா என்று பின்னி எடுக்க ரெடியாகின்றனர்.
இதையும் படிங்க: Ashes 2nd test| பென் ஸ்டோக்ஸ் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கிய ஜோ ரூட்- வீடியோ
ஒழுங்காக மொயின் அலியையே வைத்திருக்கலாம் ஒரு ஆல்ரவுண்டராக பயனளிப்பார். அடிலெய்டில் தோற்றால் அவ்வளவுதான் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்தினால் வெல்ல முடியாது 5-0 தான். என்ன செய்யப் போகிறார் ஜோ ரூட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.