ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்குகிறது. 1882 முதல் இந்தத் தொடர் விளையாடப்பட்டு வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொடர் பற்றிய முழு விவரங்களைப் பார்ப்போம்.
ஆஸ்திரேலிய அணி பாட் கமின்ஸ் தலைமையிலும், ஸ்டீவ் ஸ்மித்தின் துணைத்தலைமையிலும் களமிறங்குகிறது. இந்தியாவுக்கு எதிராக தொடரை 2-1 என்று இழந்தபிறகே இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா புத்துணர்வுடன் பங்கேற்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சம் என்றே இந்த தொடரை வர்ணிக்கலாம்.
நாளை முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் அதிசிறந்த உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆடவில்லை. இது இங்கிலாந்துக்கு பெரிய பின்னடைவுதான். ஸ்டூவர்ட் பிராடும் கேள்விக்குறிதான். கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் 9 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது என்பதே நிதர்சனம். இப்போது ரூட் தலைமையில் புத்துணர்வு பெற்ற இங்கிலாந்து அணி களமிறங்குகிறது, ஆனால் ரூட் தலைமையில் இந்தியாவுடன் கடந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 1-2 என்று இழந்த நிலையில்தான் இறங்குகிறது.
ஆஷஸ் தொடர் - ஆஸ்திரேலியா -இங்கிலாந்து நேருக்கு நேர்:
மொத்தம் இரு அணிகளும் 325 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 130 போட்டிகளிலும் இங்கிலாந்து 106 போட்டிகளிலும் வெல்ல, 89 டெஸ்ட் போட்டிகள் டிரா ஆகியுள்ளன.
ஆஸ்திரேலிய மண்ணில் இரு அணிகளும் 162 டெஸ்ட்களில் மோதியதில் ஆஸ்திரேலியா 82 போட்டிகளிலும் இங்கிலாந்து 56 போட்டிகளிலும் வெல்ல 24 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.
இங்கிலாந்து மண்ணில் மொத்தம் 163 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளது ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள். இதில் இங்கிலாந்து 50 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 48 போட்டிகளிலும் வென்றுள்ளது. 50 டெஸ்ட்கள் டிரா ஆகியுள்ளது.
மொத்தம் இதுவரை 69 ஆஷஸ் தொடர்கள் ஆடப்பட்டுள்ளன, இதில் ஆஸ்திரேலியா 32 தொடர்களையும் இங்கிலாந்து 32 தொடர்களையும் வென்றுள்ளன. 5 தொடர்கள் டிரா ஆகியுள்ளன.
ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஆஷஸ் தொடர்கள்: 34, இதில் ஆஸ்திரேலியா 18 தொடர்களையும் இங்கிலாந்து 14 தொடர்களையும் வென்றுள்ளன, 2 தொடர்கள் டிரா ஆகியுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் இரு அணிகளும் 35 தொடர்களில் மோதி அதில் ஆஸ்திரேலியா 14 தொடர்களிலும் இங்கிலாந்து 18 டொடர்கலிலும் வென்றுள்ளன. 3 தொடர்கள் டிரா ஆகியுள்ளன.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வி.கீ), பாட் கமின்ஸ்,மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
இங்கிலாந்து அணி: ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், ஜாஸ் பட்லர் (வி.கீ), கிறிஸ் வோக்ஸ், ஆலி ராபின்சன், மார்க் உட், பிராட் அல்லது ஜாக் லீச்.
பிட்ச் மற்றும் வானிலை:
பிரிஸ்பனில் கடந்த மாதம் கடும் மழை பெய்துள்ளது, முதல் 2 நாள் ஆட்டத்திலும் இடியுடன் கூடிய கனமழை வரும் என்று கூறப்பட்டுள்ளது. பிட்சில் இன்று வரை புற்கள் காணப்பட்டன, அதாவது வழக்கமான வேகப்பந்து வீச்சு சாதக பிரிஸ்பன் பிட்ச்.
பிரிஸ்பன் மைதானத்தில் இங்கிலாந்து கடைசியாக 1986-87 தொடரில் வென்றதோடு சரி. இந்தியா இங்கு வென்று காட்டியுள்ளது, எனவே இங்கிலாந்தும் வெல்லலாம். நேதன் லயன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுக்க இன்னும் ஒரு விக்கெட்டே தேவை.
ஸ்டீவ் ஸ்மித் அபரிமிதமான ரன்களை கடைசி 2 ஆஷஸ் தொடர்களில் குவித்துள்ளார் 14 இன்னிங்ஸ்களில் 1461 ரன்கள் சராசரி 121.75. 6 சதங்கள், இதில் 2 டபுள் செஞ்சுரிகள், 5 அரைசதங்கள்.
ஆட்டம் நாளை காலை இந்திய நேரம் 5:30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் தொலைக்காட்சியில் லைவ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ashes, Australia, England, Joe Root, Pat Cummins