ஆஷஸ் தொடர் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தனது 32வது வயதில் அறிமுகமாகி 2வது இன்னிங்சில் இங்கிலாந்தை 68 ரன்களுக்குச் சுருட்டிய ஸ்காட் போலண்ட் 4 ஓவர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரலாறு படைத்தார், இவர் ஒரு ஆஸ்திரேலிய ஆதி மண்ணின் மைந்தர்களான பூர்வக்குடியினத்தைச் சேர்ந்தவர்.
ஜேசன் கில்லஸ்பிக்குப் பிறகு ஆஸ்திரேலியா அபார்ஜினல் என்று அழைக்கப்படும் பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த போலண்ட் மண்ணின் மைந்தனாக மெல்போர்னில் டெஸ்ட் அறிமுகம் கண்டு அசத்தியுள்ளார். இவர் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்காக 2016-ல் அறிமுகமானார். அதுவும் இந்தியாவுக்கு எதிராகத்தான். ஆனால் அன்று பெர்த்தில் சரியாக இந்திய பேட்டர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு 10 ஒவர் 74 ரன்கள் என்று முடிந்தார்.
அதன் பிறகு டி20 அறிமுகப் போட்டியிலும் ஆடினார். ஆனால் டெஸ்ட்டில் இப்போதுதான் முதல் முறை.
பிரசித்தி பெற்ற பார்க்டேல் கிரிக்கெட் கிளப்புக்காக 6 வயதிலேயே யு-12 கிரிக்கெட் போட்டியில் ஆடியவர். அப்படியே வளர்ந்து விக்டோரியா பிரீமியர் கிரிக்கெட் கிளப்பில் 16 வயதில் இணைந்தார். இவர் ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடி இனமான குலித்யன் இனத்தைச் சேர்ந்தவர்.
எப்படி பாப் ஹாலண்ட் என்ற ஒரு லெக் ஸ்பின்னர் சிட்னி ஸ்பெஷலிஸ்டோ அதே போல் போலண்ட் மெல்போர்ன் ஸ்பெஷலிஸ்ட். மெல்போர்ன் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு ஒரு சுடுகாடுதான். ஆனால் போலண்டுக்கு மட்டும் இங்கு பந்துகள் பேசும். சமீபத்தில் கூட நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான கவுண்ட்டி ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் 3/33, 5/56 என்று விக்கெட்டுகளைக் குவித்தார். முதல் தர கிரிக்கெட்டில் 272 விக்கெட்டுகளை இதற்கு முன் எடுத்துள்ளார். பெரும்பாலான விக்கெட்டுகள் மெல்போர்னில்தான்.
இவரை கடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அடிலெய்டில் பாட் கமின்ஸ் இல்லாததால் அணிக்கு அழைத்தனர். விக்டோரியா ரசிகர்களால் இவர் பெரிதும் பாராட்டப்பட்டார், காரணம், ஷேன் வார்ன், மறைந்த டீன் ஜோன்ஸ், மற்றும் மெர்வ் ஹியூஸ் ஆகியோர் இந்த மண்ணிலிருந்துதான் ஆஸ்திரேலியாவுக்கு ஆடியுள்ளனர்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு இவரது வருகையின் மூலம் மேலும் பலம்பெற்றுள்ளது, ஏற்கெனவே மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கமின்ஸ், இப்போது ஜை ரிச்சர்ட்சன், கேமரூன் கிரீன், மைக்கேல் நேசர் என்று சேர்ந்து கொண்டே போகிறது.
இதையும் படிங்க: PKL 2021-22|புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை கவிழ்த்த மும்பையின் தமிழக வீரர்- ஆட்டம் டை
போலண்ட் டெஸ்ட் அறிமுகமானதை சக பூர்வக்குடி வீரர் ஜேசன் கில்லஸ்பி, ‘பூர்வக்குடி ஆஸ்திரேலியாவுக்கு இது பெருமைமிக்க நாள்’ என்று கொண்டாடுகிறார், போலண்டை இப்போது ஆஸ்திரேலியாவே கொண்டாடி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.